நூறு ஆண்டுகளைக் கடந்தும்
பாரதி ஏன் வாசிக்கப்படுகிறான்
நூறு ஆண்டுகளைக் கடந்தும்
பாரதி ஏன் கொண்டாடப்படுகிறான்
நூறு ஆண்டுகளைக் கடந்தும்
பாரதியின் படைப்பின் இரகசியங்கள்
எதற்காக ஆராயப்படுகின்றன
இந்தத் தேசத்தின் விடுதலைக்காக
இந்த மொழியின் வளர்ச்சிக்காகப்
பாரதி செய்த பங்களிப்புகள் என்ன
இந்தக் கேள்விகள்
கண்டிப்பாகக் கேட்கப்பட வேண்டியவை
இதற்கான பதில்கள்
கண்டிப்பாகத் தேடப்பட வேண்டியவை
ஒருவகையில் எல்லாக் கேள்விகளுக்கும்
ஒற்றைப் பதிலைச் சொல்லிவிடலாம்
நவீனத்துவம் என்று
பாரதியைப்
புரிந்துகொள்ள வேண்டுமென்றால்
நவீனத்துவத்தையும்
புரிந்துகொள்ளத்தான் வேண்டும் !
நவீனத்துவம் என்னும் பெருந்தேரை
தனியொரு கவிஞனாகத்
தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தவன்
பாரதிதான்
நவீனத்துவச் சிந்தனையைத்
தமிழ்மொழியில் வெளிப்படுத்தத் தொடங்கியவன்
பாரதிதான்
நனீனத்துவ அழகியலை
தமிழ்க் கவிதைகளில் செதுக்கத் தொடங்கியவன்
பாரதிதான்
இதயத்தின் ஆழத்திலிருந்து
எல்லோருக்கும் புரியும்படி
எழுதவேண்டுமென்று விரும்பியவன்
அதுதான், அதுதான் நவீனமென்பது
எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில்
ஜனநாயகம் அடங்கியிருக்கிறது
எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில்
சமத்துவம் அடங்கியிருக்கிறது
எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில்
மானுடக்கரிசனம் அடங்கியிருக்கிறது
பாரதியிடம்
இவை எல்லாமும் அடங்கியிருந்தன!
ஓராயிரம் ஆண்டு
ஓய்ந்து கிடந்த பின்
வாராது வந்த மாமணியே என்று
நவீனத்துவத்திற்குப்
பாரதி முகம் கொடுக்கிறான்
நவீனத்துவத்தைப் பாரதி
சிக்கெனப் பற்றிக் கொள்கிறான்
பக்திப் பாடல்களில் தோய்ந்திருந்த
கவிதை மொழி
ஞானப் பாடல்களின் மூழ்கியிருந்த
கவிதை மொழி
அடிமை தேசத்தின் விடுதலையை வேண்டி
நெருப்புக் கங்குகளாய்க் கொதித்துக் கிழம்புகிறது
அந்த மாபெரும் தலைவருக்குக் கீழ்
அந்த மகத்தான
புரட்சியின் விஞ்ஞானிக்குக் கீழ்
ரஷ்யாவின் தொழிலாளர் வர்க்கம்
நடத்திக் காட்டிய மகோன்னதமான புரட்சியை
“ஆஹாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று
நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிபொங்க
நாடி நரம்பெல்லாம் உற்சாகம்பொங்க
வரவேற்றுப் பாடுகிறான் பாரதி!
நவீனத்துவம் என்பது
வெறும் சொல்லல்ல
தொடர்ச்சியன இயக்கத்தில்
ஒரு பொருள்
ஒன்றிலிருந்து இன்னொன்றாக
மாறுவதைப் போல
இன்னும் சொல்லப் போனால்
ஒன்றை அழித்து
இன்னொன்று உருவாவதைப் போல
சமூக இயக்கத்தில்
தொடர்ந்து தம்மை அழுத்துகின்ற
ஒரு அமைப்பை
எதிர்க்கத் துணிகின்ற
எண்ணம்தான் நவீனத்துவம்
மக்களுக்கு எதிரான
மக்களை வதைக்கின்ற
மக்கள் விரும்பவே விரும்பாத
அந்த அமைப்பை
முற்றிலும் எதிர்ப்பதற்கு
ஒன்று பத்து நூறாய்க் கைகோர்க்கும்
அந்த அணிச்சேர்க்கைதான் நவீனத்துவம் !
எல்லோரும் சேர்ந்துகொள்வதை
முதலாளித்துவம் ஒருபோதும் விரும்பாது
எல்லோரும் சேர்ந்துகொள்வதைத்தான்
கவிதை எப்போதும் வலியுறுத்தும்
பாரதியும் அதைத்தான் வலியுறுத்தினான்
கவிதையின் பண்பை
மிகச்சரியாகப் புரிந்து கொண்டவன்
கவிதையின் ஆற்றலை
மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டவன்
அவனுடைய காலத்தில்
கண்ணுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த
எதிரியை நோக்கி
கவிதைக் கனலை வீசி எறிந்தவன்
நம்முடைய காலமோ
எதிரி எங்கிருக்கிறான் என்று
யாருக்கும் தெரியாத காலம்
கண்ணால் பார்க்கமுடியாத கரமொன்று
உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கும் காலம்
பாரதியைப் போல
அக்கினிக் குஞ்சுகளைப் பிரசவிக்கும்
ஆயிரமாயிரம் கவிஞர்கள் தேவைப்படும் காலம் !
