லெனினைப் பற்றிய மூன்று பாடல்கள்

உரையாடல் ஒன்றில், லெனினைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய குருநாதர் சொன்னார், லெனின் புரட்சியின் விஞ்ஞானி என்று. அப்படிப்பட்ட லெனினைப் பற்றி 1934 ல் சோவியத்தில் யூனியனில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தையும் அவர்தான் பத்துவருடங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தினார். அன்றிரவே மிகுந்த உற்சாகமான மனநிலையோடு இதை மொழிபெயர்த்த நினைவுகள் நெஞ்சமெல்லாம் நிறைகிறது. இந்தப் பாடல்களில் இருக்கும் முக்கியத்துவம், பாமரர்களால், எளிய மக்களால் பாடப்பட்டதுதான். வாய்மொழிப் பாடல்களான இந்தப் பாடல்களில் நான் கண்டுகொண்டதெல்லாம் லெனினின் மீதான அந்த எளிய மக்களின் அன்பைத்தான், அன்பை மட்டும்தான் அதைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

 

                                    லெனினைப் பற்றிய மூன்று பாடல்கள்

 

முன்னுரை :

ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆர்டிக் பகுதிகளில் வசிக்கும் மக்கள், துயரப்படுகிறவர்களின் நண்பரான, அவர்களை அத்துயரத்திலிருந்து விடுதலை செய்தவருமான லெனினைப் பற்றிய பாடல்களைப் பாடுகிறார்கள்.

உங்கள் முன்னாலுள்ள இந்த மூன்று பாடல்களை எழுதியவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் இந்தப் பாடல்கள் வாய்மொழியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்பட்டன. ஒரு குக்கிராமத்திலிருந்து கிராமத்திற்கும், ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

சோவியத்தின் கிழக்குப் பகுதிகளில் பாடப்பட்ட இப்பாடல்கள்தான் இந்த ஆவணப் படத்திற்கான அடிப்படை அம்சமாகும். முக்காடு அணிந்துகொள்ளும் பெண்களைப் பற்றியும், ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்ததைப் பற்றியும், பாலைவனப் பிரதேசங்களைக்கூட தோட்டங்களாக மாற்றியதைப் பற்றியும், படிக்காத பாமரர்கள் கூட கல்வியறிவு பெற்றதைப் பற்றியும் பிரதானமாக இவை அத்தனையும் லெனினால் மட்டுமே சாத்தியமானது என்பதைப் பற்றியதுமாக இருக்கிறது.

இந்த எல்லாப் பாடல்களும், புதியதும், மகிழ்ச்சிகரமானதுமான வாழ்க்கைக்காக நடத்தப்பட்ட யுத்தத்தைப் பற்றியும், இதெல்லாவற்றையும் செய்வதில் லெனினோடு சேர்ந்து இருந்ததைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது.

 

முதல் பாடல் :

இருண்ட சிறைக்குள்

இருந்தது என் முகம்

குருட்டுத்தனமான வாழ்க்கையை

வாழ்ந்து கொண்டிருந்தேன்

சங்கிலிகள் கட்டப்படாத

அடிமையாய் இருந்தேன்

உண்மையின் ஒளியொன்று

ஒளிரத் தொடங்கியது

அந்த ஒளி

லெனின் என்ற உண்மையின் ஒளி

 

அவரை ஒருபோதும்

பார்த்ததில்லை நாங்கள்

அவர்குரலை ஒருபோதும்

கேட்டதில்லை நாங்கள்

ஆனால்

எங்கள் தந்தையாக

இருக்கிறார் அவர்

எந்தத் தகப்பனும்

தன்பிள்ளைகளுக்கு

லெனின் செய்ததைப் போல

எப்போதும் செய்துவிடமுடியாது

 

மரணத்தில் ஒரு வாழ்க்கை

பாலைவனத்தில் ஒரு தோட்டம்

என் மாநிலம்

என் வயல்வெளி

என் நாடு

எங்கும் எங்கெங்கும்

ஒளியைப் பாய்ச்சினார் அவர்

என்னுடைய பல்கலைக்கழகம்

என்னுடைய தொழிற்சாலை

என்னுடைய கூட்டுப்பண்ணை

எங்கும் எங்கெங்கும்

ஒளியைப் பாய்ச்சினார் அவர்

 

