மனநல மருத்துவரும் மரியமும்

“நன்றாகத் தூங்குகிறீர்களா?

நேரத்திற்குப் பசிக்கிறதா?

தலைசுற்றல் மயக்கம் வாந்தி

ஏதாவது இருக்கிறதா?” என்ற

மனநல மருத்துவரின்

எந்தக் கேள்விகளுக்கும்

பதில் சொல்லாமல்

இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த

மரியத்தை

மனநல மருத்துவரும்

உற்றுப் பார்த்தபடி

அமைதியாக உட்கார்ந்திருந்தார்

மெல்லிய குரலில்

“பிரச்சனையைச் சொல்கிறேன்

மருந்தும் கூட சொல்கிறேன்

உங்களால் முடியுமா என்று

நீங்கள் சொல்லுங்கள்”

என்று சொன்ன மரியத்தை

கூர்ந்து நோக்கினார் மருத்துவர்

அவள் இதயத்திற்குள்

வீசிக்கொண்டிருக்கும் சூறாவளியை

அவள் மூளைக்குள்

கேட்டுக் கொண்டிருக்கும் பெருவெடிப்பை

அறிந்து கொள்ள முடியாமல்

அனுபவமும் கைகொடுக்காமல்

தவித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்

“உங்களுக்குத் தெரியுமா மருத்துவரே

நீண்ட காலங்களாக

பாதுகாப்பு உணர்வே இல்லாத

அச்சத்தோடு

சுதந்திரம் பற்றிய கனவுகளோடு

இந்தத் திறந்தவெளியில்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்

ஒவ்வொரு முறையும்

ஓரிடத்திலிருந்து

இன்னொரு இடத்திற்கு

அச்சத்தைச் சுமந்துகொண்டுதான்

நகர்ந்து கொண்டிருக்கிறோம்

வழியெங்கும்

எண்ணற்ற சோதனைச்சாவடிகள்

வழியெங்கும்

எண்ணற்ற இராணுவவீரர்கள்

திருடனைப்போல

மறைவிடங்களிளெல்லாம்

ஒளிந்து கொண்டிருக்கும்

பீரங்கி வண்டிகள்

எப்போது தலையில்

குண்டுவிழும் என்ற பயம்

எப்போது இதயத்தைக்

குண்டுதுளைக்கும் என்ற பயம்

இந்தப் பயம் நிலையானதா

சொல்லுங்கள்

இந்தப் பதட்டம்

இப்படியேதான் இருக்குமா

சொல்லுங்கள்”

என்ற மரியத்தின் கேள்விகளுக்கு

எந்தப்பதிலும் சொல்லாமல்

மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்

“காதுகளைக் கிழிக்கக்கூடிய

பயங்கரமான குண்டுவெடிப்பின்

சத்தத்திற்கு நடுவில்தான்

குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம்

பால்சுரக்காத எங்கள் மார்புகளைப்

புறந்தள்ளிவிட்டு

குழந்தைகளின் உதடுகளைக்

கண்ணீரால் நனைத்துக் கொண்டிருக்கிறோம்”

என்று மரியம் சொல்லச்சொல்ல

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

பேச வார்த்தைகளில்லாமல்

பார்த்துக் கொண்டிருந்தார் மருத்துவர்

இப்போதுதான்

அவருக்கும் மெல்லப் புரியத்தொடங்கியது

மரியம்

தன்னுடைய வலிகளையல்ல

தன்னுடைய துயரங்களையல்ல

தன்னுடைய தேசத்தின் வலிகளை

தன்னுடைய தேசத்தின் துயரங்களை

சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று

“சாதாரண மருத்துவனால்

இதற்கென்ன மருந்துகொடுக்க முடியும்”

என்று கேட்டுவிட்டு

தலைகுனிந்தார் மருத்துவர்

தலைநிமிர்ந்த மரியம்

எனக்குத் தெரியும்

எங்கள் வலிகளுக்கெல்லாம்

ஒரே மருந்துதான் இருக்கிறது

எங்கள் தேசத்தின் சுதந்திரம்தான்

எங்கள் பாலஸ்தீனத்தின் சுதந்திரம்தான்

எங்களுக்கான மருந்து

என்று சொல்லிவிட்டு

எழுந்து சென்ற மரியத்தை

கண்ணீரைத் துடைத்தபடி

பார்த்துக் கொண்டேயிருந்த மருத்துவரின்

உதடுகள் இப்படியாக முணுமுணுத்தன

பாலஸ்தீனம் சுதந்திரமடையவேண்டும்

பாலஸ்தீனம் சுதந்திரமடையவேண்டும்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment