காஸாவின் அழகு நிலையம்

னிதர்கள்

வாழ்ந்து கொண்டிருந்தார்கள்

என்பதற்கான

எந்தத் தடயமுமில்லாமல்

திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டிருக்கும்

காஸா நகரமானது

அழகிழந்து அலங்கோலமாகிக் கிடக்கிறது

யுத்தம் நிறுத்தப்பட்டதால்

திரும்பி வந்தவர்கள்

இயல்பு வாழ்க்கைக்கு வாய்ப்பில்லையாதலால்

வாழவே போராடிக் கொண்டிருக்கிறார்கள்

இடிபாடுகள் இடிபாடுகள்

எங்கும் இடிபாடுகளே நிறைந்திருக்கின்றன

மனிதன் சக மனிதனுக்கு

செய்யக் கூடிய காரியமா

என்ற கேள்விகள் எழாமலில்லை

எல்லோரையும் போல

காஸாவிலிருந்து துரத்தப்பட்டவள்

எல்லோரையும் போல

காஸாவிற்குத் திரும்பி வந்திருக்கிறாள்

அடிப்படையில்

அழகுக்கலை நிபுணரான

அவளுக்கு

காஸாவின் அலங்கோலத்தைக்

காணச் சகிக்கவில்லை

இடிபாடுகளுக்கு மேல்

நீலநிறக் கூடாரத்தை எழுப்புகிறாள்

உடைந்த கண்ணாடியொன்றைப் பொருத்துகிறாள்

முடி அகற்றும் கருவிகள்

ஈரப்பதமூட்டிகள்

ஒப்பனை செய்யத் தேவையான

சில பொருட்கள்

கூடாரத்திற்கு வெளியே

நூரின் சலூன் என்று

கைகளால் எழுதிவிட்டு

சுற்றிலும் பார்த்தாள்

இடிபாடுகளுக்கு மேலே

வாழ்க்கை தொடங்கியிருந்தது

அவள் முடிவு செய்துவிட்டாள்

யுத்தத்தால் அலைக்கழிக்கப்பட்ட

பெண்களை

அதீத வெப்பத்தில்

அங்குமிங்கும் அலைந்ததில்

வெடித்துப்போன

அவர்களின் முகங்களை

தண்ணீரில்லாமல்

காற்றோட்டமில்லாமல்

சுகாதாரமான சூழலில்லாமல்

காய்ந்து பிசுபிசுத்துப் போயிருக்கும்

அவர்களின் முடிகளை

மீண்டும் பழையமாதிரி

மீண்டும் அழகாக

மாற்றப்போகிறேன் என்று

முடிவு செய்துவிட்டாள்

நினைத்துப் பாருங்களேன்

யுத்த பூமியில்

அழகு நிலையம்

பெண்கள்

ஒப்பனை செய்துகொண்டு

மிடுக்காக இருக்கும்போது

நம்பிக்கையுள்ளவர்களாக

மாறுகிறார்கள் என்பது

நூரின் அசைக்கமுடியாத நம்பிக்கை

அவளைத் தேடிவரும்

அத்தனை பெண்களும்

இதயத்தை நொறுக்கக்கூடிய

கதைகளோடுதான் வருகிறார்கள்

முப்பது வயதுள்ள பெண்ணொருத்தி

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில்

எல்லாவற்றையும்

எல்லோரையும் இழந்தவள்

நூரின் அழகுநிலையத்திற்குள் வருகிறாள்

களையிழந்து கிடக்கும்

அந்த முகத்தைக் கைகளால் வருடுகிறாள்

அவள் புருவங்களைச் சரிசெய்கிறாள்

கலைந்துகிடக்கும் அவள் முடிகளை

கத்தரித்து நேர்த்தியாக்குகிறாள்

தன்னுடைய அன்பின் கரங்களால்

அவளுடைய ஆன்மாவையும் அழகாக்குகிறாள்

எதிரில் இருக்கும்

உடைந்த கண்ணாடியில்

முகம்பார்த்த அந்தப் பெண்ணின்

உடைந்த இதயத்திற்குள்

என்னென்ன ஓடியதோ தெரியவில்லை

அழுகிறாள் அழுகிறாள் அழுகிறாள்

இப்படித்தான்

நூரின் அழகு நிலையம்

வெட்டப்பட்ட முடிகளால் மட்டுமல்ல

பகிர்ந்துகொள்ளப்பட்ட உணர்வுகளாலும்

பகிர்ந்துகொள்ளப்படாத வேதனைகளாலும்

நிறைந்து கொண்டிருக்கிறது

திருமணத்திற்குத் தயாராக இருக்கும்

மகளை

அழைத்துக் கொண்டுவரும் தாயை

வரவேற்கிறாள் நூர்

தன்னிடமிருக்கும்

பொருட்களைக் கொண்டு

மணப்பெண்ணை அலங்கரிக்கத் தொடங்குகிறாள்

மகளைப் பார்த்துக்கொண்டே

கண்ணீர் சிந்தாமல் விசும்பிக்கொண்டிருக்கும்

தாயைப் பார்க்கிறாள் நூர்

யுத்தம் எல்லோரையும்

வயதானவர்களாக மாற்றிவிட்டது

என்று சொல்லி

கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்

கவலைப்படாதீர்கள் அம்மா

நான் மீட்டுத் தருகிறேன்

இழந்த இளமையை என்று

நம்பிக்கை கொடுக்கிறாள் நூர்

யுத்தம் என்பது

ஒரு வார்த்தைதான்

ஆனால் யுத்தத்தின் விளைவுகள்

வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது

என்பதை அறிந்தவளாக

யுத்தம் அழுக்கேற்றிய முகங்களை

சரிசெய்யக் காத்திருக்கிறாள் நூர்

ஒளியிழந்தவர்கள்

அந்தக் கூடாரத்தை நோக்கி

வந்து கொண்டிருக்கிறார்கள்

மெல்லிய நூலோடும்

சின்னஞ்சிறிய கத்தரிக்கோலோடும்

உடைந்த கண்ணாடியோடும்

உறுதியான நம்பிக்கையோடும்

கைநிறைய ஒளியேந்திக்

கைநிறைய ஒளியேந்திக்

காத்திருக்கிறாள்

அழகுக்கலை நிபுணரான நூர்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment