வறண்ட நிலங்கள்
வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன
குளங்களும் குட்டைகளும்
முழுவதுமாக வற்றத் தொடங்கியிருக்கின்றன
மரங்களின் இலைகள்
காய்ந்து உதிரத் தொடங்கியிருக்கின்றன
வீசும் காற்றும்
வெப்பத்தை ஏந்தத் தொடங்கியிருக்கிறது
நீர்நிலைகளைத் தேடி
பறந்துகொண்டிருக்கின்றன பறவைகள்
நீர்நிலைகளைத் தேடி
அலைந்து கொண்டிருக்கின்றன மிருகங்கள்
இத்தனைக்கும்
இன்னும் தொடங்கிடவில்லை கோடை
இத்தனைக்கும்
இன்னும் சுட்டெரிக்கவில்லை கத்தரி
ஆனபோதிலும்
அத்தனையும் அத்தனையும்
வியர்வைச்சுரப்பிகளை
வேகமெடுக்கச் செய்யப்போகும்
பெருங்கோடையை முன்னறிவிப்பது போல
வேகமாக அதிகரிக்கும் விலைவாசியேற்றமும்
வேகவேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் பணவீக்கமும்
ஒவ்வொரு நாடுகளின்
பொருளாதார நரம்புகளையும்
துண்டித்துப்போடும் மந்தநிலையும்
உலகத்தை வழிநடத்தப்போகும்
தலைமைப்பதவிக்காக
உருவாக்கப்படும் கொடூர யுத்தங்களும்
வங்கிகளிலிருந்து
கொடுக்கப்படும் கடன்களால்
பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து
கொடுக்கப்படும் கடன்களால் என
கடன்களால் மட்டுமே நிறைந்திருக்கும்
முதலாளிகளின் வயிறுகளும்
ஒவ்வொரு தேசத்திலும்
அதிகரித்துக் கொண்டிருக்கும்
வேலையிழந்தவர்களின் எண்ணிக்கையும்
திவாலனது வங்கி என்று
திடீரென வெளிப்படும் அறிவிப்புகளும்
எதை முன்னறிவிக்கின்றன
முதலாளிகளால் முதலாளிகளுக்காகவே
ஏற்படுத்தப்படும் வங்கிகள்
முதலாளிகளால்தானே திவாலாகின்றன
ஆனால்
ஒவ்வொரு வங்கியும் திவாலாகும்போது
அத்தனை அச்சங்களும்
அப்பாவி மக்களிடமல்லவா விதைக்கப்படுகின்றன
அத்தனை சுமைகளும்
அப்பாவி மக்களின்மீதல்லவா ஏற்றப்படுகின்றன
நீங்கள்
கண்டும் காணாமல் இருக்கலாம்
நீங்கள்
கேட்டும் கேட்காததுபோல் இருக்கலாம்
வறண்ட நிலங்கள்
பெருங்கோடையை முன்னறிவிப்பதுபோல
வங்கி திவாலென்பதும்
பெரும்மாற்றத்தின் முன்னறிவிப்புதான்
என்றாவது ஒருநாள்
எரிமலை வெடிக்கத்தான் செய்யும்
சுற்றிலும்
சாம்பல் மேடுகள்தான் எஞ்சியிருக்கும்
தாங்கமுடியாத பாரங்களே
ஒவ்வொரு மாற்றத்திற்கும்
இயக்குவிசையாய் இருந்திருக்கிறது
சகிக்கமுடியாத நெருக்கடிகளே
ஒவ்வொரு புரட்சிக்கும்
தொடக்கமாய் இருந்திருக்கிறது
கோடையில் மழையை எதிர்பார்க்கும்
சாதாரண மனிதனைப் போல
ஒவ்வொரு நெருக்கடிகளின் போதும்
எதிர்பார்த்து எழுதிக்கொண்டிருப்பதெல்லாம்
புரட்சியெனும் அந்தப் புதுமழையைத்தான்
புரட்சியெனும் அந்தச் சூறாவளியைத்தான்!
(முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும். – கார்ல் மார்க்ஸ்)
1 comment
“வறண்ட நிலமும் திவாலான வங்கியும்” கவிதை மூலம் ஆளும் அதிகாரவர்க்கத்தின் வர்க்க பாசத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
விறக்தியின் விளிம்பில் நின்று வாடிவிடாமல் நம்பிக்கையூட்டும் மாமேதை கார்ல் மார்க்ஸின் வைர வரிகளால் நம்பிக்கையூட்டும் கவிதையாக கார்ல் மார்க்ஸின் நினைவுநாளில் பதிவு செய்துள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அது மட்டுமே நமது கடமையாகுமா?.
அமைப்பாய்த் திரளலும் சுரண்டலுக்கெதிராகப் போராடலும் காலத்தின் அவசியம்.
உறுதியேற்போம் இந்நாளில்.