உலகத்தின் பெரும்பாலான மக்கள்
பயன்படுத்திக் கொண்டிருக்கும்
மைக்ரோசாப்ட்
மென்பொருள் நிறுவனம்
தன்னுடைய
ஐம்பதாவது ஆண்டுவிழாவைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
நிறுவனத்தின் முதலாளிகள்
மகிழ்ச்சியாக அமர்ந்திருக்க
மைக்ரோசாப்ட் நிறுவனம்
இந்த மனிதகுலத்திற்குச்
செய்து கொண்டிருக்கும்
சேவைகளை
நன்மைகளை
உதவிகளைப்
பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஊழியர்கள்
வலிந்து திணிக்கப்பட்ட
பெருமிதமும்
போலியான மகிழ்ச்சியும்
நிரம்பிய அந்த அரங்கில்
எதிர்பாராத தருணத்தில்
ஒருத்தியின் குரல்
ஓங்கி ஒலிக்கிறது
காஸாவின் மீது வீசப்பட்ட
எண்ணமுடியாத குண்டுகளில்
காஸாவின் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிய
கணக்கற்ற குண்டுகளில்
மைக்ரோசாப்டின் பங்கும்
மைக்ரோசாப்டின் கைகளும்
இருக்கிறதென்ற உண்மையை
உரக்கச் சொல்கிறாள்
எங்கிருக்கிறார்கள் குழந்தைகள்
எங்கிருக்கிறார்கள் பெண்கள்
எங்கிருக்கிறார்கள் அப்பாவிகள் என்று
பார்த்துப்பார்த்துக் கொலைசெய்ய
மைக்ரோசாப்ட் தன்னுடைய
செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை
கொடுத்து உதவியதை
உரக்கச் சொல்கிறாள்
அந்த அரங்கின்
குளுமையையும் தாண்டி
உண்மை சுடுகிறது எல்லோரையும்
படுகொலை செய்யப்பட்ட
குழந்தைகளின் ஓலங்கள்
ஒருகணம்
அறையை நிறைக்கின்றன
ஒழுங்கு நடவடிக்கை
என்ற பெயரில்
அந்தப் பெண்
பணிநீக்கம் செய்யப்படுகிறாள்
அன்பர்களே
அலுவலத்திலோ கல்லூரியிலோ
கன்னுங்கருத்துமாக
வேலைசெய்து கொண்டிருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்
வேலை இழக்க நேரிடும்
என்றறிந்தும்
இழந்தவர்களுக்காகப் பேசிய
அவளின் கரங்களைப்
பற்றிக் கொள்கிறேன் நான்!
ஜோசப் ராஜா