பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

காலையில் தேநீர் குடித்தாக வேண்டும்

சரியான நேரத்திற்குச் சாப்பிட்டாக வேண்டும்

குழந்தைகளை அள்ளிச்சென்று

பள்ளிக்கூடத்திற்குள் எறிந்தாக வேண்டும்

சம்பளம் கொடுக்கும் அலுவலகத்தை நோக்கி

காற்றைப்போல விரைந்திட வேண்டும்

யாருக்காக உழைக்கிறோம்

எதற்காக உழைக்கிறோம்

எந்தக் கேள்விகளுமில்லாமல்

கொடுக்கும் வேலைகளை

விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய வேண்டும்

மதிய உணவிற்காகக் காத்திருந்து காத்திருந்து

நேரம் வந்ததும் விரைவாக உண்ண வேண்டும்

வேலையில் மீண்டும் மூழ்கிட வேண்டும்

உடலின் இதயத்தின் ஆன்மாவின்

ஒட்டுமொத்த சக்தியையும்

முதலாளியின் திருப்பாதங்களில் இறக்கிவிட்டு

சக்கையைப் போல

வெறும் சக்கையைப் போல

இரவு உணவைப்பற்றிய எண்ணங்களோடு

வீடுதிரும்ப வேண்டும்

வீட்டுப்பாடம் வாங்கிவரவே

பள்ளிக்குச் சென்று வந்ததைப்போல

வீட்டுப்பாடங்களால் நிறைந்திருக்கும்

குழந்தைகளுக்கு உதவிசெய்ய வேண்டும்

தொலைக்காட்சியிலோ கைப்பேசியிலோ மூழ்கியபடி

இரவு உணவை உண்ணவேண்டும்

இருக்கும் கடன்களைப் பற்றிய யோசனைகளோடு

வரப்போகும் செலவுகளைப்பற்றிய அச்சத்தோடு

படுக்கைக்குச் செல்ல வேண்டும்

மறுநாளும் அதேதான்

அதற்கு மறுநாளும் அதேதான்

அன்றாடங்கள் பெரும்பாலும்

அப்படியேதான் இருக்கின்றன

அன்றாடங்களில் பெரும்பாலும்

எந்த மாற்றத்தையும் அனுமதிக்காமல்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

