மாஞ்சோலைப் பனியில் எரியும் இதயங்கள்

தே நாளில்தான்

இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால்

கூலி உயர்வு கேட்டதற்காகத்

தாமிரபரணித் தண்ணீருக்குள்

அதிகாரத்தின் கரங்களால்

மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்கள்

அந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள்

இப்போது

கூலியல்ல

வாழ்க்கையே கேள்வியாக

அந்தப் பனிக்காட்டுக்குள்

எரிந்து கொண்டிருக்கிறார்கள்

மாஞ்சோலைத் தொழிலாளர்கள்

மாஞ்சோலையைச்

சுற்றுலாத்தலமாக

அறிந்து வைத்திருப்பவர்களே

அந்தக் குளிருக்குள்

நூறு வருடங்களாக

அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்

ஆதி நெருப்பை

தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

உழைப்பின் நெருப்பை

இப்போதும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

இதயங்களின் நெருப்பை

இப்போதாவது

இப்போதாவது

இதயத்தைத் திறந்து

பார்க்க முயற்சிசெய்யுங்கள்

நீண்டு கிடக்கும்

அந்த மேற்குத்தொடர்ச்சி மலையில்

4300 அடி உயரத்தில்

வெறும் காடாகக் கிடந்ததை

நூறு வருடங்களுக்கு முன்னால்

அங்கிருந்த பழங்குடி மக்களும்

சமவெளிகளிலிருந்து ஏறிச்சென்ற

உழைக்கும் மக்களும்

சொற்ப கூலிக்கு

அந்தக் குளிரில்

அவ்வளவு உயரத்தில்

அந்த மலையில்

இரத்தம் உறிஞ்சும்

அட்டைப் பூச்சிகளுக்கு நடுவில்

உழைத்து உழைத்து

உழைத்தே உருவாக்கினார்கள்

தேயிலைத் தோட்டங்களையும்

ஏலக்காய்த் தோட்டங்களையும்

மிளகுச் செடிகளையும்

 

நியாயமாகப் பார்த்தால்

அந்த மாஞ்சோலை

உழைப்பாளர்களின்

வியர்வையும் இரத்தமும்

சிந்திச்சிந்தி உருவாக்கப்பட்ட

அந்த மாஞ்சோலை

அந்தத் தொழிலாளர்களுக்கே

சொந்தமாக வேண்டும்

 

னால்

கைவிட்ட முதலாளியைக் காட்டிலும்

அரசாங்கமும் நீதியும்

கண்மூடி மெளனமாக இருப்பது

பார்க்கச்

சகிக்க முடியாததாக இருக்கிறது

அரசையும்

முதலாளியையும்

ஒருசேரப் பணியவைக்க கூடிய

ஆற்றல் பேராற்றல்

உங்களிடமே இருக்கிறது

நான்கு தலைமுறைகளாக

அந்த மலையையும்

அந்தப் பனியையும்

அங்குள்ள வேலையையும்

மட்டுமே அறிந்த

அறநூறு குடும்பங்கள்

எரியும் இதயத்தோடு

அந்த உயரத்தில் இருந்து

உங்கள் எல்லோரையும்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

என்ன செய்யப் போகிறீர்கள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 24/07/2024 - 5:09 PM

மாஞ்சோலைத் தோட்டத் தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை தலைமுறை தலைமுறையாய்த் தொடர்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

படியுங்கள்
பரப்புங்கள்.

Reply

Leave a Comment