கோடிக்கணக்கான மணற்துகள்கள்

மணற்குன்றை உருவாக்குவது போல

கோடிக்கணக்கான இழைகள்

ஆடையை உருவாக்குவது போல

கோடிக்கணக்கான

பலவீனமானவர்களையும் ஏழைகளையும்

பலமான சக்தியாக உருவாக்கினார் அவர்

 

எங்களுக்காக

எங்கள் குடும்பங்களுக்காக

தன்னிடம் இருக்கும்

எல்லாவற்றையும் கொடுத்தார்

அவருடைய சிந்தனை

அவருடைய இரத்தம்

அவருடைய இதயம்

எல்லாவற்றையும்

எல்லாவற்றையும் கொடுத்தார் லெனின்

 

 

இரண்டாவது பாடல் :

 

நாங்கள் அவரை நேசிக்கிறோம்

எங்கள் புல்வெளிகளை நேசிப்பதைப் போல

அவரை மீண்டும்

கொண்டுவர முடியுமென்றால்

எங்கள் கூடாரங்களையும்

எங்கள் புல்வெளிகளையும்

எங்கள் வாழ்க்கையையும்

மகிழ்ச்சியுடன் கைவிடவும்

தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம்

 

நாங்கள் மட்டுமல்ல

எங்கள் சந்ததியும்

எப்போதும் அவரை

மறக்க முடியாது

 

எங்களின் வெற்றிகரமான கட்சியை

அவர்தான் தோற்றுவித்தார்

வருடந்தோறும் அதை வளர்ச்சிபெறச் செய்தார்

எத்தனையோ இரக்கமற்ற போராட்டங்களின் மத்தியிலும்

அதைப் பராமரித்துப் பலப்படுத்தினார்

 

லெனின் இறந்துவிட்டார்

அவர் உருவாக்கிய கட்சி வாழ்கிறது

அவர் நெருப்பைப் போல உழைத்தார்

அவர் கண்கள் இரும்பின் வலிமையுடையது

அந்தப் பார்வை

கூர்மையும் புத்திசாலித்தனமும் கொண்டது

முழுமனதோடு சிரித்தவர்

முழுமனதோடு பேசினவர்

அவர்தான்

உலகக் கம்யூனிசத்தை தோற்றுவித்தவர்

உலகக் கம்யூனிச இயக்கத்தின் தலைவர்

உலகத் தொழிலாளர்களின்

பெருமையும் மகிமையும் அவர்தான்

 

எழுச்சியுறும் கிழக்கின் தலைவர்

ரஷ்யத் தொழிலாளர்களின்

சர்வவல்லமையுள்ள தலைவர்

போலித்தனமின்றி எங்களை வழிநடத்தியவர்

1917 ல்

அடையாளமில்லாதிருந்த தொழிலாளர்களின்

தலைவராய்த் தோன்றினார்

அக்டோபரில் சோவியத் புரட்சியில்

எங்களை வழிநடத்தினார்

குளிரிலும் பட்டினியிலும்

நாசகரமான வாழ்க்கையிலும்

நலிந்து கொண்டிருந்த எல்லோரும்

லெனினால் வழிநடத்தப்பட்டனர் !

 

 

மூன்றாவது பாடல் : 

கற்களால் ஆன மாநகரம்

அதிலொரு சதுரக்கூடாரம்

லெனின் அதில் படுத்திருக்கிறார்

துயரத்தை நீங்கள் வெல்லவேண்டுமெனில்

வந்து பாருங்கள் லெனினை

உங்கள் துயரம் நீரைப்போல மறைந்துவிடும்

ஓடையில் அடித்துச்செல்லப்படும் இலைகளைப்போல

உங்கள் துயரம் அடித்துச் செல்லப்படும்

 

நமது வாழ்க்கை

அர்த்தமுடையதாகவும் மகிழ்ச்சியுடையதாகவும்

இருக்கிறது

 

லெனினின் பாதையில்

நாம் தொடர்ந்து செல்கிறோம்

எல்லாத் தொழிலாளர்களும்

முன்னே செல்கிறார்கள்

தேசத்தை வென்று கொண்டிருக்கிறோம்

சோஷலிசத்தைக் கொண்டு

உலகத்தை வென்று கொண்டிருக்கிறோம்!

 

Related Articles

Leave a Comment