ரொனால்டோவைப் போலாக ஆசைப்பட்டவன்

ஜி அல் பாபாவிற்குப்

பதினான்கு வயதாகிறது

கால்பந்தின் மீதான

அவனுடைய காதலை

அளவில் சொல்லிவிடுவது

அவ்வளவு சாத்தியமில்லாதது

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்

மேற்குக் கரைப்பகுதியில் இருக்கும்

ஹால்ஹுல் கிராமத்தில்

கால்பந்து விளையாடுவதற்கே

பிறந்தவன் நஜி அல் பாபா

அவனுடைய வீட்டிற்குப்

பக்கத்தில் இருக்கும்

மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில்

நேரகாலம் மறந்து

நண்பர்களோடு சேர்ந்து

கால்பந்து விளையாடுவதுதான்

அவனுடைய ஒரே வேலை

ரொனால்டோவைப் போல

சர்வேதேச அளவில்

பிரபலமான கால்பந்து வீரனாக

ஒளிரவேண்டும் என்பதுதான்

அவனுடைய ஆசை

அவனுடைய லட்சியம்

அவனுடைய கனவு

இன்னும் சொல்லப்போனால்

அவனுடைய

ஒவ்வொரு நாள் முயற்சியும்

அதுதான் அதுவேதான்

எப்போதும் சிரித்த முகத்தோடு

கொஞ்சம் அமைதியாக

சுற்றியிருப்பவர்களுக்கு முடிந்தவரை

உதவி செய்யக்கூடியவன்

அந்த ஊரில்

எல்லோருக்கும் பிடித்தமானவன்

ஊரிலிருக்கும் ஒவ்வொருவரும்

அவனைக் கால்பந்தோடுதான்

ஞாபகம் வைத்திருப்பார்கள்

கால்பந்துதான் அவனுக்குச் சுவாசம்

கால்பந்துதான் அவனுடைய சகவாசம்

சர்வதேசப் போட்டிகளில்

கோல் அடிப்பதற்கான பயிற்சியில்

தெருக்களிலும்

வீடுகளின் சுவர்களிலும்

எஞ்சியிருக்கும் மைதானங்களிலும்

காடுகளுக்குள்ளிருக்கும் மரங்களிலும்

கரடுமுரடான பாறைகளிலும்

பட்டுத்தெறித்துப்

பறந்து கொண்டிருந்தது கால்பந்து

ஒரு விடுமுறைநாளில்

உற்சாகமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தவனை

இழுத்துப் பிடித்து

உனக்குப் பிடித்ததைச்

சமைத்து வைத்திருக்கிறேன்

சாப்பிட்டுவிட்டு விளையாடப்போ என்று

அன்பைப் பொழிகிறாள் அக்காள்

விளையாடிவிட்டு

வந்து சாப்பிடுகிறேனென்று

கால்பந்தின் மீதான காதலை

வெளிப்படுத்துகிறான் நஜி அல் பாபா

எப்போதும் விளையாடும்

காட்டுப்பகுதிக்குள்

விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

அந்தச் சிறுவர்கள்

சிறிது நேரத்தில்

அங்கிருந்து கேட்ட

துப்பாக்கிச் சத்தத்தில்

அந்த ஊரே அரண்டு போகிறது

சிறுவர்கள் சிதறி ஒடுகிறார்கள்

இஸ்ரேல்

இராணுவ வீரர்களின்

துப்பாக்கி துப்பிய

நான்கு தோட்டாக்களால்

நஜி அல் பாபா மட்டுமல்ல

அவனுடைய கால்பந்துக் கனவும்

இரத்த வெள்ளத்தில்

துடித்துக் கொண்டிருந்தது

சிறுவனை எதற்காகச் சுட்டீர்களென்று

கோபத்தில் கொந்தளித்த

அப்பாவை அடித்துத் துவைத்துவிட்டு

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள்

நுழைந்தான் என்று

சாக்குப்போக்குச் சொன்னார்கள்

அந்தப் போர்வெறியர்கள்

யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை

இரத்த வெள்ளத்தில் கிடந்த

வருங்கால கால்பந்து நட்சத்திரமான

நஜி அல் பாபாவின் பயிற்சியாளருக்கு

இதயத்துடிப்பின் வேகத்தைக்

கட்டுப்படுத்த முடியவில்லை

“ஒவ்வொரு கோலடித்த பின்பும்

என்னை நோக்கிம் ஓடிவந்து

கொண்டாடிவிட்டுச் செல்வானே” என்று

சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்

இப்படியாக

ஹால்ஹீல் கிராமம்

ஒவ்வொரு கால்பந்திலும்

நஜி அல் பாபாவைப்

பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்

யுத்தம்

நிகழ்காலத்தின் கழுத்தைப் பிடித்து

இறந்த காலத்திற்குள்

இழுத்து செல்வது மட்டுமல்லாமல்

எதிர்காலத்தின் மீதும்

இடியை இறக்கக்கூடியது என்பதை

பாலஸ்தீனத்தின் வழியாக

பார்த்துக் கொண்டிருக்கிறது

இந்த உலகம்

இதுவரையிலும்

பார்த்துக் கொண்டுதானிருக்கிறது

இந்த உலகம்

உண்மை என்னவென்றால்

கொல்லப்பட்ட ஒற்றைக் கனவு

ஓராயிரம் கனவுகளைப்

பிரசவிக்கும் என்பது

இப்போதல்ல எப்போதுமே

கொல்பவர்களால் புரிந்துகொள்ள முடியாதது!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment