வாழ்வாதாரத்திற்கான
சாதாரண கோரிக்கைகளை
வலியுறுத்திப் போராடிக் கொண்டிருந்த
தூய்மைப் பணியாளர்களை
இரவோடு இரவாக
வலுக்கட்டாயமாக
வழக்கம்போல
வன்முறையைப் பயன்படுத்தி
அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்
வாய்கிழிய
சமூகநீதி பேசுகிறவர்கள்
நகரவாசிகள்
தூக்கியெறியும்
குப்பைகளை
அன்றாடம் அப்புறப்படுத்தும்
தூய்மைப் பணியாளர்களை
கடைசியில்
குப்பைகளைப் போலவே
அப்புறப்படுத்தியிருக்கிறது
ஏழைத் தொழிலாளர்களின்
எளிய வாழ்க்கையில்
இருளைப் பாய்ச்சும்
இந்த விடியல் அரசு
எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும்
எளிய மக்களுக்கு எதிராக
என்ன செய்யுமோ
அதைத்தான்
இவர்களும் செய்கிறார்கள்
ஏன்
தொடர்ந்து செய்கிறார்கள்
எங்கே இருக்கிறது சமூகநீதி
எங்கே வந்துவிட்டது விடியல்
இந்தச் சமூகத்திற்கு
எந்த விதத்திலும்
பயனே இல்லாத
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும்
அதைப்பற்றிப் பேசுவதற்கும்
வெட்கமே இல்லாமல்
அந்தப் புகைப்படத்தை வெளியிடுவதற்கும்
என
இதற்காகவா
இதற்காகவா
இந்த மக்கள்
உங்களுக்கு
அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்
யாருடைய உழைப்பில்
உங்களுடைய நாற்காலிகள்
உறுதியாக இருக்கின்றன
யாருடைய உழைப்பில்
உங்கள் மாளிகைகள்
ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன
யாருடைய உழைப்பில்
உங்கள் நாட்கள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
அதிகாரம்
நிரந்தரமானது என்றா
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
அனகாபுத்தூர் போன்ற
ஆற்றங்கரை ஓரங்களில்
குடியிருந்த மக்களையெல்லாம்
இப்படித்தான்
ஆயிரமாயிரம் காவலர்களோடு வந்து
அப்புறப்படுத்தினீர்கள்
ஆற்றைப் பாதுகாக்கப் போகிறோமென்று
பொய் சொன்னீர்கள்
மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள்
அதே ஆற்றின் கரையோரம்
ராட்சத இயந்திரங்களைக் கொண்டுவந்து
வேலையைத் தொடங்கிவிட்டார்கள்
ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்
முதலாளிகளின் நலன்களுக்காகத்தான்
முதலாளிகளின் நலன்களுக்காக மட்டும்தான்
இருக்கிறீர்கள் என்பதை
புரிந்து கொள்வார்கள் மக்கள்
அன்றுதான்
அன்றுதான்
ரிப்பன் மாளிகைக்கு வெளியே
போராடிய தூய்மைப் பணியாளர்கள்
ரிப்பன் மாளிகைக்குள் நிறைந்திருக்கும்
அழுக்கை மட்டுமல்ல
உங்கள் அதிகாரத்தையும்
ஒன்றுமில்லாமல் துடைத்தழிப்பார்கள்
உங்கள் ஒட்டுமொத்தப் பொய்களும்
அம்பலப்படுத்தப்படும்
அவர்களுக்கான அரசாங்கத்தை
அவர்களே அமைத்துக்கொள்வார்கள்
உழைக்கும் மக்களின் மீது
அதிகாரத்தைப் பாய்ச்சிய
எந்த அரசும்
நிலைத்திருந்ததாக வரலாறு கிடையாது
மக்கள்
வரலாற்றைப் படைப்பார்கள்
தோழர்களே
போராடுவோம் அதிகாரத்திற்கு எதிராக!
ஜோசப் ராஜா
