படம் : பிரிவினைச் சுவரில் வரையப்பட்டிருக்கும் விடுதலை ஓவியம்
பிரிவினைச் சுவர்கள்
புதிதல்ல நமக்கு
தீண்டாமை என்னும்
பிரிவினைச் சுவர்கள்
இப்போதும் கூட
இங்கொன்றும்
அங்கொன்றுமாக
இந்த மண்ணில்
முளைத்தெழுவதைக்
கள்ள மெளனத்தோடு
பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்
ஆதிக்கத்தின் கரங்களால்
உயரமாக எழுப்பப்படும்
பிரிவினைச் சுவர்கள்
எளிய மனிதர்களையும்
புறக்கணிக்கப்பட்ட மனிதர்களையும்
கைவிடப்பட்ட மனிதர்களையும்
எப்படியெல்லாம்
அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது
என்பதைக்
கனத்த இதயத்தோடு
பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்
நீங்கள் நினைக்கலாம்
இத்தகைய
பிரிவினைச் சுவர்கள்
இங்குதான் இருக்கின்றன என்று
இல்லை அப்படி இல்லை
ஆதிக்கத்தின் கரங்கள்
எங்கெல்லாம் வலுப்படுகிறதோ
அங்கெல்லாம்
முளைக்கத்தான் செய்யும்
பிரிவினைச் சுவர்கள்
வெறுப்பின் உணர்வுகள்
எங்கெல்லாம் வளர்க்கப்படுகிறதோ
அங்கெல்லாம்
உயரத்தான் செய்யும்
பிரிவினைச் சுவர்கள்
அப்படித்தான்
பாலஸ்தீன நிலத்திலும்
முளைத்திருக்கிறது
பிரிவினைச் சுவர்கள்
பாலஸ்தீனர்களின்
நிலத்தை
அபகரித்துக் கொண்டவர்கள்
பாலஸ்தீனர்களின்
வீட்டை
அபகரித்துக் கொண்டவர்கள்
பாலஸ்தீனர்களின்
வாழ்வை
அபகரித்துக் கொண்டவர்கள்
பாலஸ்தீனர்களின்
காலத்தை
அபகரித்துக் கொண்டவர்கள்
அற்பத்தனம் கொண்ட
முதலாளிகளாலும்
பைத்தியக்காரத்தனமான
அரசியல்வாதிகளாலும்
வெறுப்புணர்வால் நிறைக்கப்பட்டவர்கள்
பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி
பல மைல்கள் தூரத்திற்கு
ஆளுயரத்திற்கும் மேலாக
பிரிவினைச் சுவர்களை
கட்டி எழுப்பி
கலங்கச் செய்கிறார்கள்
அந்தப் பாலஸ்தீன இதயங்களை
புறக்கணிக்கப்பட்டவர்களாக
கைவிடப்பட்டவர்களாக
நீதி மறுக்கப்பட்டவர்களாக
உரிமை மறுக்கப்பட்டவர்களாக
ஒரு சுவருக்குப் பின்னால்
வாழ்வதில் இருக்கும்
வேதனையை
ஒரு சுவருக்குப் பின்னால்
சுவாசிப்பதில் இருக்கும்
கொடுமையை
நினைத்துப் பார்க்கிறேன்
இதயத்துடிப்பின் வேகத்தை
கட்டுப்படுத்த முடியவில்லை
விரல்களின் நடுக்கத்தை
நிறுத்திவிட முடியவில்லை
ஆனபோதிலும்
பாலஸ்தீனர்களின் கரங்களால்
அந்தச் சுவர்களெல்லாம்
வண்ணமயமான ஓவியங்களால்
நிறைக்கப்பட்டிருக்கின்றன
பாலஸ்தீனர்களின் கரங்களால்
அந்தச் சுவர்களெங்கும்
விடுதலையின் வாசகங்களாலும்
சுதந்திரத்தின் வாசகங்களாலும்
நிறைக்கப்பட்டிருக்கின்றன
தோழர்களே
ஆதிக்கத்தின் கரங்களால்
அதிகாரத்தின் கரங்களால்
எளிய மனிதர்களுக்கு எதிராக
கட்டி எழுப்பப்படும்
பிரிவினைச் சுவர்கள்
நிரந்தரமானவைகள் என்று
நினைத்து விடாதீர்கள்
உண்மையைச் சொன்னால்
யாருக்கு எதிராக
அந்தப் பிரிவினைச் சுவர்கள்
கட்டி எழுப்பப்பட்டதோ
அவர்கள்தான்
அவர்கள்தான்
அவர்களேதான்
தரைமட்டமாக்குவார்கள்
அந்தப் பிரிவினைச் சுவர்களை
இப்போதும் கூட
இந்த மனிதகுலம்
இதுவரையிலும்
உடைத்து நொறுக்கிய
சுவர்களைத்தான்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்!
ஜோசப் ராஜா
1 comment
பிரிவினைச் சுவர்கள் எவ்வாறெல்லாம் சக மனிதர்களைப் பிரித்து சாகடிக்கிறது என்பதை கவிஞர் ஜோசப் ராஜா தமது பதிவுகளில் விவரித்துள்ளார்.
படிக்கவும் பிரிவினையை உடைக்கவும்
ஒற்றுமையைப் படைக்கவும்
காக்கவும் வேண்டியது அவசியம்.