மலையின் அடிவாரத்தைத் தொட்டவுடனே
பூமியின் மொத்தச் சூடும் தணிந்து விடுகிறது
காதலின் முதல் அணைப்பில்
பதட்டத்தில் என்னுடல் குளிர்ந்து சில்லிட்டதைப் போல
மெல்லச் சில்லிடத் தொடங்குகிறது உடல்
தன்னை நோக்கி ஓடிவரும் குழந்தையைத்
தழுவிக் கொள்வதற்காய் நீளும்
தாயின் கரங்களைப் போல
என்னை நோக்கியும் நீண்டது மலையின் கரங்கள்
ஆதித்தாயின் கரங்களைப் பற்றிக் கொள்வதைப் போல
பற்றிக் கொண்டேன் மலையை
இடிக்குப் பயந்து தாயின் கால்களுக்குள் பாயும் குழந்தையாய்
நானும் பாய்ந்து பதுங்கிக் கொண்டேன் மலைக்குள்
தாயின் கருவறைக்குள் இருப்பதைப்போல உணர்கிறேன்
பச்சைப் பசேலென்று படர்ந்திருக்கும் மலையை
முத்தமிட்டேன் தொடர்ச்சியாக
எண்ணற்ற உயிர்களைச் சுமந்து கொண்டிருக்கும்
எண்ணற்ற உயிர்களின் வேர்களைத்
தனக்குள் தாங்கிக் கொண்டிருக்கும்
இந்த உலகத்தின் தாகத்தைத் தீர்ப்பதற்கான
எண்ணற்ற ஊற்றுக்கண்களைக் கொண்டிருக்கும்
அந்த அற்புதமான அழகைத்
தொடர்ச்சியாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தேன்
மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தவர்கள்
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை
என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்கள்
அந்தக் குளிரிலும் லேசான கதகதப்பை
உணரத் தொடங்குகிறேன்
எத்தனையோ காலடித் தடங்கள்
என்னைச் சுற்றிலும்
என்னுடைய காலடித் தடங்களையும்
பதிந்துகொண்டே போகிறேன் நான்
மலை மலை தான் எவ்வளவு அழகு
மலைக்குள்தான் எத்தனை அதிசயங்கள்
மலைக்குள்தான் எத்தனை இரகசியங்கள்
மலைக்குள்தான் எத்தனை எத்தனை காட்சிகள்
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால்
முளைத்தெழுந்த உறுதியான மலைகள்
எத்தனைமுறை பார்த்தாலும்
அடங்கா பிரமிப்பு ஆர்ப்பரிக்கத்தான் செய்யும்
கோடிக்கணக்கான தாவரங்களை
ஏந்திக்கொண்டிருக்கும் மலை
என்னையும் ஏந்திக் கொள்கிறது
கடலின் அலைகளைப் போல
பரந்துகிடக்கும் மலைத்தொடரைப் பார்க்க பார்க்க
பற்றிக்கொள்கிறது பரவச உணர்வு
உயர்ந்த மரங்களின் இலைகளோடு
உறவாடிக் கொண்டிருக்கும்
காற்றின் சப்தத்தை கேட்ககேட்க
இயற்கையின் இசையை இசையின் மேன்மையை
உணர்ந்து கொள்கிறேன் முழுவதுமாக
மனிதர்களால் பாழ்படுத்தப்படாத மலையின் நீர்ச்சுவை
மருந்துகள் தெளிக்கப்படாத மலையின் பழச்சுவை
மலைகள் பிரசவிக்கும் கிழங்கின் தனிச்சுவை
இன்னும் மாசுபடுத்தப்படாத காற்றின் அரவணைப்பு
எதையும் இழந்துவிடக்கூடாது
என்ற நிலையில் நிறைந்திருந்தேன்
அந்த மலையின் இரவு மறக்க முடியாதது
பக்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலா
பக்கத்தில் படர்ந்திருந்தன நட்சத்திரங்கள்
அத்தனை ஒளியும் அந்தப் பரந்த ஏரியில்
மிதந்து கொண்டிருந்தைப்
பார்த்துக் கொண்டிருந்த இரவு
இன்னும் பலநாள் நீடிக்கும் எனக்குள்
இன்னும் வரையப்படாத
அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த நொடிகள்
என்றும் நிலைத்திருக்கும் என் விழிகளில்
யாராலும் வரையப்படாத இயற்கையின் ஓவியங்களை
இதயம் முழுவதும் நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு காட்சி முனையிலும் அற்புதங்கள் காத்திருந்தன
எதையும் விட்டுவிடவில்லை
வரிசையாக வந்துகொண்டே இருந்தார்கள்
வெப்பத்தால் விரட்டப்பட்ட மனிதர்கள்
பார்ப்பதை விடவும்
படமெடுப்பதில் மட்டுமே ஆர்வங்கொண்டிருப்பதை
புரிந்துகொள்ள முடியவில்லை என்னால்
எல்லோரையும் விலக்கிக் கொண்டு
என் கண்கள் கண்ட காட்சியெல்லாம் இதுதான்
சிகரத்தில் இருந்து பார்க்கும்போது
சிறுத்துக் கிடக்கிறான் மனிதன்
உயர்ந்த கட்டிடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும்
பெரிய மாளிகைகளும் பெரிய நீர்த்தேக்கங்களும்
பெருமை என்று மனிதன் நம்பிக்கொண்டிருக்கும்
அத்தனையும் அத்தனையும்
சிறு புள்ளியாய்ச் சிறுத்துக் கிடந்தது
உயரத்தில் இருந்து பார்த்தால் ஒன்றுமில்லை நீ
உண்மையில் இருந்து பார்த்தால் ஒன்றுமில்லை நீ
என்று சொல்லிக்கொண்டே
இடுப்பிலிருக்கும் குழந்தையை
இறக்கிவிடும் தாயைப்போல
வளைவு நெளிவான சாலைகளின் வழி
பத்திரமாக இறக்கிவிட்டாள்
அந்த மலைத்தாய் அந்த ஆதித்தாய்
பேராசை பிடித்த மனிதர்கள் உன்னை விட்டுவைத்தால்
ஓ என் அன்பே மீண்டும் சந்திப்போம்!
2 comments
மலை குறித்த கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை என்னை மலைக்க வைத்தது.
மலைக்குள்ளும் இவ்வளவு அழகியல் ஒளிந்துள்ளதா எனும் பெருவியப்புப் பற்றிக் கொள்கிறது.
இயற்கையோடியைந்த வாழ்வெனின் மலையை விடுத்துக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இத்தகைய மலைத்தாயை விழுங்கும் மகாதேவன் களிடமிருந்து மலையைக் காக்க வாருங்கள்
அத்தகைய புனிதப் பணிக்குத் தூண்டகோலாகும் கவிதையைப் படியுங்கள்
பரப்புங்கள்.
அபாரம்
அருமை