முதலாளித்துவச் சமூகத்தில் குழந்தைகள்

( புகைப்படம் : தி கலர் ஆஃப் பாரடைஸ் திரைப்படத்திலிருந்து )

வயல்வெளிகளிலும் வெட்டவெளியிலும்

பூங்காக்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளைத்

துரத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளைப்

பார்க்க முடியவில்லை

காலையிலும் மாலையிலும்

பறவைகளைத் துரத்திக்கொண்டு

பறவைகளைப்போலவே சிறகடித்துக்கொண்டு

பறந்து விளையாடும் குழந்தைகளைப்

பார்க்க முடிவதில்லை

சாரல் மழையில் துள்ளிவிளையாடும் குழந்தையைச்

சமீபத்தில் பார்த்த ஞாபகமே இல்லையெனக்கு

வழிப்போக்கனுக்கும் கூட

கள்ளங்கபடமில்லாத புன்னகைப் பூக்களை

அள்ளிக்கொடுக்கும் குழந்தைக் கூட்டங்கள்

பார்ப்பதற்கு அரிதான காட்சிகளாகிவிட்டன

எப்படி யோசித்துப் பார்த்தாலும்

இந்த முதலாளித்துவச் சமூகத்தின்

ஒட்டுமொத்த சீரழிவுகளும்

குழந்தைகளின் உலகத்தைத்தான்

கூடுமானவரையிலும் குத்திக் கிழித்திருக்கிறது

பெற்றோரின் ஆசைகள் பேராசைகளாக மாறி

குழந்தைகளின் எதிர்காலத்தைக்

கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறது

இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக

என்னுடைய குழந்தைகளின்

ஏன் எல்லோருடைய குழந்தைகளின் உலகத்தையும்

இதயத்தை திறந்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்

வீடே குழந்தைகளை அச்சுறுத்துவதற்காக

வெட்கப்பட வேண்டாமா நாம்

பள்ளிக்கூடங்களும் குழந்தைகளைப் பயமுறுத்துவதற்காக

வெட்கப்பட வேண்டாமா நாம்

கல்லூரிகள் குழந்தைகளைக் காவுகேட்பதற்காக

வெட்கப்பட வேண்டமா நாம்

யாருமே இல்லாத இடத்தின் தனிமையைக் கண்டு

குழந்தைகள் பயந்தால் பரவாயில்லை

நல்ல தொடுதலும் தீய தொடுதலும்

கற்றுக்கொண்ட ஒவ்வொரு குழந்தையும்

கூட்டம் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு இடத்தையும்

பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதற்காக

வெட்கப்பட வேண்டாமா நாம்

பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு குழந்தை

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் செய்தி

இந்தச் சமூகம் அழுகிக் கொண்டிருப்பதை

உணர்த்தவில்லையா உங்களுக்கு

தொலைக்காட்சிகளும் கைப்பேசிகளும்

உங்கள் குழந்தைகளையே உங்களிடமிருந்து

வெகுதூரத்திற்கு கொண்டுபோய்விட்டதை

எப்போது உணர்வீர்கள்

தேர்விற்குப் பயந்து உயிரை மாய்த்துக்கொள்ளும்

குழந்தைகளின் மரணங்களை எண்ணிக்கொண்டே

மரணத்தேர்வுகளை தொடர்ந்து கொண்டிருப்பவர்களை

மனநோயாளிகளாகத்தான் புரிந்துகொள்கிறேன்

குழந்தைகளுக்குப் பயன்படாத வீடுகள்

குழந்தைகளுக்குப் பயன்படாத பள்ளிக்கூடங்கள்

குழந்தைகளுக்குப் பயன்படாத பூங்காக்கள்

குழந்தைகளுக்குப் பயன்படாத வழிபாட்டுத் தலங்கள்

குழந்தைகளுக்குப் பயன்படாத திரைப்படங்கள் என

இந்தச் சமூகத்தில் இருக்கும் எதுவுமே

குழந்தைகளுக்கானதாக இல்லாமல் இருக்கும்போது

இந்த முதலாளித்துவச் சமூகம் மட்டும்

குழந்தைகளுக்கானதா என்ன

கல்வித் தந்தைகளின் பேராசைகளும்

முதலாளித்துவத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெற்றோர்களும்

குழந்தைகளின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருப்பதை

ஒரு கவிஞனாகப்

பார்க்க முடியாமல் பதறுகிறேன்

முட்டாள்களே பேராசைபிடித்தவர்களே

சோம்பேறிகளே தற்குறிகளே மூடர்களே

பைத்தியக்காரர்களே

மீண்டும் மீண்டும்மீண்டும்

ஒவ்வொரு குழந்தைகளின் சுதந்திரமான இதயத்திலும்

அடிமைத்தனங்களை விதைப்பதற்கு

