போகுமிடம் வெகுதூரமில்லை

வியாபாரம் கலையைத் தீர்மானம் செய்யும் இடத்தில் இருக்கிறது. கலைஞர்களும் சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டு கச்சிதமான வியாபாரிகளாக மாறிவிட்டது மட்டுமல்லாமல், அதுதான் வெற்றியென்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்கான செலவுகளைத் திட்டமிடும்போதே, விளம்பரத்திற்கான செலவும் அதில் சேர்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட திரைப்படத்திற்கான செலவும், விளம்பரத்திற்கான செலவும் இணையாக இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களா நீங்கள்? பார்வையாளனை மகா முட்டாளாக்கக்கூடிய காரியம் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டு விளம்பரம் என்ற பெயரில் இயக்குநர் பேசுகிறார், தயாரிப்பாளர் பேசுகிறார், நடிகர், நடிகைகள் பேசுகிறார்கள். துணை நடிகர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பார்வையாளர்களையும் கூட அவர்களே உருவாக்கி, அவர்களுக்குத் தகுந்தவாறு பேசவைக்கிறார்கள். வருங்காலத்தில் படங்களில் காட்டப்படும் மரங்களும், செடிகளும், கொடிகளும், காடும், மலையும், கடலும்கூட செயற்கைத் தொழில்நுட்பத்தில் அந்தப் படத்தைப் பற்றியும், அந்த இயக்குநரின் திறமையைப் பற்றியும், அதில் நடித்தவர்களின் கலை தாகத்தைப் பற்றியும் பேச வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் பணம். பணமே பிரதானம். மலைபோல் குவிந்திருக்கும் பணத்திற்கு முன்னால், கலை கடுகைப்போலச் சிறுத்துக்கிடப்பது வேதனையைக் கூட்டுகிறது.

இந்தச் சூழலில், எந்தவொரு ஆர்ப்பாட்டமுமில்லாமல், வியாபாரத் தந்திரங்கள் இல்லாமல் அமைதியாக வெளிவந்திருக்கும் நல்ல திரைப்படம் போகுமிடம் வெகுதூரமில்லை. திரையை நிறைக்கும் கூட்டங்களில்லாமல், நாயகனின் சாகசங்கள் இல்லாமல், முகம்சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் எதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு வாழ்க்கையை அப்படியே காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது இந்தத் திரைப்படம். எளிய மனிதர்களின் வாழ்க்கையில் எத்தனை கதைகள் இருக்கின்றன என்று அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது. இன்னும் சொல்லப்படாத கதைகள் ஏராளம் என்பதைக் கலைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பயணக்கதைகள் ஏராளமாக வெளிவந்திருந்தாலும் கூட, இந்தப் பயணம் உங்களைப் பதட்டம்கொள்ளச் செய்யும். போகுமிடம் வெகுதூரமில்லை என்று சொல்லிக்கொண்டே உங்களைக் கரம்பிடித்து அழைத்துச்செல்லும். எளிய மனிதனின் வாழ்விலிருந்து தொடங்கி, அத்தியாவசியத் தேவைக்கான பணத்திற்காக அவனுடைய பயணத்தின் வழியாக மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டிச்செல்கிறது. பொதுவாக ஒரு மரணத்தின் முன்னால் நான் என்கிற அகந்தை முற்றிலும் அழிந்து தொலைய வேண்டும். ஆனால் அவ்வளவு லேசுப்பட்டவர்களா மனிதர்கள்! அகந்தையைத் தூக்கிக் கொண்டுதான் அங்குமிங்கும் சதா அலைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நோக்கித்தான் இந்தக் கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வழிப்போக்கனை விட்டுவிட்டு இந்தக் கதையைக் கடந்துவிட முடியாது. உங்கள் வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத வழிப்போக்கன் உங்கள் வாழ்க்கையிலும், இதயத்திலும் நீங்கள் அறியாமலேயே ஊடுருவி இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? வழிப்போக்கர்கள் வெறும் கானல் நீரைப்போன்ற வெறும் மாயத்தோற்றம் கிடையாது. சில சமயங்களில் பெருங்கருணையை உங்கள்மீது இறக்கிவிட்டுப் போவார்கள். சில சமயங்களில் பேரன்பை உங்கள்மீது பொழிந்துவிட்டுப் போவார்கள். வாழ்வின் இருண்ட பக்கங்களின்மீது சில நேரங்களில் ஓளியை அள்ளி வீசிவிட்டுப் போவார்கள். அப்படி ஒரு வழிப்போக்கன் இந்தக் கதையின் மீதும், பார்வையாளர்களாகிய நம்மீதும் ஒளியூட்டிச் செல்கிறான். அழிந்து கொண்டிருக்கும் கூத்துகலையில், மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் கலைஞனான நளின மூர்த்தி என்ற கதாபாத்திரம் என்றும் நினைவில் இருக்கக்கூடியது என்றால் நிச்சயம் அது மிகையல்ல.

கூத்தை விட்டுவிட்டு, கூத்தின் எச்சங்களை எரித்தழித்துவிட்டு வழிப்போக்கனாக வண்டியில் ஏறும் நளினமூர்த்தி மானுட அன்பின் மகத்தான பாதையை நமக்குக் காட்டிச் செல்கிறான். அன்பை வலியுறுத்துவதில்லாமல் கலையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக இதயத்தைக் கட்டிப்போட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தேன், அவ்வளவுதான். நீங்களும் ஒருமுறை பாருங்கள். படுகொலைகளைப் பிரசவித்துக் கொண்டிருக்கும் யுத்தம் உலகத்தைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வெறுப்பல்ல அன்புதான் தேவையாக இருக்கிறது. அன்பை வலியுறுத்தும் கவிதைகளும், கதைகளும், திரைப்படங்களும்தான் தேவையாக இருக்கிறது. வியாபாரிகளின் கைகளிலிருந்து கலையைக் காப்பாற்ற நாமென்ன செய்யமுடியும் என்று பின்வாங்காதீர்கள். நல்ல படைப்புகளை ஆதரிப்பதின் மூலம், நல்ல கலைகளைக் கொண்டாடுவதன் மூலம் வியாபாரிகளை உங்களால் வீழ்த்திவிட முடியும், நம்புங்கள்.

இயக்குநர் மைக்கேல் கே ராஜா அவர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போகுமிடம் வெகுதூரமில்லை. பயணிப்போம்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment