2014 ஆம் வருடம், இதே போன்றதொரு இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேல் காஸாவின் மீது நிகழ்த்தியது. குடியிருப்புகளைப் பார்த்துக் குண்டுபோட்டார்கள். மருத்துவமனைகளைப் பார்த்து ஏவுகணைகளை வீசினார்கள். மக்கள் கூடியிருக்கும் இடங்களைப் பார்த்துப்பார்த்துக் கொன்று குவித்தார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாம்பரம் கிளை பெரிய அளவில் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மண்ணின் மகத்தான ஓவியர். சந்ரு அவர்களின் தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்கள், தங்களுடைய எதிர்ப்பை ஓவியத்தில் பதிவுசெய்தார்கள். மேலே நான் பதிவு செய்திருக்கும் ஓவியம் ஐயா சந்ரு அவர்கள் வரைந்தது.
அதைத்தொடர்ந்து கவிதையின் வழியாக ஏராளமான கவிஞர்கள் காஸாவிற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் தங்களுடைய இதயத்தைத் திறந்து காட்டினார்கள். இங்கே நான் பதிவு செய்திருக்கும் கவிதை, அந்த நிகழ்வில் வாசித்ததுதான்.
ஒன்பது வருடங்கள் கழித்து அதைவிட மூர்க்கமான தாக்குதலில் காஸா நிலைகுலைந்து கொண்டிருக்கிறது. இப்போதும் காஸாவிற்காக உலகமெங்கிலும் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுதந்திரத்திற்கான பயணம் என்பது சுதந்திரத்தை அடைவது மட்டுமே என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவனாக இதையெல்லாம் எழுதவேண்டியதைக் கடமையாகக் கருதுகிறேன்.
உங்களுக்கொன்று தெரியுமா பிள்ளைகளே
உங்களைப்போலவே கள்ளமில்லாச் சிரிப்போடு
உயிரை மலரச் செய்யும் மகளிருக்கிறாள் எனக்கு
ஆனபோதிலும்
அவளுடைய அந்தச் சிரிப்பை
இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை
உங்களுக்கொன்று தெரியுமா பிள்ளைகளே
உங்களைப்போலவே பொம்மைகளோடு விளையாடுகின்ற
அவைகளையும் கூட சகஉயிர்களாக எண்ணுகின்ற
மகளிருக்கிறாள் எனக்கு
ஆனபோதிலும்
அவளுடைய அந்த விளையாட்டை
இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை
உங்களுக்கொன்று தெரியுமா பிள்ளைகளே
உங்களைப்போலவே ஒளிந்து விளையாடும் ஆசைகொண்ட
உங்களைப்போலவே பதுங்கி விளையாடும் ஆசைகொண்ட
மகளிருக்கிறாள் எனக்கு
ஆனபோதிலும்
அவளோடு விளையாட
இப்போது என்னால் முடியவே இல்லை
ஒன்றுமே செய்ய முடியாமல்
உறைந்து போயிருக்கிறேன்
ஒன்றுமே செய்ய முடியாமல்
உடைந்து போயிருக்கிறேன்
குண்டுகள் பொழியும் வானத்திற்குக் கீழே
ஏவுகணைகள் கலைக்கும் மேகங்களுக்கு கீழே
தந்தையிழந்து தாயிழந்து வாழ்வுமிழந்து
உயிர்பிடித்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது
ஓடிக்கொண்டிருக்கையில் செத்து விழும்பொழுது
எப்படிக் கொஞ்சுவேன் என்னுடைய மகளை
குற்றவுணர்வில் குறுகிப்போகிறது என்னிதயம்
சிதறிக் கிடக்கும் உங்களின் உடலின் பாகங்களும்
கண்ணீர் வழியும் உங்களின் விழிகளும்
இரத்தம் வழியும் உங்களின் முகங்களும்
என்னைக் கலங்கச் செய்கின்றன
என்னை நொறுங்கச் செய்கின்றன
உங்களுக்கொன்று தெரியுமா பிள்ளைகளே
