நிச்சயமாக
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
தாய்
தன்னுடைய குழந்தைக்கு
சோறூட்டும் அழகை
கவிதை
காகிதத்தில்
எழுதப்படுவது மட்டுமல்ல
காட்டப்படும் அன்பும்தான்
அங்க பாரு கண்ணா
அங்க பாரு
நிலா பாரு நிலா பாரு
இப்ப நீ
ஆ வாங்கலைன்னா
அம்மா நிலாவுக்கு ஊட்டிருவேன்
என்று சொல்லவும்
நிலாவை முந்திக்கொண்டு
குழந்தை
வாங்கிக் கொள்கிறது
இப்ப நீ சாப்பிடலைன்னா
அதோ
தூரத்தில இருக்குபாரு நட்சத்திரம்
அதுக்கு ஊட்டிருவேன்
என்கிறாள் தாய்
நட்சத்திரத்தை முந்திக்கொண்டு
குழந்தை
சாப்பிடத் தொடங்குகிறது
இப்படியாக
மரத்திலிருக்கும் பறவைகளைக் காட்டி
சோறூட்டுகிறாள் ஒரு தாய்
தெருவிலிருக்கும் நாயைக்காட்டி
சோறூட்டுகிறாள் ஒரு தாய்
தூரத்தில் செல்லும்
பேருந்தைக் காட்டி
காற்றில் சலசலக்கும்
இலைகளைக் காட்டி
சோறூட்டுகிறாள் ஒரு தாய்
இதைத்தான்
மரியாதைக்குரிய தந்தையும்
மகத்தான ஓவியருமான
சந்ரு சொன்னார்
“குழந்தைக்கு
உணவூட்டுவதின் வழியாக
இந்தப் பிரபஞ்சத்தின்
சகலத்தோடும்
உறவாடுகிறாள் தாய்” என்று
பிரபஞ்சம் என்பதை
ஒரு தாயின் இதயமாகத்தான்
புரிந்து வைத்திருக்கிறேன் நான்
தாயும் கூட
பெரும் பிரபஞ்சத்தின்
சிறு வடிவமாகத்தான்
இருக்கிறாளென்று
நம்புகிறேன் நான்
உங்களுக்குத் தெரியுமா
தவழும் குழந்தைக்குச்
தாய் சோறூட்டுவது
பிரபஞ்ச நடனத்திற்கு ஒப்பானது
ஆடவல்லானின்
கால்கள் கூட
சோர்ந்து போகலாம்
குழந்தைக்கு
பசியாறும் வரையிலும்
சோர்ந்து போகாது
தாயின் கால்கள்
குழந்தை பசியாற வேண்டும்
பசிக்கிறது என்று
சொல்லத் தெரியாத குழந்தை
தனக்கான உணவைத்
தானே உருவாக்கத் தெரியாத
குழந்தை பசியாற வேண்டும்
இல்லையென்று
நானல்ல நீங்களல்ல
யாருமே சொல்ல முடியாது
அப்படிச் சொன்னால்
அவன் மனிதனும் கிடையாது
பாருங்களேன்
பட்டினியால்
ஒட்டிய வயிறோடும்
ஒடுங்கிய உடலோடும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர்விட்டுக் கொண்டிருக்கும்
காஸாவின் குழந்தைகளைப் பாருங்கள்
காஸாவிலும்
நிலா இருக்கத்தான் செய்கிறது
காஸாவிலும்
நட்சத்திரங்கள் தெரியத்தான் செய்கின்றன
காஸாவிலும்
பறவைகள் பறக்கத்தான் செய்கின்றன
காஸாவிலும்
ஆலிவ் இலைகள் அசையத்தான் செய்கின்றன
காஸாவின் குழந்தைகளும்
பசியோடுதானிருக்கிறார்கள்
காஸாவின் தாய்மார்களும்
தயாராகத்தான் இருக்கிறார்கள்
எங்கு பார்த்தாலும்
வெடிகுண்டின் மிச்சங்கள்
எங்கு திரும்பினாலும்
ட்ரோன்களின் ஓசைகள்
எங்கு சென்றாலும்
இடிபாடுகளின் காட்சிகள்
உணவுதான்
உணவுதான்
எங்கும் இல்லாமல் இருக்கிறது
இப்படியாக
காஸாவின் பசி
என் இரவுகளை
என் இதயத்தை
என் கவிதைகளை
மெல்ல மெல்ல
விழுங்கிக் கொண்டிருக்கிறது!
ஜோசப் ராஜா

1 comment
பிரபஞ்சத்தின் சகலத்தோடும் உறவாடும் தாய் இந்த
தாய் தனது குழந்தைக்கு உணவுட்டும் தாய் உயுருள்ள அனைத்தும்
காட்டி குழந்தைக்குஉணவு
கொடுத்து மகிழும்தாய்
அந்த தாய் தான் படும்
அவலத்தை தன் குழந்தை வரவேண்டாம்
எனஒருகவலம் உணவிற்காக தனது
உயிரையே பணயம்
வைக்கும் தாய் தான் காசாவின் தாய் பிரபஞ்ச
தத்தின் அனைத்தும்
இயங்கி கொண்டுதான்
உள்ளது இந்த இயக்க
வெளியில் தான் காசாவி
ன் தாய்கள் இயங்கி கொண்டே இருப்பதுதான் நமக்கெல்லாம் ஏக்க பெரு மூச்சாக உள்ளது
ஆனால் இந்த கவிதை
யாரையும்ஆற்றுபடுத்த
இயலாது ஆர்ப்பரித்து
எழச்செய்யும் கவிஞரே
வாழ்த்துக்கள் தோழர்
மனித நேயம் கொண்ட
யாரையும் இது பாதிக்கா
மால் இருக்காது