அடிமை தேசத்தில்
கவிதை எழுதுவதே புரட்சிகரமானதுதான்
அதிலும் புரட்சியை நேசித்த
அந்தக் கவிஞனின் இதயம்
புரட்சிக்காரர்களை நேசித்த
அந்தக் கவிஞனின் இதயம்
சுதந்திரத்திறாக எப்படி ஏங்கியிருக்கும்
அடிமை வாழ்வில்
அழுத்தப்பட்டிருந்த மக்களின் சிந்தனையை
தன்னுடைய கவிதைகளால் தட்டியெழுப்புகிறான்
தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழச் செய்கிறான்
எழுந்து கொண்டவர்களை நடந்திடச் செய்கிறான்
நடந்து கொண்டிருந்தவர்களை ஓடிடச் செய்கிறான்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்று
பாரதியின் கவிதை மழை கொட்டித் தீர்க்கிறது
பாரதியின் கவிதைக் காற்று சுழட்டி அடிக்கிறது
பாரதியின் கவிதை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது
பாரதியின் கவிதை நெருப்பு பற்றிப் படருகிறது
தேசமெங்கும் விடுதலைக்கனல் கொழுந்து விட்டெறிகிறது
இன்று சுதந்திரம் என்ற பெயரில்
இந்தத் தேசம் ஏதோ ஒன்றை அனுபவிப்பதற்கு
வார்த்தைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவன்
அந்த்க் கவிஞனின் இதயத்தை
அந்தக் கவிஞனின் வார்த்தைகளை
புரிந்துகொள்ள வேண்டிய காலமிது !
அவன் விரும்பிய சுதந்திரம்
அவன் விரும்பியபடி
கிடைக்கவில்லை என்பது உண்மைதான்
ஆனால் அந்தப் யுகப்புரட்சியை
இங்கும் நடத்தத் தவறிய
நமக்கும் அதில் பங்குண்டல்லவா
நவீனம் என்பது வேறொன்றுமில்லை
மாற்றம் தான்
மாற்றத்திற்கான தேவை
அவசரமாக இருக்கின்ற காலகட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நவீனம் என்பது ஒருவகையில்
உறக்கம் கலைவது தான்
நவீனம் என்பது ஒருவகையில்
எழுந்து நிற்பது தான்
நவீனம் என்பது ஒருவகையில்
கண்களைத் திறந்து பார்ப்பதுதான்
பாருங்கள் தோழர்களே
கண்களைத் திறந்து பாருங்கள் !
பாரதியை அறிந்து கொள்ளுங்கள்
நவீனத்துவத்தையும் அறிந்து கொள்ளுங்கள்
பாரதி விரும்பியதை நீங்களும் விரும்புங்கள்
அவனைக் கொண்டாடுவதற்கான அர்த்தம்
அவன் விரும்பிய சமூகமாற்றத்தை
நீங்களும் விரும்புவதுதான்
நிகழ்த்திக் காட்டுவதும்தான்
நவீனத்துவம் என்பது வெறும் சொல்லல்ல
தன்னுணர்வுதான்
எல்லாவற்றையும் விரிந்த பொருளில்
புரிந்துகொள்ளக் கூடியதுதான்
ஒவ்வொருவரும் புயலாகப் புறப்படுவதும்
ஒவ்வொருவரும் சூறாவளியாகப் பொங்கியெழுவதும்
ஒவ்வொருவரும் சூரியனாக மாறுவதும்
இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால்
அமைப்பாய்த் திரள்வதும்
ஒரு வர்க்கம்
இன்னொரு வர்க்கத்தின் அதிகாரத்தை
அடியோடு தூக்கியெறிவதும்
தலைகீழாய்ப் புரட்டிபோடுவதுமே
ஆம் தோழர்களே
அதுதான் அதுவேதான்
நீங்கள் சொல்ல வருவது சரிதான்
நவீனம் என்பது புரட்சிதான்
ஒவ்வொரு புரட்சியும் நவீனம்தான் !
ஜோசப் ராஜா
2 comments
ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷ்யப் புரட்சியை இந்தியாவில் முதலாவதாக வியந்து பாடிய மகாகவி பாரதியின் பிறந்தநாளில் பாரதி குறித்த நல்லதோர் கவிதையுடன் கவிஞர் ஜோசப் ராஜா நம்முடன் உரையாடுகிறார்.
நீங்களும் உரையாடுங்கள்.
இலக்கியத்தின் மீதும்
மொழியின் மீதும்
படைப்புகள் மீதும்
எழுத்துக்கள் மீதும்
மக்கள் மீதும்
மக்களின் நலன்கள் மீதும்
மக்கள் மீதான அழுத்தங்களும்
அதிகார துஸ்பிரயோகம் சாதி வெறி மதவெறி இனவெறி கொண்ட காட்டுமிராண்டிகள் மீது எழும் சரியான கோவத்தின் வெளிப்பாடே பாரதியின் எழுத்துக்களில் காணப்படுகின்றன.
ஆதலால் தான் பாரதி இன்றும் போற்றப்படுகிறான்…….