யுத்தத்திற்கு எதிரான கோமாளிகள்

சாலைகள் சாலைகளாக இல்லை

தெருக்கள் தெருக்களாக இல்லை

குடியிருப்புகள் குடியிருப்புகளாக இல்லை

நீங்களும் கூட

பார்த்திருப்பீர்கள் பாலஸ்தீனத்தை

பெரும் குண்டுகள் விழுந்ததில்

சமவெளிகள் எங்கெங்கும்

பள்ளத்தாக்குகள் உருவாகியிருக்கின்றன

உயிர்காக்கும் மருத்துவமனைகள்

கல்லறைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன

இடிபாடுகள்தான்

எங்கும் இடிபாடுகள்தான்

அந்த இடிபாடுகளின் வழியே

அந்தக் கற்குவியல்களின் வழியே

ஆடி அசைந்தபடி

பயணித்துக் கொண்டிருக்கிறது

அந்தப் பழைய வண்டி

எதிர்காலத்தைப் பற்றிய

எண்ணற்ற கேள்விகளோடு

தந்தை இழந்த குழந்தைகளும்

தாயை இழந்த குழந்தைகளும்

இருவரையும் இழந்த குழந்தைகளும்

தங்கியிருக்கும் அகதிமுகாமை நோக்கி

தட்டுத்தடுமாறிச் செல்கிறது

அந்தப் பழைய வண்டி

ஏவுகணைகள்

எந்நேரமும் இறங்கலாம் தலையில்

பீரங்கிகள்

எந்நேரமும் பொழியலாம் குண்டுகளை

ஆனாலும் பயணித்துக் கொண்டிருந்தது

அந்தப் பழைய வண்டி

ஒரேயொரு குண்டுவீச்சில்

அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள்

ஏவுகணைத் தாக்குதலில்

எல்லாவற்றையும் இழந்த குழந்தைகள்

அழுது அழுது

வறண்ட கண்களோடும்

வலிக்கும் இதயத்தோடும்

அந்த அகதி முகாம்களுக்குள்

அலைந்து கொண்டிருக்கும்

அந்தக் குழந்தைகள்

தங்களை நோக்கி

வந்து கொண்டிருக்கும்

வண்டியைப் பார்த்ததும்

தங்களுக்காக வந்து கொண்டிருக்கும்

வண்டியைப் பார்த்ததும்

தங்கள் துயரங்களை மறந்து

தங்கள் வலிகளை மறந்து

தங்கள் இழப்புகளை மறந்து

தாங்கள் அனாதைகளாக்கப்பட்டதை மறந்து

குதூகலத்தோடு

குதித்தோடி வருகிறார்கள்

அந்த வண்டிக்கு அருகில்

எல்லோரையும் போல

அவர்களை ஏமாற்றவில்லை

அந்த வண்டி

எல்லோரையும் போல

அவர்களைக் கைவிடவில்லை

அந்த வண்டி

எல்லோரையும் போல

அவர்களைப் புறக்கணிக்கவில்லை

அந்த வண்டி

வண்டியைச் சுற்றிலும்

கூடியிருக்கும் குழந்தைகளை நோக்கி

புயலைப்போல குதிக்கிறார்கள்

கோமாளி வேடமணிந்த

அந்தக் கலைஞர்கள்

அந்தக் கோமாளிகளைப்

பார்த்த உடனேயே

எங்கிருந்தோ

நட்சத்திரங்களை எடுத்து

முகத்தில் ஒட்டியதைப்போல

எங்கிருந்தோ

பிறைநிலவை எடுத்து

உதட்டில் ஒட்டியதைப்போல

ஒளிசிந்தச் சிரிக்கிறார்கள்

ஒளிசிந்திச் சிரிக்கிறார்கள்

அந்த அகதிமுகாமின் குழந்தைகள்

விடவில்லை அந்தக் கோமாளிகள்

இடிபாடுகளுக்கு இடையில்

மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்

புகைமண்டலங்களுக்கு நடுவில்

வித்தைகளைச் செய்து காட்டுகிறார்கள்

அவர்களின் கோமாளித்தனங்கள்

அந்தக் குழந்தைகளை

அழுகையை மறந்து ஒருகணம்

பசியை மறந்து ஒருகணம்

காயங்களை மறந்து ஒருகணம்

மெய்மறந்து சிரிக்கச் செய்கின்றன

அந்தக் குழந்தைகளின் சிரிப்பில்

போர்விமானங்கள் பொசுங்கிப் போகின்றன

அந்தக் குழந்தைகளின் சிரிப்பில்

ஏவுகணைகள் எரிந்து போகின்றன

அந்தக் குழந்தைகளின் சிரிப்பில்

துப்பாக்கிகள் உடைந்து போகின்றன

அந்தக் கோமாளிகளின்

கால்களுக்கு கீழே

இந்த உலகத்தின் பாசிஸ்டுகளும்

இந்த உலகத்தின் சர்வாதிகாரிகளும்

கேவலமான பிறவிகளைப் போல

கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறார்கள்

யுத்தவெறியர்களுக்குப் பதிலாக

இப்படிப்பட்ட கோமாளிகளால்

இந்த உலகம் நிறைந்திருந்தால்

எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள்

இந்த காலையை அழகாக்குகின்றன

இந்த நேரத்தில்

யுத்தத்தால்

பாதிக்கப்பட்ட குழந்தைகளை

கணப்பொழுதேனும் சிரிக்கச் செய்த

யுத்தத்திற்கு எதிரான

அந்தக் கோமாளிகளை

இறுக அணைத்துக் கொள்கிறேன்

கவிதைக் கரங்களால்!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

Baskaran FT 11/04/2024 - 11:58 AM

அருமை தோழர் கோமாளிகளால் குதூகலமான அந்த குழந்தைகள்…. கவிதையில் காட்சி படுத்துதல் மிக சிறப்பு….. நன்றிகள் பல உங்களின் எழுத்துக்களுக்கு

Reply
பெரணமல்லூர் சேகரன் 15/04/2024 - 10:39 AM

யுத்த பூமியின் கோரங்களைத் தமது கவிதை மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள்‌
கசியும் கரிசனம்
செயல்பாட்டில் நங்கூரமிடட்டும்.

தங்களுக்கேற்ற வடிவில் போர் எதிர்ப்புப் போரை நடத்துங்கள்.

ஏனெனில் விலை மதிப்பற்றது மனித உயிர்.

Reply

Leave a Comment