படம் : ஆயிரத்தி அறநூறு கோடி மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குகிறது அமெரிக்கா
போர் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு
பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரங்கள்
நீடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்
குண்டுகள் பொழிந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு
காயம்பட்ட மனிதர்களின் கண்கள்
அழுதுகொண்டே இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்
எண்ணிலடங்கா நியாயங்கள் இருந்தாலும் கூட
போர் என்பது போர்தான் அல்லவா
கணக்கற்ற காரணங்கள் இருந்தாலும் கூட
போர் என்பது போர்தான் அல்லவா
வானத்திலிருந்து தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும்
குண்டுகளைப் பார்த்த குழந்தைகளின் கண்கள்தான்
கண்களுக்கு முன்னால் இடிந்துநொறுங்கிக் கிடக்கும்
கட்டிட இடிபாடுகளைப் பார்த்த குழந்தைகளின் கண்கள்தான்
தாயின் தோள்களுக்குள் புதைந்துகொண்டு
எங்கு செல்கிறோம் எதற்காகச் செல்கிறோம்
என்ற காரணங்களறியாமல்
தன்னுடைய வீட்டை
தன்னுடைய விளையாட்டுத் திடலை
தன்னுடைய பள்ளிக்கூடத்தை
தன்னுடைய அழகிய நினைவுகளை
திரும்பிப் பார்த்தபடி அகதியாய்ச் சென்று கொண்டிருக்கும்
ஒவ்வொரு குழந்தைகளின் கண்கள்தான்
உண்மையை விரும்பாத உலகத்திற்கு
போர் என்பது போர்தான் என்ற உண்மையை
மீண்டும்மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன

ஒர் அகதியின் கண்களை
உங்களால் பார்க்க முடியுமென்றால்
போரின் கொடுமைகளை
உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்
ஓர் அகதியின் இதயத்தை
உங்களால் வாசிக்க முடியுமென்றால்
போரின் விளைவுகளை
உங்களால் புரிந்துகொள்ள முடியும்
ஓர் அகதியின் வாழ்க்கையை
உங்களால் நெருங்கிச்செல்ல முடியுமென்றால்
போரின் காயங்களை
உங்களால் கண்டுகொள்ள முடியும்
இத்தனை ஏவுகணைகளும்
இத்தனை அணுகுண்டுகளும்
இத்தனை நவீனரகத் துப்பாக்கிகளும்
ஒவ்வொரு போர்களிலும்
இறுதியாகச் செய்துமுடித்தது என்ன
தேசங்களைச் சுடுகாடாக மாற்றியது மட்டுமல்லாமல்
வேறொன்றுமில்லை
தேசங்களைப் பிணக்குவியல்களாக மாற்றியது மட்டுமல்லாமல்
வேறொன்றுமில்லை
அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை
அகதிகளாக்கி அலைக்கழித்தது மட்டுமல்லாமல்
வேறொன்றுமில்லை
நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களின்
நிம்மதியைக் கெடுத்து நிலைகுலையச் செய்தது மட்டுமல்லாமல்
வேறொன்றுமில்லை
குழந்தைகளின் கனவுகளில் கொடூரங்களை நிறைத்தது மட்டுமல்லாமல்
வேறொன்றுமில்லை
எல்லாவற்றையும் விட முக்கியமாக
போர் என்பது
இலாபத்தை விரும்பும் முதலாளிகளின்
பேயாட்டமாக மாறியிருக்கிறது
போர் என்பது
ஆயுத வியாபாரத்திற்கு ஆசைப்படும் வியாபாரிகளின்
வெறியாட்டமாக மாறியிருக்கிறது
உக்ரைனை நோக்கி ஒவ்வொரு முதலாளித்துவ நாடுகளிலிருந்தும்
ஆயுதங்கள் பாய்ந்து கொண்டிருப்பது எதற்காக
அமைதியை நிலைநாட்டவா
உக்ரைனை நோக்கி ஒவ்வொரு முதலாளித்துவ நாடுகளிலிருந்தும்
உதவிகள் தொடர்ந்து கொண்டிருப்பது எதற்காக
மானுட மாண்பை வலியுறுத்தவா
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் வியாபாரமாக மாறியிருக்கிறது
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் சந்தையாக மாறியிருக்கிறது
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் பேராசையாக மாறியிருக்கிறது
போரை ஒழிக்க வேண்டுமென்றால்
முதலாளித்துவத்தை ஒழிப்பதைத் தவிர
நமக்கு வேறு வழியில்லை
ஒவ்வொரு போர்களிலிலும்
இரத்தம் குடித்து இரத்தம் குடித்து
இராட்சத அட்டையைப்போல
பெருத்துப் போயிருக்கிறது முதலாளித்துவம்
நம்முடைய முழுபலத்தையும் பிரயோகிக்காமல்
நம்முடைய முழுசக்தியையும் செலவழிக்காமல்
நம்மால் வீழ்த்த முடியாது முதலாளித்துவத்தை
நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்காக
நம்முடைய முழுபலத்தையும் பிரயோகிப்போம்
நம்முடைய குழந்தைகளின் அழகான எதிர்காலத்திற்காக
நம்முடைய முழுசக்தியையும் செலவழிப்போம்
இந்த உலகமும்
இந்த உலகத்தின் வளங்களும்
பேராசை மட்டுமேகொண்ட முதலாளிகளுக்கு மட்டுமானதா?
2 comments
போர்கள் நிகழ்த்தும் கொடூரங்களை விவரிக்கும் கவிஞர் ஜோசப் ராஜா விடுக்கும் வேண்டுகோள் என்ன?
“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
எனும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளாகத்தான் இருக்க முடியும்.
அதற்காகவேனும் வாசியுங்கள். மானுடத்தை நேசியுங்கள்.
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் வியாபாரமாக மாறியிருக்கிறது
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் சந்தையாக மாறியிருக்கிறது
போர் என்பது போர் மட்டுமல்ல
முதலாளித்துவத்தின் பேராசையாக மாறியிருக்கிறது
போரை ஒழிக்க வேண்டுமென்றால்
முதலாளித்துவத்தை ஒழிப்பதைத் தவிர
நமக்கு வேறு வழியில்லை….
எனது ஒற்றை முழக்கமும் மேலே சொன்ன வார்த்தைகள் தான்….
முதலாளித்துவம் ஒழிப்போம்
சமத்துவம் படைப்போம்….