ஆம்
இந்த இரவை
ஒரு வயலினுக்கு
ஒப்புக் கொடுத்துவிட்டேன்
சில இரவுகள்
இப்படி வாய்க்கும்
இரவென்றே சொல்லமுடியாத
ஒரு வெளிச்சம்
இதயத்தை நிறைத்திருக்கும்
கண்களில் பரவசம்
மிதந்து கொண்டிருக்கும்
விரல்களில் வார்த்தைகள்
நிறைந்து வழியும்
எதை மறைக்க நினைக்கிறோமோ
மிகச்சரியாக
அதன்மேல் ஒளிபாய்ச்சும்
எதையெல்லாம்
புதைக்க நினைக்கிறோமோ
துல்லியமாக
அதையெல்லாம்
உயிர்ப்பித்துக் கொடுக்கும்
அறையெங்கும் இசை
சுவர்களில் எதிரொலித்து
என்னிடமே திரும்புகின்றன
இப்போது
மனதில் எதுவுமில்லை
துரோகங்களை மறந்துவிட
பழகிவிட்டேன்
அதீத வெறுப்பைச்
சுமந்தலைகிறவர்களிடம்
விலகப் பழகிவிட்டேன்
நேசித்தவர்களிடம்
நிறைந்திருந்தன எதிர்பார்ப்புகள்
இப்போது அது
இறந்தகாலமாகிவிட்டது
இந்த
இரவைப் போலத்தான்
பல இரவுகள்
விழித்திருக்கிறேன்
இசையோடும் வார்த்தைகளோடும்
இதுவரையிலும்
இசையும் கவிதையும்
வழிநடத்தி வந்திருக்கிறது
எந்தக் குறையுமில்லை
ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு கரம்
கைப்பிடித்து வழிநடத்தியிருக்கிறது
நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன்
என்று சொல்லி
நம்பிக்கை கொடுத்திருக்கிறது
இந்த இசையைப்போல
எதுவும் மறைந்திவிடப் போவதில்லை
காற்றிருக்கும் வரை
இசையிருக்கும் என்றால்
இசையிருக்கும் வரை
நினைவுகளும்
இருக்கத்தான் செய்யும்
இசை
நினைவுகளாகத்தான்
காட்சிகளாகத்தான்
நெஞ்சில் பதிந்திருக்கிறது
இசைகேட்டால்
நினைவு வரும்
நினைத்தால்
இசை வரும்
வேறென்ன வேண்டும்
இருக்கும் வரை
தாங்கிக்கொள்ள
அருகாமையில் இருக்கிறது
ஓர் இதயம்
கால்களுக்கு வலுசேர்க்க
இறுக்கமாய்க் கைகோர்த்திட
இசையைப் போல
கவிதையைப் போல
கலந்திருக்கும் போது
பொழுதெல்லாம்
பூக்கத்தான் செய்கிறது
நான்கு கம்பிகளிலிருந்து
வெளிப்படும் ஓசை
நான்கு திசைகளையும்
நிறைத்துக் கொள்கிறது
இந்த இரவின் நீளம்
எனக்குத் தெரியும்
இந்த ஒலியின் ஆழம்
எனக்கும் புரியும்
உலகே உறங்கு
அதற்காகத்தான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் காதுகளை நோக்கி
இந்த ஒலியை அனுப்புகிறேன்
விடியும் வரையிலும்
புரண்டு புரண்டு
தூக்கம் வராமல்
தவித்துக் கொண்டிருப்பவர்களே
தூக்கம் படுக்கையில் இருந்தல்ல
வாழ்விலிருந்துதான் வரும்
மூளையின் நரம்புகளை
நல்ல இசையாலும்
நல்ல வார்த்தைகளாலும்
நிரப்புங்கள்
காதலின் கரங்களுக்குள்
புதைந்து கொள்ளுங்கள்
இன்னும்
கொஞ்ச நேரத்தில்
கோலமிட வந்துவிடுவாள்
ஆண்டாள்
வாழ்க வையகமே!
ஜோசப் ராஜா
