சில வருடங்கள் காதலித்தபிறகு
திருமணம் செய்துகொண்டோம்
நானும் முகமதுவும்
காதலின் மகிழ்ச்சி
திருமணத்தால் இன்னும் அதிகமானது
நட்சத்திரங்களைப் போல
ஒளிர்ந்து கொண்டிருந்தது
ஒவ்வொரு நாளும்
எதிர்பார்த்ததைப் போலவே
சீக்கிரமாக கர்ப்பம் தரித்தேன்
வயிற்றிலிருந்த எங்கள் குழந்தையை
ஒவ்வொரு கணமும்
கொண்டாடிக் கொண்டிருந்தோம்
குழந்தை கேட்கட்டும் என்று
நிறையப் பேசினோம்
குழந்தை இரசிக்கட்டும் என்று
நிறையப் பாடினோம்
அந்தச் சின்னஞ்சிறு
கால்களைக் கொண்டு
வயிற்றில் எட்டி உதைத்ததை
இப்போது நினைத்தாலும்
ஒட்டுமொத்த உடலும்
ஒரேமாதிரி புல்லரித்துப் போகிறது
நிறைந்திருந்த வயிற்றைத் தடவிக்கொடுத்து
குழந்தையிடம் பேசுவதே
முக்கியமான வேலையாக இருந்தது
முகமதுவிற்கு
முழுநிலா ஒளிர்ந்துகொண்டிருந்த
ஒருநாளில்
எங்கள் சூரியப்பறவை
பறவையைப் போல
பறவையைப் போலவே
சிறகடித்துக் கொண்டிருந்தாள்
எங்கள் சின்னஞ்சிறிய சூரியப்பறவைக்கு
லியா என்று பெயரிட்டோம்
அவளுக்கான விளையாட்டுப் பொருட்கள்
அவளுக்கான உடைகள்
அவள் தூங்குமிடம் என
எல்லாவற்றையும்
அவளுக்கானதாக மாற்றினோம்
ஒரு குழந்தையின் பிறப்பு
அம்மாவின் உலகத்தை மட்டுமல்ல
அப்பாவின் உலகத்தையும்
சகோதர சகோதரிகளின் உலகத்தையும்
தாத்தா பாட்டியின் உலகத்தையும்
புத்தம் புதியதாக
மகிழ்ச்சி நிறைந்ததாக
எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாற்றிவிடுகிறது
என் மகளுக்காக
ஒரேஒரு விஷயத்தில்
அடம்பிடிப்பவளாக இருந்தேன்
திட உணவை
அவளுக்கு அறிமுகப்படுத்தும் வரைக்கும்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவுநாள் வரையிலும்
அவளுடைய வளர்ச்சிக்கும்
அவளுக்கான எதிர்ப்புசக்திக்கும் என
என்னிலிருந்து சுரக்கும்
தாய்ப்பாலைக் கொடுக்க நினைத்தேன்
கொடுத்துக் கொண்டிருந்தேன்
வேலைக்குச் செல்லும் தாயாக
எட்டு மணிநேரத்தை
வெளியில் கழித்துவிட்டு
காற்றைக் கிழித்துக்கொண்டு
ஓடிவந்து அவளை ஏந்திக்கொள்வேன்
மூச்சு முட்டமுட்ட
அவள் பாலருந்துவதைப் பார்க்கனுமே
அடடா
பசியாற்றுவதில் இருக்கும் இன்பமது
துர்பாக்கியமாகத்
தொடங்கியது யுத்தம்
எனக்குள்
இறுக அணைத்துக்கொண்டேன் லியாவை
எங்கள் காஸா சுற்றிவளைக்கப்பட்டது
எங்களுக்கான உணவு தடைபட்டது
எங்களுக்கான தண்ணீர் தடைபட்டது
எங்களுக்கான எரிபொருள் தடைபட்டது
எங்களுக்கான மின்சாரம் தடைபட்டது
விநியோகம் நிறுத்தப்பட்டதும்
விலை உயரத்தொடங்கியது
முகமதும் நானும்
லியாவை நினைத்துக் கவலையடைந்தோம்
அவளுக்கான உணவு
அவளுக்கான குடிநீர் என
ஓவ்வொன்றையும் சேமித்து வைத்தோம்
நானும் அவளுக்குப்
பாலூட்டிக் கொண்டிருந்தேன்
யுத்தம் முடியவில்லை
இன்னும் கோரமாக வேகமெடுத்தது
முகமதுவும் நானும்
கனத்த இதயத்தோடு ஒரு முடிவெடுத்தோம்
நீண்டநாட்களுக்கு வேண்டுமென்பதற்காக
லியாவிற்கான உணவைக்
கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினோம்
எந்நேரமும் பசியோடு
என் மார்புகளிடம்
முறையிட்டுக் கொண்டிருக்கும்
என் மகளின் பேசப்படாத வார்த்தைகள்
என் இதயத்தை குத்திக்கிழித்தது
உணவுத் தட்டுப்பட்டால்
குடிநீர்த் தட்டுப்பாட்டால்
என்னுடலின் சக்தி குறைந்ததுபற்றி
எனக்கு எந்தக் கவலையுமில்லை
ஆனால் ஆனால்
என் மகளுக்கான பாலை
என் மார்புகள்
சுரக்கமுடியாமல் போனபோதுதான்
என் மகளின் பசியை
என் மார்புகள்
தணிக்கமுடியாமல் போனபோதுதான்
இந்தப் பாவிகளின்மீது
தீராத ஆத்திரம் பெருகத்தொடங்கியது
இந்த உலகத்திடம்
நான்சொல்ல என்ன இருக்கிறது
என்று கேட்டீர்களல்லவா
என் மகளுக்குத்
தாய்ப்பால் கொடுக்கவாவது
என் மகளின் பசியைப் போக்கவாவது
இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும்
இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும்
என்று நூர் சொல்லிமுடித்ததும்
கேமராவை அணைக்க மறந்து
பெருங்குரலெடுத்து அழுதபடி
அந்தக் கட்டிட இடிபாடுகளுக்குள்
ஓடினான் அந்த ஊடகவியலாளன்
ஆனாலும் கூட
லியாவின் அழுகை
அவனுக்கு கேட்கத்தான் செய்தது
உங்களுக்கும் கேட்கிறதா
பாலஸ்தீனக் குழந்தைகளின் அழுகுரல்!
ஜோசப் ராஜா
1 comment
பாலஸ்தீனக் குழந்தைகளின் அழுகுரலை, குழ்ந்தையின் அம்மாவின் அழுகுரலைப் படம் பிடித்துக் கவிதையால் வடித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா. அந்த அழுகுரல் முடிவற்றதாகத் தொடர்கிறது.
அந்த அழுகுரல் என் காதுகளில் விழுகின்றது. உங்கள் காதுகளிலும் விழும் என நம்புகிறேன்.
எந்த வடிவிலேனும் எதிர்வினையாற்றுங்கள்.