காஸாவின் கண்ணீரை
காஸாவின் இரத்தத்தை
வெறிபிடித்தவர்களைப் போல
குடித்து முடித்தபிறகும்
இன்னும் அடங்கவில்லை தாகம்
அதனால்தான் அவர்கள்
ரஃபாவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள்
காஸாவின் மனிதக்கறியை
காஸாவின் குழந்தைக்கறியை
பெருத்த வயிற்றிற்குள்
நிரப்பிய பிறகும்
இன்னும் அடங்கவில்லை பசி
அதனால்தான் அவர்கள்
ரஃபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்
ரஃபாவிலும்
மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள்
ரஃபாவிலும்
குழந்தைகள் அதிகமாகயிருக்கிறார்கள்
ரஃபாவிலும்
கர்ப்பிணிகள் கலங்கிப் போயிருக்கிறார்கள்
ரஃபாவிலும்
தாய்மார்கள் தவித்துப் போயிருக்கிறார்கள்
இன்னொரு பேரழிவின் காட்சிகளை
எப்படித் தாங்கும் என்னிதயம்
உலகத்தின்
ஒட்டுமொத்த நியாயங்களையும்
புறந்தள்ளிவிட்டு
நகர்ந்துகொண்டிருக்கின்றன பீரங்கிகள்
எறிந்துகொண்டிருக்கின்றன ஏவுகணைகள்
குழந்தைகள்
யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
குழந்தைகள்
யுத்தத்தில் அங்குமிங்கும்
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும்
எவ்வளவு கொடுமையானது என்று
இந்த உலகத்தின் முட்டாள்கள்
புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்
ஒரு பேரழிவைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தக் குழந்தைகளின் மனநிலையை
ஒரு பேரழிவில்
ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும்
அந்தக் குழந்தைகளின் மனநிலையை
ஒரு கவிஞனாகப்
புரிந்துகொள்ளும் இவ்வேளையில்
எதிர்காலம் பற்றிய
அவர்களின் எண்ணங்களையும்
எதிரிகளைப் பற்றிய
அவர்களின் முடிவுகளையும்
உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
இதுவரையிலும் இந்த உலகத்தில்
மானுடத்திரளின்மீது பேரழிவை
ஏற்படுத்திய சர்வாதிகாரிகளை
இழந்தவர்களும் எஞ்சியவர்களும்
தப்பித்தவர்களும் தலைமறவாக இருந்தவர்களும்
ஒன்றாய்ச்சேர்ந்து
என்ன செய்தார்கள் என்பதை
உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
இத்தனை பேரழிவுகளுக்குப் பின்னால்
இன்றாவது
ரஃபாவை நோக்கித் திரும்பியிருக்கும்
உலகத்தின் ஒவ்வொரு கண்களையும்
இன்றாவது
பாலஸ்தீனத்திற்காகத் துடிக்கத் தொடங்கியிருக்கும்
உலகத்தின் ஒவ்வொரு இதயத்தையும்
அன்பின் கரங்களாலும்
சகோதரத்துவத்தின் கரங்களாலும்
இறுக அணைத்துக் கொள்கிறேன்!
ஜோசப் ராஜா
1 comment
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் காலில் போட்டு மதிக்கும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டுக் களவாணிகளின் போர் வெறியை முறியடிக்க உலக மனித நேய விரும்பிகள் ஒன்று கூடிக் குரலெழுப்ப வேண்டிய தருணமிது.
குரலாக
எழுத்தாக
எதிர்த்து நில்லுங்கள்.
அதற்குக் கவிஞர் ஜோசப் ராஜாவின் இக்கவிதை நெம்புகோலாகும்