இயற்கைப் பேரிடர்கள்
யுத்தங்களைப் போன்ற
செயற்கைப் பேரிடர்கள் என
இந்த உலகம்
பேரழிவின் கரங்களால்
கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்த நேரத்திலும்
மானுட அன்புதான்
மானுட அன்புமட்டும்தான்
நம்பிக்கை கொடுக்கிறது
நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது
வாழ்வின் மீதான பிடிப்பை
இன்னும் இறுக்கமாக்குகிறது
நீடித்துக் கொண்டிருக்கும்
யுத்தத்தில்
தொடர் அலைக்கழிப்பால்
உணவுப் பற்றாக்குறையால்
குடிநீர்த் தட்டுப்பாட்டால்
உடலின் சக்தியையெல்லாம் இழந்து
பிள்ளைக்குக் கொடுக்கப்
பால்சுரக்காமல் பரிதவித்துக் கொண்டிருக்கும்
பாலஸ்தீனத்தின் தாய்மார்களின் தவிப்பு
இதயத்தை உடைத்தெறியும் நேரத்தில்
பெருமழையில்
பெருவெள்ளத்தில்
நினைத்துப்பார்க்க முடியாத
நிலச்சரிவில்
சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும்
வயநாட்டின் மக்களைப்பார்த்து
“தாயிழந்த
பிள்ளைகள் இருந்தால்
கொடுங்கள்
பாலூட்டித் தருகிறேன்” என்று
வாஞ்சையாகக் கேட்கிறாள்
தாயொருவள்
தன் பிள்ளைகளின்
பசியை மட்டுமல்லாமல்
தாயில்லாப் பிள்ளைகளின்
பசியையும் உணர்ந்து
பாலூட்டித் தருகிறேன் என்ற
பேரன்புதான்
பேரன்புதான்
பாழாய்ப்போன இந்த உலகத்தை
இன்னும்கூட
இருக்கச்செய்து கொண்டிருக்கிறது
பால் சுரக்கவில்லையே
என்றழுது கொண்டிருக்கும்
பாலஸ்தீனத்தின் அம்மையே
பாலூட்டித் தருகிறேன்
என்றழைத்துக் கொண்டிருக்கும்
கேரளத்தின் அம்மையே
பால் நினைந்து ஊட்டும்
தாயினும் சாலப்பரிந்த யாரையும்
பார்த்ததில்லை நான்
கருணைக் கடலே
உன்னை
உன்னை
உன்னை மட்டுமே
பார்க்கிறேன் உலகம்மையே!
ஜோசப் ராஜா
1 comment
பாலின்றி அழும் குழந்தைகளுக்கு அமுதத் தாய்ப்பால் ஊட்டும் சகோதரி போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர். இச்செய்தியைக் கேள்விப்பட்டு, சமூக ஊடகங்களில் தெரிந்துகொண்டு அமைதியாக இருந்துவிடுகிறோம் நாம். ஆனால் அப்படியல்லாமல் கவிஞர் ஜோசப் ராஜா அதைச் சிலாகித்துத் தமது படைப்பை இயல்பாக வடித்துள்ளார்.