பொருளாதார சுனாமி

பற்றியெரியும்

ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும்

உங்கள் பாராமுகமும்

உங்கள் பேரமைதியும்

என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது

பூகம்பங்கள் நிகழும்போது

பூக்களையா பறித்துக் கொண்டிருப்பீர்கள்

எரிமலைகள் வெடிக்கும்போது

வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பீர்கள்

சுனாமியின் அலைகள்

கடலுக்குள்ளிருந்து மட்டுமல்ல

பொருளாதாரத்திற்குள்ளிருந்தும்

புறப்பட்டு வரும்

எப்போதும் போல

அப்போதும் நீங்கள்

பார்த்துக் கொண்டே இருந்தீர்களானால்!

பணமதிப்பிழப்பை

அறிவித்ததைப் போல

ஊரடங்கை

அறிவித்ததைப் போல

கண்ணிமைக்கும் நேரத்தில்

தேசத்தின் பொருளாதாரம்

திவால் என்று அறிவித்தால்

என்ன செய்வீர்கள்?

குழந்தைக்குப் பாலில்லாமல்

தவியாய்த் தவித்த தாய்மார்களை

பார்த்தீர்கள் அல்லவா!

விண்ணைமுட்டிய

விலைவாசி ஏற்றத்தால்

அத்தியாவசியப் பொருட்களை

வாங்குவது என்ன

தொடக்கூட முடியாத

துயரங்களையெல்லாம்

பார்த்தீர்கள் அல்லவா!

உலகத்தின்

மாபெரும் மாற்றங்களெல்லாம்

உங்கள் கண்களுக்கு முன்னால்தானே

நடந்து கொண்டிருக்கின்றன

எத்தனை வீழ்ச்சிகள்

எத்தனை எத்தனை எழுச்சிகள்

உங்கள் கண்களுக்கு முன்னால்தானே

நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!

தேசத்தின் வளங்களையெல்லாம்

சுரண்டிக் கொழுக்கும்

ஒரு முதலாளியை

வளர்ச்சியின் அடையாளமாக

வெற்றியின் அடையாளமாகத்

தேசத்தின் அடையாளமாகப்

பார்த்துக் கொண்டிருப்பதை

எப்போது நிறுத்த போகிறீர்கள்?

ஒரு தேசத்தின் பொருளாதாரத்தைத்

தாங்கிப் பிடித்திருக்கும் கைகள்

ஒற்றை முதலாளியினுடையதா

கோடிக்கணக்கான தொழிலாளர்களுடையதல்லவா

கோடிக்கணக்கான விவசாயிகளுடையதல்லவா

ஒவ்வொரு முதலாளியும்

தின்று செரிக்கும்

கோடிக்கணக்கான ரூபாய்களும்

யாருடைய இரத்தத்தால்

யாருடைய வியர்வையால்

விளைந்தெழுந்து வருகின்றன

இந்த மாபெரும் திருட்டை

உங்களால் தடுக்க முடியும்

இந்த மாபெரும் மோசடியை

உங்களால் அம்பலப்படுத்த முடியும்

பணத்தை மட்டுமே நேசிக்கும்

இலாபத்தை மட்டுமே விரும்பும்

இந்த அற்பப் புழுக்களை

உங்களால் நசுக்கிவிட முடியும்

உங்களைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும்

சாதிவலையைப் புரிந்துகொள்ளும்போது

மதப்பின்னலை அறிந்துகொள்ளும்போது

புதிய கோஷங்களுடன்

ஒலித்துக் கொண்டிருக்கும்

போலித் தேசபக்தியைப் புரிந்துகொள்ளும்போது

எல்லாவற்றிலும்

பணத்தை மட்டுமே பார்க்கும்

எல்லாவற்றையும்

பணமாய் மட்டுமே பார்க்கும்

இந்த அற்ப மானிடர்களை

அழிவின் அடையாளங்களை

நிச்சயமாய் நிச்சயமாய் நிச்சயமாய்

உங்களால் ஒன்றுமில்லாமல்

செய்துவிட முடியும்

நம்புங்கள்

நம்பமுடியாத காரியங்களையெல்லாம்

செய்துமுடிக்கக் கூடியவர்கள்

நீங்கள்தானென்று நம்புங்கள்

நம்முடைய துயரங்கள்

நம்மோடு போகட்டும்

நம்முடைய ஏமாற்றங்கள்

நம்மோடு முடியட்டும்

மீண்டும்

ஒர் அரசியல்வாதியும்

ஒரு பணக்காரனும்

ஒன்றாக வளர்வதை

ஜனநாயகத்தின் கண்களைக்

கடன்வாங்கிக் கூட

பார்க்க முடியாது என்னால்

பார்க்கவே முடியாது என்னால் !

Related Articles

3 comments

முனைவர் பெ.அண்ணாதுரை 06/02/2023 - 5:08 PM

அருமை கவிஞர் ஜோசப் ராஜா
அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
**********
இன்றைய இந்திய ஒன்றியத்தில் உழைப்பாளி மக்களின் உழைப்புச் செல்வங்களைப் பகல் கொள்ளை அடிக்கும் அதானி,அம்பானி முதலாளிகள்.

தொழிலாளர் வர்க்க உழைப்பால் உருவான,இந்திய ஒன்றியத்தின் பெரும் செல்வங்கள் இந்துத்துவ பாசிச ஒன்றிய அரசின் செல்வாக்கால் அள்ளி சுருட்டும் இந்திய முதலாளிகளால் இந்திய ஒன்றிய பொருளாதாரம் நாளொரு மேனியாக வீழ்ச்சி நோக்கி செல்கிறது.

இதனால் உழைக்கும் மக்களின் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இத்தகையை அவல நிலையை,மோசடியை அம்பலப்படுத்தும் இலக்கிய நடையுள்ள கவிதையை வழங்கியதுடன் உழைக்கும் மக்களின் உன்னதத்தை,பேராற்றலை எடுத்துக்காட்டும் இக்கவிதை போற்றுதலுக்குரியது.

இக்கவிதையை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம்.

Reply
பா மோகன் தாஸ் 06/02/2023 - 9:16 PM

எத்துணை அநியாயங்களையும் வலிகளையும் தான் அனுபவித்தும்,பிறர் அனுபவித்தலையும் கண்கூடாக பார்த்தும் திருந்தாமல் போலியாய் கூறும் வார்த்தைகளை கேட்டு நம்பி ஏமாறும் பாமரன் இருக்கும் வரையில் உழைப்பைத் தின்னும் முதலாளிகள் பிணந்தின்னும் புழுக்களாய் உடலெங்கும் மொய்த்து உழைப்பை தின்பதை நிறுத்தப்போவதில்லை அண்ணா.. இக்கவிதை தூங்கிக்கிடக்கும் பாமரனின் உணர்வுகளை கேள்வி கேட்கும் விதமாக தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளதே இக்கவிதையின் தனிச்சிறப்பு அண்ண

Reply
பெரணமல்லூர் சேகரன் 07/02/2023 - 9:23 AM

பொருளாதார சுனாமி
எளியோரை காலி செய்யும் எனிமி
காரணமான ஆளும் வர்க்கத்தை கவனி

என்கிறது தோழர்‌ ஜோசப் ராஜாவின் கவிதை

பொருளாதாரம் நாம்‌ அறியவில்லையெனில் பொருளாதார சுனாமி நம்மைக் கபளீகரம் செய்துவிடும்

எச்சரிக்கையாக இருக்கக் கற்பிக்கிறது கவிதை

இன்னும் என்ன தயக்கம்
ஏனிந்த மயக்கம்

கேளுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Comment