வாழ்வைக் கண்டடைந்த பாதை இந்தப் பாதைதான்
அந்த மலைப்பாதையில்
முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கியபோது
மழை பெய்து கொண்டிருந்தது
சூரியனை ஒளித்து வைத்துக்கொண்டு
குளிர் விளையாட்டை
குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தன
மேகங்கள்
சமவெளியிலிருந்து மேகத்தை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவன்
மேகங்களுக்குள் நகர்ந்து கொண்டிருந்தேன்
பள்ளத்தாக்கிலிருந்து
சிகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன்
சிகரத்திற்குள் பயணித்துக் கொண்டிருந்தேன்
சிறுவயது முதலே
எனக்குள் வளர்ந்து கொண்டிருந்த
மலைத்தொடர்களின் மீதான
எல்லையற்ற காதல்தான்
என்னை இந்தச் சிகரத்திற்கு
கொண்டு வந்திருக்கிறது என்பதை
உறுதியாக நம்புகிறேன் இப்போது
நனைந்த மரங்களின்
ஒவ்வொரு இலைகளிலிருந்தும்
சொட்டுச்சொட்டாய்
சொட்டிக்கொண்டிருக்கிறது இசை
பெய்து கொண்டிக்கும்
மழையின் கரங்கள் மீட்டமீட்ட
அடர்ந்த சோலைகளுக்குள்ளிருந்து
எழுந்து வருகின்றன
சிம்பொனியின் பிரவாகம்
சாலையின் இரண்டு பக்கமும்
அடர்த்தியாக வளர்ந்திருக்கும்
தேயிலைச் செடிகளின் மீது
குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது
மழைத்துளிகள்
தேயிலைச் செடிகளுக்கிடையில்
உயர்ந்து வளர்ந்திருக்கும்
யூகாலிப்டஸ் மரங்களை
அண்ணாந்து பார்த்துப்பார்த்து
அதற்குமேல் பார்க்கமுடியாமல்
இறக்கிக் கொண்டேன் தலையை
குளிருக்குப் பயந்து பேருந்தின் ஜன்னலை
எல்லோரும் மூடியபின்னும் கூட
நான்மட்டும் மூடாமல் குளிர்ந்துகொண்டிருந்தேன்
சதா சூரியனோடு உறவாடிக் கொண்டிருந்தவன்
சதா வெயிலோடு விளையாடிக் கொண்டிருந்தவன்
வெப்பத்தில் வெப்பத்தில் மட்டுமே
அலைந்து திரிந்து கொண்டிருந்தவன்
சொல்லப்போனால்
இந்தக்குளிர் எனக்குக் கிடைத்த வரம்
இப்படித்தான் இப்படித்தான்
அந்த மலைப்பாதையின்
ஒவ்வொரு நாளின் பயணமும்
பரவசங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தன
ஒருநாள் காலையில்
மேகங்களோடு பேருந்திற்காக காத்திருந்தேன்
நெருக்கத்தில் கூட
எதையும் பார்க்கமுடியாத பனிமூட்டம்
அதோ மேகங்களுக்குள்ளிருந்து
வந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
இல்லை பேருந்தும்தான்
ஒரே ஒரு இருக்கைதான்
மிச்சமிருந்தது அந்தப் பேருந்தில்
குளிரில் எல்லோரும்
குறுகிப் போயிருந்தார்கள்
விடிந்தது தெரியாமல்
தூங்கிக் கொண்டிருந்தார்கள்
பெரிய கண்களை அகலத்திறந்து
இதமான புன்னகையோடு இடம்கொடுத்தாள்
ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த மலையரசி
தெய்வத்தின் அருகாமைக்காகவே
காத்திருந்தவனைப்போல
பேருந்திலும் ஏன் வாழ்க்கையிலும் கூட
அந்த மலையரசி கொடுத்த இடத்தை
இறுகப்பற்றிக் கொண்டேன்
காலையிலும் மாலையிலும்
குளிரிலும் மெல்லிய வெயிலிலும்
காதலின் பயணத்தைத்
தொடர்ந்து கொண்டிருந்தோம்
உங்களுக்குத் தெரியுமா
மலையரசியின் பெருங்கருணையாலும்
