எத்தனை நாட்களாக
எரிந்து கொண்டிருக்கிறது அந்த மாநிலம்
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
எத்தனை மனிதர்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள் அந்த மாநிலத்தில்
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
எத்தனை வீடுகள் எரிந்து சாம்பலானது
எத்தனை கனவுகள் கலைந்து கருகிப்போனது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
எத்தனை மனிதர்கள்
அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டார்கள்
எத்தனை குழந்தைகள்
கொடுங்கனவுகளால் அச்சுறுத்தப்பட்டார்கள்
அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
மணிப்பூருக்காகப் பேசுங்கள் என்று எத்தனை குரல்கள்
மணிப்பூரைப் பாருங்கள் என்று எத்தனை கோரிக்கைகள்
ஆனால்
ஆனால்
பார்க்கவே முடியாத ஒரு காட்சி
பரவத் தொடங்கிய உடனே
சகிக்கவே முடியாத ஒரு சம்பவம்
தெரியத் தொடங்கிய உடனே
ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு பேரவலம்
வெளிப்படத் தொடங்கிய உடனே
இதற்காகவே காத்திருந்தவர்களைப் போல
வார்த்தைகளைத் தூக்கிக்கொண்டு வருவதற்கு
வெட்கமாக இல்லையா உங்களுக்கு
ஒத்திகை பார்த்துவிட்டு வந்துநிற்கும் முகங்களை
சகிக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உணர்ச்சிப் பெருக்கில் வந்துவிழும் வார்த்தைகளைக்
கேட்கமுடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
உணர்ச்சிகளின் பின்னால்
உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளின் பின்னால்
எப்படி ஒளிந்து கொள்வது என்பதற்கு
இந்த நாளும் இந்த நாளின் காட்சிகளுமே
சாட்சிகளாக இருக்கின்றன
கனத்த இதயத்தோடும் கடும் கோபத்தோடும்
இந்த தேசம் வெளிப்படுத்திய வார்த்தைகள்
இணைய வெளியெங்கும் தொலைக்காட்சித் திரைகளெங்கும்
செய்தித்தாளின் பக்கங்களிலும் நிறைந்து வழிந்து கொண்டிருக்கின்றன
என்னுடைய கேள்வியெல்லாம்
நாளை என்ன செய்யப் போகிறீர்கள்?
எதையும் என்னால் மறக்க முடியவில்லை
காஷ்மீரின் கத்துவா கிராமத்தை
கதிகலங்கச் செய்த ஆசிபாவின் கூக்குரல்
இன்னும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
குஜராத்தில் கலவரத்தின் பெயரால்
குலைநடுங்கச் செய்த பில்கிஸ்பானுவின் கதறல்கள்
இன்னும் என்காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
எண்ணிலடங்கா பலாத்காரங்கள் எண்ணிலடங்கா படுகொலைகள்
எதையும் என்னால் மறக்க முடியவில்லை
இதோ பெருந்துயரத்தின் வரிசையில் மணிப்பூரும்
இதோ பேரவலத்தின் தொடர்ச்சியில் மணிப்பூரும்
உங்கள் கண்களுக்கு முன்னால்தான் கலவரங்கள் நடக்கின்றன
உங்கள் கண்களுக்கு முன்னால்தான் படுகொலைகள் நிகழ்கின்றன
நீங்கள் பார்க்கப்பார்க்கத்தான் பலாத்காரங்கள் தொடர்கின்றன
ஓ சபிக்கப்பட்ட என் தேசமே
இன்னும் இவர்களின் நாடகத்தை
நம்பிக் கொண்டிருக்கப் போகிறாயா
ஓ கைவிடப்பட்ட என் தேசமே
இன்னும் இவர்களின் வார்த்தைகளைக்
கேட்டுக் கொண்டிருக்கப் போகிறாயா
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் காட்டிலும்
சாதியென்னும் மதமென்னும்
வெறியூட்டப்பட்ட மனிதர்கள் ஆபத்தானவர்கள்
இன்னும் எத்தனை சாட்சிகள் வேண்டும்
இன்னும் எத்தனை காட்சிகள் வேண்டும்
போதும் அந்த நச்சுவிதையை
இந்த தேசத்தின் நிலமெல்லாம் விதைக்கவிட்டது போதும்
அந்த நச்சுச் செடியை
இந்த தேசத்தின் நிலமெல்லாம் வளரவிட்டது போதும்
பேரழிவின் விளிம்பிலிருந்து இந்த தேசம்
மீட்கப்பட வேண்டும்
நம்புங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் மீட்பர்கள்தான்
காரிருளின் பிடியிலிருந்து இந்த தேசம் விடுவிக்கப்பட வேண்டும்
நம்புங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் சூரியன்தான்
பேரச்சத்தின் கைகளிலிருந்து இந்த தேசம் சுதந்திரமடைய வேண்டும்
நம்புங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் வீரர்கள்தான்
வரலாற்றின் பக்கங்களில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை
ஒற்றுமையை வலியுறுத்தியவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்
வரலாற்றின் பக்கங்களில் மானுடவிரோதிகளுக்கு இடமில்லை
மானுட அன்பை வலியுறுத்தியவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்
இன்னும் ஒரு பேரவலம் நிகழக்கூடாதென்றால்
இன்னும் ஒரு அநாகரிகம் அரங்கேறக்கூடாதென்றால்
மனிதன் மனிதனாக வாழவேண்டுமென்றால்
மானுட ஒற்றுமைக்கு எதிரானவர்கள் வீழ்த்தப்படவேண்டும்
மானுட ஒற்றுமைக்கு எதிரானவர்கள் வீழ்த்தப்படவேண்டும்
1 comment
“உணர்ச்சிகளின் பின்னால் / உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளின் பின்னால் / எப்படி ஒளிந்து கொள்வது என்பதற்கு / இந்த நாளும் இந்த நாளின் காட்சிகளுமே / சாட்சிகளாக இருக்கின்றன” ஆம் மிகச் சரியான பதிவாகப்பட்ட உள்ளுணர்வு தோழர். எத்தனை மனித அவலம். அத்தனைக்கும் அரசியலா பதிலாவது..? உண்மையில் ”மானுட ஒற்றுமைக்கு எதிரானவர்கள் வீழ்த்தப்படவேண்டும்”…