வங்கதேசத்தின் மக்கள் புரட்சி

காலங்காலமாக

வரலாறு

இப்படித்தான்

சொல்லிக் கொண்டிருக்கிறது

 

தங்களுடைய உரிமைகளுக்காகப்

போராடுகின்ற மக்களை

எப்படி அடக்குவது என்று

முறையாகப் பயிற்சியெடுத்த

எந்த இராணுவத்திற்கும்

எப்படிப்பட்ட

இராணுவ நடவடிக்கைகளுக்கும்

மக்கள் எப்போதும்

பணிந்தது கிடையாது

 

கண்ணீர்ப் புகைகுண்டுகளுக்கோ

ரப்பர் குண்டுகளுக்கோ

தடியடிகளுக்கோ

தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுவதற்கோ

மக்கள் எப்போதும்

பணிந்தது கிடையாது

 

அதிகாரத்தின்

அழுகிப்போன வாயால்

தீவிரவாதி என்றழைக்கப்படுவதற்கோ

அதிகாரத்திற்கு

அஞ்சிநடுங்கும் ஊடகங்களால்

வன்முறையாளர்கள் என்று

விமர்சிக்கப்படுவதற்கோ

மக்கள் எப்போதும்

பணிந்தது கிடையாது

 

இப்படித்தான்

இரும்புக்கரம் கொண்டு

ஆட்சிசெய்த

எத்தனையோ ஆட்சியாளர்களை

தங்களுடைய வீரத்தால்

இரும்பை வளைத்து

இருந்த இடம்தெரியாமல்

விரட்டியடித்திருக்கிறார்கள்

 

பாருங்கள் வங்கதேசத்தை

தெருக்களில் திரண்டிருக்கும்

கோபம் கொப்பளிக்கும் மக்களை

அதிகாரத்தின் இருப்பிடம் நோக்கி

அதீதப் பாய்ச்சலோடு

முன்னேறிக் கொண்டிருக்கும் மக்களை

யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை

மக்களுக்கு முன்னால்

நீண்டகாலமாக வஞ்சிக்கப்பட்ட

மக்களுக்கு முன்னால்

நீண்டகாலமாகத் துயரத்திலிருந்த

மக்களுக்கு முன்னால்

நிற்கத் திராணியில்லாமல்

புறமுதுகுகாட்டி ஓடுகிறது அதிகாரம்

இனியென்ன

தங்களுக்கான தீர்ப்பை

தாங்களே எழுதிக்கொள்வதுதான்

 

புரட்சி என்பது வேறொன்றுமில்லை

மக்கள் எழுந்து நிற்பதுதான்

புரட்சி என்பது வேறொன்றுமில்லை

மக்கள் எழுதும் தீர்ப்புதான்

 

நீங்களும்தான் நீண்டகாலங்களாக

வெறுப்பின் கரங்களால்

கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்களும்தான் நீண்டகாலங்களாக

விலைவாசியேற்றத்தால்

விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்களும்தான் நீண்டகாலங்களாக

பிரிவினைப் பேச்சுக்களுக்கு

பலியாகிக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்களும்தான் நீண்டகாலங்களாக

இதயத்தில் நெருப்பைச்

சுமந்து கொண்டிருக்கிறீர்கள்

உங்களுக்கு மேலானதென்று

ஒன்றும் கிடையாது

நம்புங்கள் ஒன்றுமே கிடையாது

மக்கள் வெற்றியடைவதைவிட

பேரழகு

ஏதேனும் இருக்கிறதா என்ன!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment