யுத்தங்களுக்குப் பின்னால்
என்ன இருக்கிறது
என்பதைப்
புரிந்துகொள்வது
கடினமல்ல
யுத்தங்களுக்கான
தயாரிப்புகள்
எப்படித் தொடங்குகின்றன
என்பதை
விளங்கிக் கொள்வதும்
கடினமல்ல
ஒரு தேசம்
யுத்தத்தை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாக
எப்படிக்
கொண்டுசெல்லப் படுகிறது
என்பதற்கான
சமகால உதாரணங்களைப்
பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்
பூமியெங்கும் இரத்தம்
ஆயிரமாயிரம் குழந்தைகள்
பிணங்களாக
குண்டுவீச்சில்
வீடுகளை இழந்தவர்கள்
எண்ணிலடங்காதவர்கள்
அகலாத சோகத்தோடு
தேசங்களின் எல்லைகளில்
நிறைந்திருக்கிறார்கள்
அகதிகள்
எல்லாவற்றையும்
இழந்தவர்கள்
தண்ணீருக்காகவும் உணவிற்காகவும்
கையேந்தி நிற்கிறார்கள்
எல்லாவற்றிற்கும்
எல்லாவற்றிற்கும் பின்னால்
என்ன இருக்கிறது
என்னதான் இருக்கிறது
ஒன்றுமல்ல
ஒன்றே ஒன்றுதான்
இன்றைய செய்தி
பிரான்ஸில் இருக்கும்
ஒரு நிறுவனத்திடமிருந்து
63000 கோடிக்கு
அறுபத்தி மூவாயிரம் கோடிக்கு
போர் விமானங்களை
வாங்குவதற்க
ஒப்பந்தத்தில்
கையெழுத்துப் போட்டிருக்கிறது
இந்தியா!
ஜோசப் ராஜா