மலையரசியின் பேரன்பாலும்
ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு
மலை இன்னும் அழகானது
மரங்கள் இன்னும் அழகானது
காற்று இன்னும் அழகானது
வாழ்க்கை இன்னும் அழகானது
உழைக்கும் மனிதர்களைப்போல
ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும்
பேரழகானது என் கண்களுக்கு
இப்போதும் கூட
ஒவ்வொரு இரவின் கனவிலும்
அந்த மலைப்பாதையைப் பார்க்கிறேன்
அந்த மலைப்பாதையில் பயணிக்கிறேன்
அந்தப் பேருந்தில்
அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்
அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த
அந்த மலையரசியை
என் தோளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்
அப்படியே ஒவ்வொரு பொழுதும்
அழகாய்ப் புலர்வதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மலையென்பது
எனக்கு வேறொன்றுமில்லை
நீதான் என் அன்பே
உறுதியிலும் உன்னதத்திலும்
உன்னைத்தான்
உன்னை மட்டும்தான்
மலைபோல மலைபோலவே
நம்பிக் கொண்டிருப்பேன் என்றென்றைக்கும்
காதலென்பது
உனக்கும் எனக்குமான நம்பிக்கையென்றும்
காதலென்பது
நீயும் நானும் விட்டுக்கொடுப்பதென்றும்
காதலென்பது
ஒருவரையொருவர் மதிப்பதென்றும்
காதலென்பது
ஒளித்து வைக்கக்கூடாத உண்மையென்றும்
காதலென்பது சுதந்திரமென்றும்
காதலென்பது கவிதையென்றும்
சொல்லிக் கொடுத்ததற்காக
மலையரசியே எப்போதும் உனக்கு
நன்றியுள்ளவனாக இருப்பேன்!
ஜோசப் ராஜா
2 comments
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்கிறோம். ஐவகை நிலங்களில் ஒன்றான குறிஞ்சி யின் எழிலைக் கண்டு இன்பத்தின் உச்சிக்குச் சென்று கவிஞர் ஜோசப் ராஜா அனுபவித்துப் படைத்துள்ளார் நெடுங்கவிதையை.
வாசியுங்கள்
அனுபவியுங்கள் குறிஞ்சி எழிலை.
அடடா… அடடா அழகுணர்வு. அத்தனை இணக்கமாவது எப்படியோ? சமீபத்தில் நான் சில நண்பர் குழுமத்துடன் குடும்பம் குடும்பமாக மூணார் வரை பயணிக்க நேர்ந்தது. இதுவரை நான் மூணார் சென்றதில்லை. இரவு காஞ்சியில் புறப்பட்டு விடியலில் மலைமீது எங்களின் வாகனம் மெதுமெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. அச்சூழலில் திருப்பத்திற்கு திருப்பம் வண்டியில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி, இறங்கி அங்கு மலையழகா பனியழகா என்று பிரித்துப் பார்க்க முடியாத அந்த அழகியலுடன் மனம் கலந்தனர். ஏராளமான நிழற்படங்களை எடுத்துகொண்டனர். நான் ஒரு படத்திற்கும் என்னை ஆட்படுத்தாமல் அந்த மலையழையும் பணியினூடான எங்களின் பயணத்தையும் உள்வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்தேன். அந்த உணர்வு இக்கவிதையின் முற்பகுதியுடன் உணர்வாய் ஒன்றிணைகிறது. அத்தனை உணர்வுடன் கலந்த வரிகளாக இக்கவிதை வரிகள் எனக்குள் கரைகின்றன. அத்தனை அழகையும் வாழ்வையும் மலையரசியின் காதலுடன் இணைத்ததில் கவிதை மேலும் அழகாகவும் அர்த்தம் மிக்கதாகவும் மாறும் மாயாஜாலத்தை உணர முடிகிறது. சிறப்பு தோழர். மகிழ்ச்சி