வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே
நீண்ட தூரம்
சுமந்து வந்திருந்த
பாரத்தை
இறக்கி வைத்த
முகத்தைப் பாருங்கள்
ஒரு பெருமூச்சு
ஒரு விடுதலை உணர்வு
ஒரு நிம்மதி என
அந்த முகம்
உள்ளும் புறமும்
ஒளிரத் தொடங்கும்
அவ்வளவு தான்
உடலின் பாரம்
கொஞ்ச நேரம்தான்
கொஞ்ச தூரம்தான்
ஆனால்
மனதின் பாரம்
அப்படியல்ல
அல்லும் பகலும்
அழுத்தக் கூடியது
இதயத்தின்
உள்ளும் புறமும்
உறுத்தக் கூடியது
இறக்கி வைக்கத் தெரியாமல்
இறக்கி வைக்க முடியாமல்
சதா எந்நேரமும்
பாரத்தைச் சுமந்துகொண்டே
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்
சுமக்கும் பாரத்தைப்பற்றி
எந்த அறிவுமில்லாமல்
தொடர்ந்து ஏற்றப்படும்
பாரத்தைப் பற்றி
எந்த எதிர்ப்பும் இல்லாமல்
பாரம் சுமக்கவே
பிறந்தது போல
சுமந்து
சுமந்து
பாரம் சுமந்தே
செத்துவிடத் துடிக்கிறார்கள்
சுமக்கும் பாரங்களுக்கு
காரணங்களைத் தேடாமல்
கடவுளைத் தேடி
அலையலையாய்
அலையலையாய்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
முடியைக்
காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்
குறையவில்லை பாரம்
விரதம்
இருந்து பார்க்கிறார்கள்
குறையவில்லை பாரம்
புனிதப்பயணங்கள்
சென்று திரும்புகிறார்கள்
குறையவில்லை பாரம்
வாழ்க்கை
பாரமாக இருக்கிறது
வாழ்க்கை
அப்படியே இருக்கிறது
சுரண்டுகிறவன்
வேறுவேறு வழிகளில்
சுரண்டிக் கொண்டே இருக்கிறான்
ஆள்கிறவன்
ஏதாவது செய்து
ஆண்டுகொண்டே இருக்கிறான்
எதுவும் மாறவில்லை
கோடிக்கணக்கான
மக்களின் கைகளில்
கடவுளையும்
சாதியையும்
தேசபக்தியையும் கொடுத்துவிட்டு
ஒட்டுமொத்த தேசத்தையும்
ஒருசில முதலாளிகள்
சுரண்டிச் சுரண்டிக்
கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்
யாருக்கும்
எதுவும் தெரியாமலில்லை
ஆனாலும் அமைதியாக
கடந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகளுக்குக்
கல்வி பாரமாக மாறிவிட்டது
பள்ளிப்பையை மட்டுமல்ல
வலியத் திணிக்கப்படும்
பாடங்களையும்
சுமக்க முடியாமல்
சுமந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்களுக்கோ
வீடும்
பணியிடமும்
பள்ளியும் கல்லூரியும்
பயணங்களும் என
எல்லாமுமே எல்லாமுமே
பாரமாக மாறியிருக்கிறது
இவ்வளவு தூரம்
கடந்தும் கூட
காதலர்களுக்கு
சாதி பாரமாக இருக்கிறது
தாங்க முடியவில்லை
என்று
கண்களில் நீர்நிறைய
சொல்லப்படும்
எண்ணிலடங்கா குரல்கள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன
ஒரு கேள்விதான்
ஒரே கேள்விதான்
நீங்கள் தயாராக இல்லையென்றால்
உங்கள் மீது
எப்படி ஏற்றப்படும்
பாரம்
பதில் சொல்லுங்கள்
இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னால்
அன்பின் குரலொன்று
இப்படியாக அழைத்தது
”வருத்தப்பட்டு
பாரம் சுமப்பவர்களே
எல்லோரும்
என்னிடத்தில் வாருங்கள்
நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருகிறேன்” என்று
அந்த
அன்பின் குரலுக்குப் பின்னால்
எழுந்து வந்தது
ஒர் அடிமையின் குரல்
இளைப்பாறுதல் அல்ல
புரட்சி செய்ய
சொல்லித் தருகிறேன்
வாருங்கள் என்றழைத்தது
வந்தார்கள் அடிமைகள்
எதிர்பார்க்கவே முடியாதபடி
எதிர்த்து நின்றார்கள்
சாம்ராஜ்ஜியத்தை
அடிமையின் பாரங்களை
இறக்கி வைத்துவிட்டு
சுதந்திரக் கனவுகளோடு
புரட்சி செய்தார்கள்
அவர்களைத்தான்
அடிமையெனும் சுமையை
விரும்பவே விரும்பாத
அவர்களைத்தான்
மானுட வரலாறு
உள்ளங்களையில்
ஏந்திக் கொண்டிருக்கிறது
இப்போது வரையிலும்
பொதிசுமக்கும்
கழுதையின் மீது கூட
அளவுக்கதிகமான
பாரத்தை ஏற்றினால்
அடம்பிடிக்கும்
நகர மறுக்கும்
ஆனால்
இந்த முதலாளிகளும்
இந்த ஆட்சியாளர்களும்
அளவுக்கதிகமான பாரத்தை
உங்கள் மீது
ஏற்றிக்கொண்டே இருப்பதை
எப்படி அனுமதிக்கிறீர்கள்
இந்த தேசம் உங்களுடையது
இந்த தேசத்தின் வளங்கள்
உங்களுக்கானவைகள்
யாருக்காகப்
பாரம் சுமக்கிறீர்கள்
உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும்
உண்மையைப்
புரிந்து கொள்ளுங்கள்
இப்போதைக்கு
அதுவே போதுமானது
மற்றதெல்லாம்
தானாக நடக்கும்
நடந்தே தீரும்!
ஜோசப் ராஜா
20.11.2025
