மாற்றம் ஒன்றே மாறாதது

அரசை அமைதியிழக்கச் செய்த அடிமைகள் (கி.மு.71)

மறந்திருக்க மாட்டீர்கள்

இன்று நேற்றல்ல

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்

ரோம சாம்ராஜ்ஜியத்தின் சோம்பேறிகள்

உண்ணவும் உறங்கவும் உற்சாகமாக இருக்கவும்

நேரகாலம் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள்

ஆயிரமாயிரம் அடிமைகள்

மன்னனுக்கும் மன்னனைச் சேர்ந்தவர்களுக்கும்

அரண்மனை வாசிகளின் அன்றாடத்திற்கும்

அவர்களின் எதிர்காலத்திற்கும் தேவையானவற்றை

வெயிலிலும் மழையிலும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்

ஆயிரமாயிரம் அடிமைகள்

பாபிலோனின் தொங்குதோட்டம் போன்ற

பாரம்பரியச் சின்னங்களை உருவாக்குவதற்காக

வியர்வையையும் இரத்தத்தையும்

மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்தார்கள் அடிமைகள்

அரண்மனைவாசிகளும் கூட

இது நிரந்தரமானதென்று நம்பத் தொடங்கினார்கள்

அரண்மனைவாசிகளும் கூட

இந்த நிலைமைகள் நிலைத்திருக்க வேண்டுமென்று

விரும்பத் தொடங்கினார்கள்

அதனால்தான்

அடிமைகளுக்கு அறிவு கொடுத்துவிடக் கூடாதென்பதில்

அவ்வளவு கவனமாக இருந்தார்கள்

ஆனாலும்

அடிமைகள் அடிமைகளாக இருப்பதற்காக

ஒவ்வொரு கடவுள்களையும் துணைக்கழைத்துக் கொண்டார்கள்

ஆனாலும்

அடிமைகளுக்கு சிந்திக்கும் வாய்ப்பை வழங்கிவிடக்கூடாதென்பதற்காக

ஓயாத உழைப்பில் அழுத்தி வைத்திருந்தார்கள்

ஆனாலும்

அடிமைகள் அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பதற்காக

அத்தனை தந்திரங்களையும் செய்தார்கள்

ஆனாலும்

அடிமைகள் அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்று

எஜமானர்கள் முடிவெடுத்தபோது

அடிமைகளும் சில முடிவுகளை எடுத்தார்கள்

ரோம சாம்ராஜ்ஜியத்தின் சோம்பேறிகளை மட்டுமல்ல

அடிமைகளின் அந்த முடிவானது

உலகெங்கும் அதிகாரத்தில் அமர்ந்திருந்த

ஒவ்வொருவனையும் குலைநடுங்கச் செய்தது

பார்த்து தெரிந்துகொள்ள முடியாத மலையின் ஆழத்திற்குள்

எரிமலை ஒளிந்திருப்பதைப் போல

வருடும் தென்றலில் உணர்ந்துகொள்ள முடியாத

சூறாவளி ஒளிந்திருப்பதைப் போல

அந்த அடிமைக் கூட்டத்திற்குள்ளிருந்து

பெரு நெருப்பாய் பெரும் சூறாவளியாய்

எழுந்து வந்தான் ஸ்பார்ட்டகஸ்

நிரந்தரக் கனவினில் நிலைத்திருந்த

அரசனுக்கெதிராக அடிமைகளைத் திரட்டி

அரண்மனையையே நடுநடுங்க வைத்தான்

சுதந்திர தாகத்தில்

சூரியனைக் காட்டிலும் பிரகாசித்துக் கொண்டிருந்த

அடிமைகளின் முகங்களை

அவ்வளவு எளிதாகப் பார்க்கமுடியவில்லை

அதிகாரத்தின் கண்களால்

ஆயிரமாயிரம் அடிமைகளின் ஓயாத உழைப்பால்

அரண்மனைக்குள் உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருந்த

ஒவ்வொரு சோம்பேறிகளும்

எதிர்காலத்தை எண்ணியெண்ணி

தூக்கமிழந்தார்கள் நிம்மதியிழந்தார்கள் துடிதுடித்துப் போனார்கள்

அடிமைகளாக நாம் பிறக்கவில்லை

அடிமைகளாக இருப்பதே நம் வாழ்க்கையல்ல என்று

ஒவ்வொரு அடிமையின் இதயத்திலும்

உண்மையைப் பாய்ச்சினான் ஸ்பார்ட்டகஸ்

ஒவ்வொரு அடிமையின் ஆன்மாவிலும்

நெருப்பை மூட்டினான் ஸ்பார்ட்டகஸ்

கேள்வியே கேட்காமல் உழைத்துக் கொண்டிருந்தவர்கள்

குனிந்ததலை நிமிராமல் உழைத்துக் கொண்டிருந்தவர்கள்

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரத்திற்கு எதிராகப்

படைதிரட்டி வந்துநின்று போரிட்ட காட்சியை

நினைத்துப் பார்க்கும் போது

இப்போதும் என் ரத்தநாளங்கள் சூடாவதை உணர்கிறேன்

உங்களுக்குத் தெரியுமா

ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்திற்கு உழைத்துக் கொட்டுவதற்காக

என்றும் என்றென்றும்

நிரந்தரமாக இருப்பார்கள் அடிமைகள் என்று

நினைத்திருந்தார்கள் அவர்கள்

ரோமாபுரி சாம்ராஜ்ஜியம் நிரந்தரமானதா என்று

அடிமைகள் நினைக்கத் தொடங்கியதுதான்

மனிதகுல வரலாற்றின் மகோன்னதமான வரலாறு

நம்புங்கள்

மாற்றம் ஒன்றே மாறாதது

நம்புங்கள் நாம் ஒன்றிணைந்தால்

நிலையானது என்று சொல்லப்படும் ஒவ்வொன்றையும்

நிலைகுலையச் செய்யலாம்!

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 19/09/2023 - 9:30 AM

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது நமது கடமை.

இதைத்தான் கவிஞர் ஜோசப் ராஜா சரியாகச் செய்துள்ளார்.

ரோமாபுரி சாம்ராஜ்யம் அடிமைகளைச் சுரண்டி மனித உரிமைகளை மிதித்து காட்டு தர்பார் நடத்திய காலகட்டத்தில் ஸ்பார்ட்டகஸ் நடத்திய எழுச்சிமிக்க போராட்டத்தை நினைவூட்டியுள்ளார்.

இந்தியாவிலும் அத்தகைய எழுச்சி ஏற்படாமல் போகாது.
ஆகவே தான் மார்க்சின் மகத்தான “மாற்றம் ஒன்றே மாறாதது” என்னும் நம்பிக்கை வரிகளை விதைக்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

விதைகள் முளைக்கட்டும். நாற்றாகி செடியாகி மரமாகி விருட்சமாகட்டும்.

Reply

Leave a Comment