உங்களுக்கு எந்த உரிமையுமில்லை

ஒவ்வொரு குழந்தைகளின் அற்புதமான கனவுகளையும்

ஒன்றுமில்லாமல் செய்வதற்கு

உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை

விட்டுவிடுங்கள்

குழந்தைகளை குழந்தைகளாகவே விட்டுவிடுங்கள்

மனித உறவுகளைச் சிதைக்கும்

மனித உறவுகளுக்குள் பிரிவினையை விதைக்கும்

மனித உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும்

மனிதர்களுக்கு எதிராக மதத்தைப் பிரயோகிக்கும்

மானுட அன்பை முழுமையாக மறுதலிக்கும்

இந்தக் கேடுகெட்ட சமூகத்திற்கு எதிராக

எதுவுமே செய்யமுடியாத உங்களால்

உங்கள் குழந்தைகளுக்கு ஒன்றையும் செய்துவிட முடியாது

விட்டுவிடுங்கள்

குழந்தைகள் வண்ணங்களில் மிதக்கட்டும்

விட்டுவிடுங்கள்

குழந்தைகள் பறவைகளோடு சிறகடிக்கட்டும்

விட்டுவிடுங்கள்

குழந்தைகள் கனவுகளில் சிரித்துக்கொண்டிருக்கட்டும்

உங்களால் முடியுமென்றால்

உங்கள் குழந்தைகளுக்காக மட்டுமல்ல

உங்களுக்காகவும்

பணமே பிரதானமாக இருக்கும்

இந்த முதலாளித்துவச் சமூகத்திற்கு எதிராக

சிந்திக்கத் தொடங்குங்கள்

உங்கள் குழந்தைகளின் கனவுகளில்

நிரந்தரமாக இருக்கும் அந்த உலகம்

உங்களுக்கும் நிம்மதியான மகிழ்ச்சியான

வாழ்க்கையை வழங்கும்!

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 20/09/2023 - 10:59 AM

குழந்தைகளுக்கான சமூக சூழலை உருவாக்காத மனித குலம் வெட்கப்பட வேண்டிய நியாங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

குழந்தைகளுக்காக பெற்றோர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் ஆட்சியாளர்களும் சிந்திப்பதும் செயல்படுவதும் எப்போது எனும் கேள்விக்கு விடை காண வேண்டியவர்கள் இனியேனும்…

குழந்தைகளுக்காக சிந்திப்பதும் செயல்படுவதுமாக வாழலாமே.

படியுங்கள்
பரப்புங்கள்

Reply
மைத்திரிஅன்பு 20/09/2023 - 12:56 PM

”உங்களால் முடியுமென்றால் / உங்கள் குழந்தைகளுக்காக மட்டுமல்ல / உங்களுக்காகவும் /
பணமே பிரதானமாக இருக்கும் / இந்த முதலாளித்துவச் சமூகத்திற்கு எதிராக / சிந்திக்கத் தொடங்குங்கள்” ஆம்.. ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தனித்தனியே காதுகளில் கேட்டு மனதில் உள்வாங்க வேண்டிய வார்த்தைகள். குழந்தைகளின் உலகம் இன்னும் அறிவியலுக்கும் அதன் கண்டுபிடிப்புகளுக்கும் கூட கைக்கெட்டாததாக இருக்கிறது. அதை புரிந்துகொண்டு செயல்படுவதாக இன்றும் சில கல்வி நிலையங்கள் தப்பட்டம் அடித்துக்கொண்டு – விளம்பரம் செய்து பிழைப்பு நடத்துகின்றன. குழந்தைகள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் அச்சமும் இன்றியே இம்மண்ணில் வாழ விரும்பிகிறார்கள். வாழ்கிறார்கள். அவர்கள் கிழிபடுவதை அவர்கள் பெரிதாக உணர்வதில்லை. அதன் வலியையும் வரலாற்றையும் அவர்கள் அறிந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அறிவைப் பகிர்வதாகச் சொல்லிக்கொள்ளும் முதலாளித்துவம், சமத்துவம் சகோதரத்துவம், உரிமம் என்று ஏமாற்றி பலி வாங்கிக்கொண்டே இருக்கிறது. இதை குழந்தைகள் குழந்தைகளாக இல்லாத ஒரு மனநிலையின் பொழுது உணர்வர். அவ்வுணர்வு பெரும் படையென புறப்பட்டும் பொழுதே.. இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென நினைக்கிறேன். ஆனால் அதற்குள் காலம் குழந்தைகளுக்கான சூழலை முற்றிலும் இல்லாமல் ஆக்கிவிடும் என்பதை அவசரமாக பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதற்கான வாய்ப்பை கவிஞரின் கவிதை வரிகள் ஏற்படுத்துகின்றன. வரவேற்போம்.

Reply

Leave a Comment