உங்களோடு சேர்ந்து நானும் வெடித்துச் சிதறுகிறேன்
உங்களோடு சேர்ந்து நானும் கண்ணீர் வடிக்கிறேன்
இரத்தஞ் சிந்துகிறேன் உங்களைப் போல
அலைந்து திரிகிறேன் உங்களோடு கூட
வலியுணர்கிறேன் பிள்ளைகளே நானும் நானும்
நடக்கக் கூடாத ஒரு கொடுங்கனவு
நடந்து கொண்டிருக்கையில்
நாட்களெல்லாம் துயரம் சுமந்துதான்
நடந்து போகின்றன பிள்ளைகளே
அந்த ஏவுகணைகள் இன்னும் பாய்ந்திடுமோ
அந்தப் பீரங்கிகள் இன்னும் உமிழ்ந்திடுமோ
அந்தத் துப்பாக்கிகள் இன்னும் நடுங்கிடுமோ
அந்தக் கண்களில் இன்னும் வெறியேறிடுமோ
அச்சப்படுகிறேன் நான் உங்களைப் போலவே
ஓயாமல் அலைக்கழிக்கப்படும் காஸாவின் குழந்தைகளே
ஓயாமல் அச்சுறுத்தப்படும் காஸாவின் குழந்தைகளே
என்னுடைய மகளின் முகத்தில் உங்களைப் பார்க்கிறேன்
என்னுடைய மகளின் குரலில் உங்களைக் கேட்கிறேன்
இதோ எண்ணற்றவைகளாய்
என்னைச் சுற்றிச் சிதறிக்கிடக்கும்
உங்களின் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு
என் மகள் மெளனமாகிறாள்
என்னை உற்றுப் பார்க்கிறாள்
உதட்டைப் பிதுக்குகிறாள்
முகத்தைச் சுளிக்கிறாள்
”அப்பா என்ன இது” என்கிறாள்
”யுத்தமப்பா” என்கிறேன் தாழ்ந்த குரலில்
”யாருக்கும் யாருக்கும்” என்கிறாள்
அது ”இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும்”
”சரியா சொல்லுங்கப்பா”
”ஆமாம்ப்பா அவங்களுக்குத்தான்”
’அப்ப இந்தக் கொழந்தைங்க ஏம்ப்பா செத்துக்கெடக்காங்க?’
அது அதுவந்து
யுத்தம்னா அப்படித்தான் என்றேன்
ஏறெடுத்துப் பார்த்தாள்
என்னையே பார்த்தாள்
அவளுடைய பார்வை
கண்களின் வழியாக
இதயத்தின் ஆழம்வரையிலும் பாய்ந்து சென்றதை
உணர்ந்த நேரத்தில் உண்மையைச் சொன்னால்
அசிங்கமாக இருந்தது மனிதனாக இருப்பதற்கு
வெட்கமாக இருந்தது மனிதனாக இருப்பதற்கு!
2 comments
ஒன்பதாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நிகழ்த்திய கொடூர தாக்குதலால் எழுந்த
தோழர் சந்ருவின் ஓவியத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையை வாசித்த பின்பும் ஏதோ தந்தைக்கும் குழந்தைக்கும் நிகழ்ந்த உரையாடலாகக் கடந்து போக முடியாது.
ஏனெனில் ஒன்பதாண்டுகள் கழித்து இப்போது காஸாவை முற்றாக அழித்தொழிக்க ஈவு இரக்கமற்ற முறையில் இஸ்ரேல் ஆக்டோபஸ் கரங்களுடன் களமிறங்கிப் பேரழிவை நிகழ்த்தி வருகிறது.
இதயம் கனக்கிறது. உங்களுக்கும் தானே. பிறகென்ன, படியுங்கள். பரப்புங்கள்
“நடக்கக் கூடாத ஒரு கொடுங்கனவு / நடந்து கொண்டிருக்கையில் / நாட்களெல்லாம் துயரம் சுமந்துதான் / நடந்து போகின்றன ” உணரும் உணர்ச்சிக்கான வார்த்தைகள். குழந்தைகளுக்காக வாழ்கிறோம்… மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம்.. இப்படி நடந்துகொள்வது அறிவீனச்செயல் என்பதை நாமே எப்பொழுது புரிந்துகொள்ள முடியுமோ அப்பொழுதுதான் நம் குழந்தைகளுக்கும் நம்மை நம்பி வாழும் மக்களுக்கும் புரியவைக்கவும் முடியும் என்பதை உணர்த்தும் வரிகள். வாசிப்போம்… பகிருவோம்… மாற்றத்தை வரப்பெற செய்ய போராடுவோம்.