யாகூப் மன்சூரி என்ற மனிதன்

த்திரபிரதேசத்தின்

ஜான்ஸி நகரில் இருக்கிறது

மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனை

அந்த மருத்துவமனையின்

பச்சிளம் குழந்தைகள் பிரிவில்

நாற்பத்தி ஒன்பது குழந்தைகள்

அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்

இளம் தகப்பானான

யாகூப் மன்சூரியும்

அவனுடைய மனைவியும்

அல்லாவின் கிருபையால்

தங்களுக்குக் கிடைத்த

இரட்டைக் குழந்தைகளை

நினைத்து நினைத்து

அளவற்ற மகிழ்ச்சியில்

காத்துக் கொண்டிருக்கிறார்கள்

குழந்தைகளின்

கண்களைப் பற்றி

காதுகளைப் பற்றி

சின்ன உதடுகளைப்பற்றி

அசையும் கைகளைப்பற்றி

அலைபாயும் கால்களைப்பற்றி

கதைகதையாய்க்

கதைகதையாய்ப்

பேசிக்கொண்டிருக்கிறார்கள்

இங்கு மட்டும்தான்

எங்கு எது நடக்கக்கூடாதோ

அங்கு அது நடக்கும்

அந்த மருத்துவம்னையில்

அதுவும்

அந்தக் குழந்தைகள் பிரிவில்

திடீரென்று பற்றியெரிகிறது நெருப்பு

மனிதர்களுக்கே தெரியாத போது

நெருப்புக்குத் தெரியுமா

குழந்தைகள் இருக்கிறார்களென்று

எரிகிறது நெருப்பு

பற்றியெரிகிறது நெருப்பு

இதயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்

குழந்தைகளும் கூடத்தான்

எரிந்து கொண்டிருக்கிறார்கள்

கொஞ்சமும் தாமதிக்கவில்லை

யாகூப் மன்சூரி

நாயகனைப் போல

நிஜமான நாயகனைப்போல

கண்ணாடி சன்னலை

உடைத்துக்கொண்டு

உள்ளே பாய்கிறான்

ஒவ்வொரு குழந்தைகளாகக்

காப்பாற்றுகிறான்

எரியும் நெருப்பில்

அங்குமிங்கும் அலைந்து திரிந்து

காப்பாற்றுகிறான் குழந்தைகளை

அப்படியும் கூடப்

பத்து குழந்தைகள் இறந்துவிடுகின்றன

அதில்

அவனுடைய இரட்டைக் குழந்தைகளும்

நெருப்பிற்கு இரையாகின்றன

கடைசியில்

இரண்டு குழந்தைகளையும்

தூக்கிக்கொண்டு

வெளியே வருகிறவனுக்கு

ஆறுதல் சொல்லவா

நன்றி சொல்லவா

என்று குழம்பிப் போகிறார்கள்

வெளியே இருக்கிறவர்கள்

அவன் மனைவியின் அழுகுரல்

அந்த இடத்திலிருந்த

மொத்த இதயங்களையும்

உடைத்து நொறுக்குகிறது

யாகூப் மன்சூரியால் காப்பாற்றப்பட்ட

குழந்தைகளின் பெற்றோர்கள்

ஓடிவந்து அவனை

அணைத்துக் கொள்கிறார்கள்

இந்த முட்டாள்கள்

எவ்வளவு முயன்றும்கூட

அன்பு

மானுட அன்பு மட்டுமே

மனிதர்களை

இணைத்துக் கொண்டிருக்கிறது

இங்கிருந்தபடி

இந்தக் காலையில்

யாகூப் மன்சூரியின் கரங்களை

இறுகப் பற்றிக் கொள்கிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 20/11/2024 - 8:14 AM

உத்தரப் பிரதேசத்தில் தரங்கெட்ட நிர்வாகத்தால் மருத்துவ மனைகளில் குழந்தைகள் இறப்பு தொடர்கதை. தற்போது தீ விபத்து வடிவிலான நிகழ்வு நெஞ்சை உருக்குகிறது‌. அதைவிட உருக்கமானது யாகூப் மன்சூரி தன் இரு குழந்தைகளையும் அந்த விபத்தில் இழந்த போதும் கண்ணாடியை உடைத்து இரு குழந்தைகளைக் காப்பாற்றியதுதான்.

இதுதான் இந்தியா. மத நல்லிணக்க மனித நேய இந்தியா. இத்தகைய நாட்டைத் தான் மதவெறிச் சிமிழுக்குள் அடைக்க பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது.

முறியடித்து முன்னேற வேண்டியது நமது மகத்தான கடமை.

விபத்து நிகழ்வைக் குறித்து கவிஞர் ஜோசப் ராஜா பதிவு செய்துள்ளதைப் படியுங்கள். மாற்றத்துக்காக முன்னேறுவோம்.

Reply

Leave a Comment