யுத்தக் களத்தின் செய்தியாளன்

பெயர் :

வல் அல் ததோ

ஊர் :

காஸா

நாடு :

பாலஸ்தீனம்

தொழில் :

தலைமைச் செய்தியாளர்

ஊடகம் :

அல் ஜசீரா

பணியிடம் :

காஸா யுத்தக்களம்

 

போரைக்

காட்சிப்படுத்துவது என்பது

ஒருவகையில்

போரிடுவதற்குச் சமமானதாகும்

ஏவுகணைகளிலிருந்து

பறக்கும் குண்டுகளுக்கு நடுவில்

விமானங்களிலிருந்து

விழும் குண்டுகளுக்கு நடுவில்

தொடர்

துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவில்

சூழ்ந்திருக்கும்

பீரங்கிகளுக்கு நடுவில்

ஒரு செய்தியாளன்

என்ன செய்கிறான் என்று

என்றாவது

யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா

உயிரைப் பணயம் வைத்து

ஒரு யுத்தக்களத்தில்

எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறான்

ஒரு செய்தியாளன் என்று

என்றாவது

யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா

 

யோசித்துப் பாருங்கள்

என்ன செய்ய வேண்டுமென்று

தெரியாமல் இருப்பவர்களே

எப்படிச் செய்ய வேண்டுமென்று

புரியாமல் இருப்பவர்களே

ஏன் செய்யவேண்டுமென்ற

கேள்விகளோடு இருப்பவர்களே

எதற்காகச் செய்யவேண்டும் என்ற

இறுமாப்போடு இருப்பவர்களே

போர் தொடங்கியதில் இருந்து

காஸாவின் நிலத்திற்குள்

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்

வல் அல் ததோவை

நினைத்துப் பாருங்கள்

இந்தச் சமூகத்திற்கு

நாம் செய்யவேண்டியது

என்னவென்று

ஒருவேளை விளங்கக்கூடும்

உங்களுக்கு

 

பேரழிவைக் காட்சிப்படுத்துகிறவனாக

பேரழிவின் சாட்சிக்காரனாக

வல் அல் ததோவின் கேமரா

இஸ்ரேலின் குண்டுவீச்சைப் போலவே

இடைவிடாமல்

இயங்கிக் கொண்டிருக்கிறது

வல் அல் ததோவின்

சக செய்தியாளர்கள்

படுகொலை செய்யப்படுகிறார்கள்

என்ன செய்ய முடியும்

எண்னிலடங்கா குழந்தைகளும் கூட

கொல்லப்படுகிறார்களே

தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்

வாய்கிழியப் பேசுகின்ற

நீதிமான்கள்

போர் என்ற பெயரில்

இழைக்கும் அநீதிகளை

உலகத்தின் கண்களுக்குக்

காட்சிப்படுத்துவதை

உயிரினும் மேலான

ஒன்றாக நினைத்து

இயங்கிக் கொண்டிருக்கிறார்

 

போர் தொடங்கியவுடனே

மனைவியையும் குழந்தைகளையும்

அகதி முகாமொன்றில்

பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு

செய்தியாளனாக

எல்லோருக்குமானவனாக

அலைபாய்ந்து கொண்டிருக்கும்

வல் அல் ததோவின்

காதுகளில் விழுந்த செய்தி

இதயத்தை நொறுக்குகிறது

கண்களைக் குளமாக்குகிறது

அகதி முகாம் மீது

குண்டு வீசப்பட்டதில்

அங்கிருந்த எல்லோரும்

அங்கிருந்த எல்லோரும்

சிதைந்தோ

புதைந்தோ

இறந்து போகிறார்கள்

குண்டுவீசி தகர்க்கப்பட்ட

அகதிமுகாம் இருந்த இடத்தை

வெறுங்கைகளால்

தோண்டிக் கொண்டிருக்கிறார்

யாரையும் காப்பாற்ற முடியவில்லை

மனைவி இறந்து போகிறார்

மகன் இறந்து போகிறார்

ஏழுவயது

மகள் இறந்து போகிறார்

ஒன்றரை வயது

பேரனும் இறந்து போகிறார்

ஒவ்வொருவராக

கைகளில் ஏந்தி

கனத்த இதயத்தோடு

புதைத்து முடித்துவிட்டு

கல்லறையைக் கண்ணீரால்

நனைத்து முடித்து விட்டு

மீண்டும் வேலையைத் தொடங்குகிறார்

கேமரா இயங்கத் தொடங்குகிறது

எதுவும் கேட்க முடியாமல்

பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்

பதில் சொல்கிறார் இப்படியாக

 

“மனதில் இன்னும்

நிறைந்திருக்கிறது வலி

ஆனாலும்

இந்தப் பேரழிவை

உலகிற்குச் சொல்வதற்காக

கேமரா முன்பு வந்துவிட்டேன்”

என்று வல் அல் ததோ

சொல்லிக் கொண்டிருக்கையில்

அவருக்குப் பின்னால்

வெடித்த குண்டுகளிலிருந்து

எழுந்த புகை

எல்லாவற்றையும் மறைக்கிறது

யாருக்கும் தெரியாமல்

அந்தப் புகைமூட்டத்திற்குள்

கொஞ்சநேரம் அழுதுகொள்கிறார்

வல் அல் ததோ

அவ்வளவுதான்

அவ்வளவுதான்

 

ஜோசப் ராஜா

Related Articles

3 comments

பெரணமல்லூர் சேகரன் 04/01/2024 - 1:49 PM

யுத்த களத்தின் செய்தியாளர் வல் அல் ததோ தனது சொந்தங்ளைக் கண்ணெதிரில் இழந்து கொண்டிருக்கும்போது கூட துக்க நதியில் மூழ்கியிருக்காமல் ஊடகப் பணியை இதய சுத்தியுடன் செய்து கொண்டிருப்பதை நினைக்கும்போது நெஞ்சு கணக்கிறது.

இத்தகைய நாயகர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் கவிஞர் ஜோசப் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வாசியுங்கள்
பரப்புங்கள்.

Reply
aji murugesan 06/01/2024 - 11:18 AM

மனதை உலுக்குகின்றன வல் அல் ததோவின் ஒவ்வொரு நிமிடங்களும்..

Reply
Baskaran F T 08/01/2024 - 11:41 AM

எப்படி யோசிக்கிறீர்கள் தோழர் ……ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறார்கலோ இல்லையோ உங்கள் கருத்துக்களால் உலகின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தில் பல அடுக்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலகம் எல்லாம் ஒரே மனித வம்சத்தைச் சார்ந்தவர்கள் தான் என்கின்ற உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் கவிதைகளும் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கின்றது. எந்த ஒரு யுத்த களத்திலும் இப்படி ஒரு புகைப்பட கவிஞனை பற்றி யாரும் இதுவரை எழுதினார்கள் என்று கேள்விப்பட்டதில்லை ஆனால் நீர் எழுதிய அந்த நிகழ்வு வலிகளை கனமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

Reply

Leave a Comment