பேரழிவை உண்டாக்குவதைத்தவிர
என்ன செய்துவிடப்போகிறது போர்
எண்ணிலடங்கா மரணங்களை
பிரசவிப்பதைத் தவிர
என்ன செய்துவிடப்போகிறது போர்
நடந்து கொண்டிருந்தவனை
முடவனாக்குவதைத் தவிர
பார்த்துக் கொண்டிருந்தவனைக்
குருடனாக்குவதைத் தவிர
உறவுகளில்லாமல் ஒருவனை
அனாதையாக்குவதைத் தவிர
என்ன செய்துவிடப் போகிறது போர்
உணவுப்பொருட்களின்
தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தவிர
பணவீக்கத்தை
அதிகரிக்கச் செய்வதைத் தவிர
வேலையில்லாத் திண்டாட்டத்தை
பெருக்குவதைத் தவிர
என்ன செய்துவிடப் போகிறது போர்
கல்விக்கூடங்களை மூடச்செய்திடுவதைத் தவிர
வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச்செய்திடுவதைத் தவிர
மருத்துவமனைகளைச் சுடுகாடாக்குவதைத் தவிர
என்ன செய்துவிடப் போகிறது போர்
இந்தப் போர்கள்
எதற்காக நிகழ்த்தப்படுகின்றன
இந்தப் போர்கள்
எதற்காக நீட்டிக்கப்படுகின்றன
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
அழைப்பு விடுக்கிறவனின் கைகளில்
அணு ஆயுதங்கள் நிறைந்திருக்கின்றன
யுத்தத்திற்கு எதிராகக்
கருத்துச் சொல்கிறவனின் கைகளோ
இரத்தக்கறைகளால் நிறைந்திருக்கின்றன
உண்மையிலேயே
மனித சமூகத்தின் மீதும்
அதன் எதிர்காலத்தின் மீதும்
அக்கறை இருக்கிறதா இவர்களுக்கு
நேட்டோவின் கைகளிலிருந்து
உக்ரைனை நோக்கி
இவ்வளவு ஆயுதங்கள்
வாரிவழங்கப்படுவது
யுத்தத்தை நிறுத்துவதற்காகவா
ஆயுதங்களை
அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு தேசங்களிலிருந்தும்
எதிர்ப்புக்குரல்கள்
எழுந்து கொண்டிருக்கும் போதும்
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத
போர்வெறிகொண்ட நேட்டோவின் இதயம்
எதற்காக எதற்காக
உக்ரைனுக்காக இவ்வளவு வேகமாகத்
துடித்துக் கொண்டிருக்கிறது
பெரும்பான்மை மக்கள் விரும்பாத போர்
முடியாமல் நீண்டு கொண்டிருப்பதற்கு
காரணம் என்ன?
பெரும்பான்மை மக்கள் விரும்பாத அரசாங்கம்
வீழாமல் இருந்து கொண்டிருப்பதும்
பெரும்பான்மை மக்கள் விரும்பாத சமூகமைப்பு
அழியாமல் இருந்து கொண்டிருப்பதுமே
அசைக்கமுடியாத காரணமாகிறது
எதிர்காலத்தைக் குறித்த அச்சம்
இப்போதும் கூட
உங்களை ஆட்கொள்ளவில்லையா
சந்ததிகளைக் குறித்த பேரச்சம்
இப்போதும் கூட
உங்களைச் சூழ்ந்துகொள்ளவில்லையா
கன்னிவெடிகள் புதைக்கப்பட்ட நிலமெங்கும்
பூக்களைப் பார்க்க ஆசையில்லையா உங்களுக்கு
வெடிகுண்டுகள் வீசப்பட்ட மண்ணில்
விதைகளைத் தூவ விருப்பமில்லையா உங்களுக்கு
அத்தனை அணு ஆயுதங்களையும்
பாதுகாப்பிற்காகத்தான் வைத்திருக்கிறோம்
என்று சொல்லிக்கொண்டிருக்கும்
இந்தப் பைத்தியக்காரர்களை
பார்க்கப்பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு
தேசப்பற்றை விதைத்துவிட்டு
ஆயுதங்களை அறுவடைசெய்யும்
இந்த அயோக்கியர்களை
பார்க்கப்பார்க்கக் குமட்டுகிறது எனக்கு
பெருந்திரளான மக்கள்
பட்டினி கிடக்கும்போது
பெருந்திரளான மக்கள்
பசிப்பிணியால் செத்துக் கொண்டிருக்கும்போது
பெருந்திரளான மக்கள்
வேலையில்லாமல் வேதனையிலிருக்கும்போது
எதற்காக இந்த முட்டாள்கள்
ஆயுதங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள்
எதற்காக இந்த மிருகங்கள்
ஒவ்வொரு தேசத்தையும் குறிவைத்து
யுத்தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
இந்தக் கேள்விகளை
மீண்டும் மீண்டும் கேளுங்கள்
உங்கள் கேள்விகள்தான்
மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது
உங்கள் கேள்விகள்தான்
புரட்சிகளைப் பிரசவிக்கப்போகிறது
உங்கள் கேள்விகள்தான்
கவிதைகளாக உருமாறப் போகிறது
பேராசை ஒன்றுமில்லை
அன்பும் கருணையும் நாகரீகமும்
கொண்டவனாக
மனிதனைப் பார்க்கவேண்டுமென்ற
சின்னஞ்சிறு ஆசைதான்
இந்தக் கவிஞனின் ஆசை!
2 comments
அருமை கவிஞர் ஜோசப் ராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
போருக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக சிறந்த கவிதையை, நேசம் மிகுந்த கவிதையை, மக்கள் அன்பு மிகுந்த கவிதையை,மக்களின் படைப்பாற்றலை நேசிக்கின்ற கவிதையை எழுதியுள்ள கவிஞருக்கு எனது பாராட்டுக்கள். மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என உக்கிரன் நாட்டு அதிபர் கெலன்ஸ்கி அறிவித்துவிட்டார்.இத்தகைய நிலையில் மக்களின் நேசத்தை வெளிப்படுத்தி,போர் வெறியின் அழிவையும் நேட்டோ ஆயுதம் கொடுப்பதையும் கண்டிப்பதுடன் மக்களின் எதிர்காலத்தை நேசித்து எழுதப்பட்டுள்ள இக்கவிதையை போற்றுவோம்.உழைக்கும் மக்களிடம்,சனநாயக-சோசலிச
அறிவாளிகளிடம் இக்கவிதையை கொண்டு செல்வோம்; வாழ்த்துக்கள்.
“போரும் மானுடத் திரளும்”- கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்க்கப் புறப்பட்ட கவிதை
ஏகாதிபத்திய ஓநாயின் ஆயுத விற்பனை இலக்கில் மண்ணள்ளிப் போடும் கவிதை
மக்கள் அமைதியாக வாழக் குரலெழுப்பும் கவிதை
அதிகாரவர்க்க ஆசைகளை மண்மூடும் கவிதை
மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கும் கவிதை
பரப்புங்கள் கவிதையை
நிரப்புங்கள் மனிதத்தால் புவியை