வாழ்க்கை என்பது இதுதானா

வாழ்க்கை என்பது இவ்வளவுதானா

அப்படியென்றால் நண்பர்களே

பாருங்கள் பாலஸ்தீனத்தின் அன்றாடங்களை

உங்களுடைய அன்றாடங்களோடு மட்டுமல்ல

வேறெந்த தேசத்தின் அன்றாடங்களோடும்

ஒப்பிட முடியாதது பாலஸ்தீனத்தின் அன்றாடங்கள்

ஒருநாள் உயிர்த்திருப்பதும்

மறுநாள் படுகொலை செய்யப்படுவதும்

ஒருநாள் அகதிகளாக்கப்படுவதும்

மறுநாள் ஆழப் புதைக்கப்படுவதும் என

பாலஸ்தீனத்தின் அன்றாடங்கள்

நினைத்துப் பார்க்க முடியாதவைகள்

ஆனாலும் பாருங்கள்

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

விடியலில் சூரியன் மட்டுமல்ல

போர்விமானங்களும் பறந்து வருகின்றன

இரவில் நட்சத்திரங்கள் மட்டுமல்ல

ஏவுகணைகளும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன

பெற்றோர்களின் கண்களுக்கு முன்னால்

குழந்தைகள் இறந்து கிடக்கிறார்கள்

குழந்தைகளின் கண்களுக்கு முன்னால்

பெற்றோர்கள் புதைந்து கிடக்கிறார்கள்

காதலனைப் பறிகொடுத்த காதலி

காதலியைப் பறிகொடுத்த காதலன்

வாழ்வின் பெருஞ்சோகம் சுமந்து

வெறுமனே வெறுமனே திரிந்து கொண்டிருக்கிறார்கள்

கட்டிட இடிபாடுகளின் வழியே

இன்று நேற்றல்ல

நீண்ட வருடங்களாக

இப்படித்தான்

எதிரிகளின் கைகளால்

புதைக்கப்படுவதும்

நம்பிக்கையின் கைகளால்

எழுந்துவருவதும் என

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

ஒவ்வொரு முறையும்

யுத்தத்தைச் சொல்லிச் சொல்லி

தங்களுடைய கிராமங்களிலிருந்து

துரத்தப்பட்டார்கள் பாலஸ்தீன மக்கள்

அகதிகளாக அங்குமிங்கும் அலைந்துதிரிந்து

திரும்பி வந்தபோது

வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன

சொந்த நாட்டிலும் அகதிவாழ்க்கை

வாழநேர்ந்தது வரலாற்றுத் துயரம்தான்

ஆனாலும் பாருங்கள்

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட

நிலத்திற்காகவும்

தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

வாழ்க்கைக்காகவும்

தங்களுடைய ஒற்றை இலக்கான

சுதந்திரத்திற்காகவும்

தங்களுடைய முழுசக்தியையும் திரட்டி

தங்களுடைய முழுக்கனவுகளையும் திரட்டி

எல்லா வழிகளிலும்

எல்லா நேரங்களிலும்

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

அணுகுண்டுகள் மாறியிருக்கலாம்

போர்விமானங்கள் புதிதாக இருக்கலாம்

ஏவுகணைகளுக்குத் துல்லியம் கூடியிருக்கலாம்

எதிரிநாட்டின் இராணுவத்தோடு

தனியார் இராணுவமும் இறங்கியிருக்கலாம்

இன்னும் துல்லியமாக இனப்படுகொலை செய்ய

செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படலாம்

அத்தனையும் அத்தனையும் சேர்ந்து

இந்தப் போரில் செய்யப்போவது என்ன

குழந்தைகளைக் கொல்வது

பெண்களைக் கற்பழிப்பது

வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவது என

புதிதொன்றுமில்லை எப்போதும் செய்வதுதான்

இன அழிப்பின் வடிவங்கள் மாறியிருக்கலாம்

பாலஸ்தீனத்தின் போராட்டக்குணம் மாறவேயில்லை

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

நண்பர் கேட்டார்

” எதற்காகப் பாலஸ்தீனத்தைப் பற்றிமட்டும்

உலகமெங்கும் இருந்தும்

இத்தனை கவிதைகள் புறப்பட்டு வருகின்றன” என்று

ஒரே பதில்தான்

பாலஸ்தீனம் போராடிக் கொண்டேயிருக்கிறது

அதனால்தான்

கவிதைகளும்

எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன

போராட்டங்கள் நிகழும் நிலத்தில்

கவிதைகள் பூத்துக் குலுங்கத்தான் செய்யும்

புரட்சிகள் நடக்கும் தேசத்தில்

கவிதைகள் மழையாய்ப் பொழியத்தான் செய்யும்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு

எந்த வினைக்கும் பெரிதாக

எதிர்வினையே இல்லாமல்

வாழ்ந்து கொண்டிருப்பவர்களே பாருங்கள்

எத்தனை எத்தனை குண்டுகள்

எத்தனை எத்தனை மரணங்கள்

எல்லாவற்றையும் பார்த்தபின்பும் கூட

தங்கள்மீது சுமத்தப்பட்ட எதையும்

சகித்துக் கொண்டிருக்கவில்லை அவர்கள்

தங்கள்மீது திணிக்கப்பட்ட எதையும்

ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள்

பாலஸ்தீனம்

போராடிக் கொண்டேயிருக்கிறது

நீங்கள்

என்ன செய்யப் போகிறீகள்?

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 31/10/2023 - 10:19 AM

மனித உறவுகளை உற்பத்தி செய்வதற்கு மாறாக உலக நாடுகள் பல, ஆயுதங்களை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்து – அதனை சந்தைப்படுத்த விரும்பும் – பெரும் முதலாளித்துவத்தை வளர்க்க இப்படி நாடுகளுக்கு இடையிலான போராட்டங்களை தொடங்கிவிடுகிறார்கள். போராட்டங்கள் என்பதை அனுபவமாக உணர மறந்த அன்றாட காட்சிகளாக பலர் தங்களுக்கு விதிக்கப்பட்ட பணிச்சுமைக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டவர்களாக சுழன்று திரிகின்றனர். இந்நிலைபாட்டை தோழரின் கவிதைவரிகள் மெல்லிய கோபத்துடன் சீண்டியுள்ளது. இச்சீண்டல் மிக அவசியமானதும் கூட. அடுத்தடுத்த போராட்டங்களின் தேவையை இச்சீண்டல் வாசகர்களுக்கு உணர்த்தும். அல்லது வாழும் சூழலில் அவர்கள் வலியாக உணரும் உணர்வுகளை போராட்டங்களாக உருமாற்ற பயன்படும். அத்தகைய போராட்டத்தை அவர்கள் உணர்வாக அவசியமாக உணரும் காலம் வந்தாகத்தான் வேண்டும். காலம் சுழன்று சுழன்று போர் குறித்த ஆயத்தங்களை வெவ்வேறு வடிவங்களில் எல்லா நாடுகளிலும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. அதில் இன்று பாலஸ்தீனம் முழுதுமாக பாதிப்பை உணர்த்த நிலையில் முழு வீச்சில் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அந்த நிலையை அடையும் காலம் அடுத்தடுத்த நாடுகளுக்கும் வரத்தான் போகிறது என்பதையும் தோழரின் கவிதைவரிகள் எச்சரிக்கின்றன. சிறப்பு தோழர். பகிர்வோம் போராட்டத்தின் அவசியத்தை பரப்புவோமாக…

Reply
பெரணமல்லூர் சேகரன் 31/10/2023 - 6:52 PM

போராடிக் கொண்டேயிருக்கும் மக்களைப் பார்த்து கவிஞர் ஜோசப் ராஜாவிற்குக் கவிதைகள் பிறக்கின்றன.

ஆனால் அவர் கூறுவதைப் போலவே அனேகம் பேருக்கு எந்தக் கவலையும் பிறப்பதில்லை. எந்த அசைவும் ஏற்படுவதில்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்க்கை வண்டி வழக்கமாக ஓடிக் கொண்டுதானிருக்கிறது.

சக மனிதர்களின் உயிர்கள் பலியாவது கண்டு எந்த வகையிலும் அசைவில்லாமல் இருக்க எப்படி முடிகிறது? நாம் ஒன்றும் ஜடப் பொருள் அல்லவே!

அக்கறை கொள்வோம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.

Reply

Leave a Comment