எத்தனையோபேர்
எத்தனையோமுறை
என்னிடம் கேட்டிருக்கிறார்கள்
பெரும்பாலான கவிதைகளில்
முதலாளித்துவத்தின் மீதான
வெறுப்பு நிறைந்திருக்கிறதே என்று
அன்பிற்குரியவர்களே
இந்தக் கவிதையிலும்
அந்த வெறுப்பைத்தான்
விதைக்கப் போகிறேன்
ஒரு தேசத்தின்
இயற்கை வளங்களையும்
ஒரு தேசத்தின்
மனித வளங்களையும்
ஒட்டுமொத்தமாகச் சுரண்டுவதற்கு
ஒரு முதலாளி
என்னென்னவெல்லாம்
செய்கிறான் என்பதை
அறியாதவர்களா நீங்கள்?
ஒரு முதலாளி
எப்படி உருவாகிறான் என்பது
அரசியல்வாதிக்குத் தெரியும்
ஒர் அரசியல்வாதி
எப்படி உருவாகிறான் என்பது
முதலாளிக்குத் தெரியும்
இந்த இரண்டு உண்மைகளையும்
தெரிந்துகொள்ள வேண்டிய நீங்கள்
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
வங்கிகளை
ஏமாற்றிய முதலாளியை
இப்போதுதான்
முதல்முறையாகப் பார்க்கிறீர்களா?
அப்படியென்றால்
இத்தனை வங்கிகளைக்
கொள்ளையடித்த பிறகும்
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
சந்தை மதிப்பைக் கூட்டிக்காட்டி
முதலீட்டாளர்களை ஏமாற்றிய முதலாளியை
இப்போதுதான்
முதல்முறையாகப் பார்க்கிறீர்களா
அப்படியென்றால்
இத்தனைபேரை ஏமாற்றியபிறகும்
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பங்குச்சந்தையைப் பயன்படுத்தி
பல்லாயிரம் கோடிகளை
ஏமாற்றிச் சம்பாதித்த முதலாளியை
இப்போதுதான்
முதல்முறையாகப் பார்க்கிறீர்களா?
அப்படியென்றால்
இவ்வளவு நடந்த பிறகும்
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
போலிப் பத்திரங்களை உருவாக்கிப்
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலி நிறுவனங்களை உருவாக்கிப்
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலிக் கணக்குகளை உருவாக்கிப்
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலி அரசியல்வாதிகளை உருவாக்கி
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலி மனிதர்களை உருவாக்கிப்
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலித் தேசப்பற்றை உருவாக்கிப்
பணம் சம்பாதிக்கும் இவர்களை
போலி போலி போலிகளை மட்டுமே உருவாக்கி
இழிவிலும் இழிவான ஒரு வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கும்
இப்படிப்பட்ட முதலாளிகளை
இந்தக் கொள்ளைக்காரர்களை
உருவாக்கும் இந்த
முதலாளித்துவ அமைப்பை
என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை
அதனால்தான்
நான் கவிதை எழுதுகிறேன்
இன்னும் சொல்லப்போனால்
இவ்வளவு மோசமான
இந்த முதலாளித்துவ அமைப்பை
வேரோடும் வேரடி மண்ணோடும்
வெட்டிச் சாய்க்கத்தான்
நான் கவிதை எழுதுகிறேன்
தோழர்களே!
முதலாளித்துவத்தை
வெறுப்பதற்கான காரணங்கள்
வேறொன்றுமில்லை
இலாபவெறிபிடித்த முதலாளிகள்தான்
பணத்தாசை கொண்டலையும் முதலாளிகள்தான்!
ஜோசப் ராஜா
03.02.2023