மக்கள் பாடகர் கத்தார்

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக

ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த

கத்தாரின் சலங்கைகள்

இப்போதும் எனக்குள்

ஒலித்துக் கொண்டிருக்கின்றன

நாதியற்றவர்களின் நாதமாக

குரலற்றவர்களின் குரலாக

புறக்கணிக்கப்பட்டவர்களின் பாடலாக

அழுத்தப்பட்டவர்களின் ஆறுதலாக

ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த

கத்தாரின் பாடல்கள்

இப்போதும் எனக்குள்

ஒலித்துக் கொண்டிருக்கின்றன

மக்களைப் பாடிய

மக்களுக்காகப் பாடிய

மக்களின் துயரங்களைப் பாடிய

மக்களின் ஏமாற்றங்களைப் பாடிய

அதிகாரத்தின் கரங்களால்

அளவுக்கதிகமாக அவர்கள்

அடக்கப்பட்டதை எதிர்த்துப் பாடிய

அற்புதமான அந்தக் கத்தாரின் பாடல்கள்

இப்போதும் இதயத்தில்

நிறைந்தபடி ஒலித்துக் கொண்டிருக்கின்றன

 

அடர்ந்த காடுகளையும்

புரட்சியின் கருத்துக்களால்

பற்றியெரியச் செய்த

அந்த மக்கள் பாடகனை

நினைத்துப் பார்க்கிறேன்

ஒவ்வொரு கிராமங்களிலும்

புரட்சியின் புதுவெள்ளத்தை

கரைபுரண்டு ஓடச்செய்த

அந்த மக்கள் பாடகனை

நினைத்துப் பார்க்கிறேன்

ஒவ்வொரு மேடைகளிலும்

மாற்றத்திற்கான விசையை

ஆயிரமாயிரம் இதயங்களுக்குள்

ஆழமாய்ப் பாய்ச்சிய

அந்த மக்கள் பாடகனை

நினைத்துப் பார்க்கிறேன்

ஒவ்வொரு நேரங்களிலும்

அதிகாரத்தின் இதயங்களை

கூடுமான வரையிலும்

அதிர்ச்சியிலேயே வைத்திருந்த

அந்தப் புரட்சிப் பாடகனை

நினைத்துப் பார்க்கிறேன்

 

இந்த நேரத்தில்

புரட்சியை நேசித்த

ஒவ்வொரு இதயங்களிலும்

கத்தாரின் சலங்கைகளும்

கத்தாரின் பாடல்களும்

ஒலித்துக் கொண்டிருக்கும் என்று

உறுதியாக நம்புகிறேன்

ஏனென்றால்

கத்தார் என்ற பெயர்

மானுட அன்பின் பெயர்

கத்தார் என்ற பெயர்

மானுட விடுதலையின் பெயர்

கத்தார் என்ற பெயர்

அடக்குமுறைகளுக்கு எதிரான பெயர்

கத்தார் என்ற பெயர்

மானுட சமத்துவத்தின் பெயர்

கத்தார் என்ற பெயர்

சமூக மாற்றத்தின் பெயர்

கத்தார் என்ற பெயர் புரட்சியின் பெயர்

புரட்சியை நேசித்த அந்தக் கத்தாரை

நானும் நேசிக்கிறேன்

கத்தார் விரும்பிய அந்தப் புரட்சியை

நானும் விரும்புகிரேன்

சென்று வாருங்கள் தோழரே

செவ்வணக்கம் செலுத்துகிறேன்!

Related Articles

3 comments

மைத்திரிஅன்பு 07/08/2023 - 10:47 AM

ஆம்! தோழர் பாட்டாளி வர்கத்திற்காகப் பாடி ஓய்ந்த கத்தார் என்றும் போற்றத்தக்கவர். வணங்குவோம் தோழரை… காலம் கடந்து அவர் குரல் பாடல்களாய் இன்னும் இன்னும் இம்மண்ணில் அடித்தட்டு மக்களுக்கான கீதமாக மேலெழுந்து ஒலிக்கட்டும்.

Reply
பெரணமல்லூர் சேகரன் 07/08/2023 - 11:41 AM

ஜோசப் ராஜா எழுதியது மக்கள் பாடகர் கத்தாருக்கான புகழஞ்சலி மட்டுமல்ல.

மறைந்த மகோன்னதக் கலைஞன் கத்தாரின் கனவான எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும் சமூகத்தைப் படைக்கும் வரை எழுதுபவர்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பாடுபவர்கள் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். களச்செயற்பாட்டாளர்கள் களப்பணி ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

செய்யுங்களேன் தோழர்களே!

Reply
சி.தனராஜ் 07/08/2023 - 12:02 PM

பாப்லோ நெருடாவை நினைவுக்கு கொண்டுவரும் தோழர். கத்தார் அவர்களின் மறைவு மனிதகுலத்திற்கேற்பட்ட மாபெரும் இழப்பு. அந்த இடத்தை தங்களைப்போன்றோர்தான் இட்டுநிரப்பவேண்டும் தங்கள் எழுத்துக்கள் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நன்றி தோழர்.ஜோசப்ராஜா அவர்களுக்கு.

Reply

Leave a Comment