பயணத்தில் வீசும் சுகமான காற்று

படம் : போர் வெறியர்களால் கபளீகரம் செய்யப்படும் காஸாவின் வானம்

நீண்ட தூரமோ

குறைந்த தூரமோ

ஒரு பயணம் என்பது

கணப்பொழுதின் இளைப்பாறுதல்

ஒரு பயணம் என்பது

அன்றாடத்தை அலசிப்பார்ப்பது

ஒரு பயணம் என்பது

எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது

ஒரு பயணம் என்பது

எல்லாவற்றையும் பார்க்கச்செய்வது

அப்படியாகத் தொடங்கிய பயணத்தில்

மாபெரும் மானுடத்திரளின்

உழைப்பைத் தின்று செரித்து

பெருத்திருக்கும் இந்த நகரம்

ஒரு குப்பையைப் போல

அடித்துச் செல்லப்படுவதைப்

பார்க்கப்பார்க்கப் பரவசமாக இருக்கிறது

காற்று வீசுகிறது

பயந்த குழந்தையை மூடிக்கொள்ளும்

தாயின் புடவையைப்போல

காற்று முழுவதுமாக மூடிக்கொள்கிறது

முகத்தில் வேகமாக வீசும் காற்று

இதயத்தின் களைப்பை

இருந்த இடம் தெரியாமல்

அகலச் செய்கிறது

மனிதனால் இன்னும்

மாசுபடுத்தப்படாத காற்றை

ஆழமாக உள்வாங்குகிறேன்

சுத்தமான காற்றால்

நுரையீரல் நுரைத்துப் பொங்குகிறது

உடலின் வழியாக

இதயத்திற்குள் நுழைகிறது காற்று

இதயத்தின் பரவசத்தை

வார்த்தைப்படுத்தத் துடிக்கின்றன விரல்கள்

பரந்த வானத்தைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

நட்சத்திரம் ஒன்று எரிந்து விழுகிறதை

இமைகொட்டாமல் பார்த்ததில்

ஒருகணம் குழந்தையாகிறேன்

மறுகணம் கவிஞனாகிறேன்

விழுந்த நட்சத்திரம்

விதைத்து விட்டதில்

இதயத்தை இருள் சூழ்ந்து கொள்கிறது

வெறுமையையும் மெளனத்தையும்

உணரத் தொடங்குகிறேன்

நிலா ஒளிர்ந்து கொண்டிருக்கும்

நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும்

இந்த வானத்தைப் போலத்தான்

இருக்குமா பாலஸ்தீனத்தின் வானம்

நான் உணர்ந்ததைப் போல

யாராவது ஒரு பாலஸ்தீனன்

இந்தக் காற்றை உணர்வானா

என்னை ஆற்றுப்படுத்தியது போல

யாராவது ஒரு பாலஸ்தீனனை

ஆற்றுப்படுத்துமா இந்தக் காற்று

என்ற எண்ணங்கள்

இதயத்தின் ஆழத்திலிருந்து

மேலெழுந்து வரவர

காற்று சுமையாகிக் கொண்டிருப்பதை

உணரத் தொடங்குகிறேன்

இப்போது இந்த வானத்தை

பார்க்க முடியவில்லை என்னால்

இப்போது இந்த நட்சத்திரங்களை

இரசிக்க முடியவில்லை என்னால்

உண்மையைச் சொன்னால்

நட்சத்திரங்களில் எல்லாம்

படுகொலை செய்யப்பட்ட

பாலஸ்தீனக் குழந்தைகள்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

சுயநலம் பிடித்த

இந்த மானுடத்திரளை

பரிகாசம் செய்து

சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்

காற்றின் சுமையைத்

தாங்க முடியாமல் தள்ளாடுகிறேன்  

இப்போது என் நினைவெல்லாம்

இது மட்டும்தான்

இந்தப் பயணம் மட்டுமல்ல

அந்தப் படுகொலைகளும்

முடிய வேண்டும்

தோழர்களே

உங்கள் வானம் எப்படி இருக்கிறது?

நீங்கள் காற்றை எப்படி உணர்கிறீர்கள்?

 

ஜோசப் ராஜா

Related Articles

4 comments

மைத்திரிஅன்பு 18/11/2023 - 11:08 PM

கவிஞரின் கவிதை வரிகள்… இயல்பாக உணரும் காற்றையும் காணும் வண்ணமயமான வான்வெளியையும் மாற்றிப் போட்டுவிட்டது. இனி இயல்பாக காற்றை குளுமையாகவும், வெட்டவெளியை சுட்டி நிற்கும் வானை வாஞ்சையாகவும் உணர முடியாது. அதற்குள் அதிகாரத்திற்கு ஆட்பட்ட அழிவையும், அழுகையுடனான அகோரத்தையும் உணரத்தான் வேண்டியுள்ளது. எங்களின் வானமும் காற்றும் அதையே உள்வாங்கப் பெற்றோம். உணர்வுடன் இணைகிறேன் தோழர்.

Reply
கலைமணி 18/11/2023 - 11:37 PM

மனிதர்களே உங்கள் மனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முயலுங்கள். இல்லை என்றால் நாளையோ நாளை மறுநாளோ உங்களுக்கும் இதைவிடவும் கொடிய பாதகங்களை பெற வேண்டியிருக்கும். பயணங்கள் மனதை மலராக்கும் அற்புதம். ஆனால் இன்றோ காதுகளில் இருக்கும் அடைப்பான்கள் மனதிற்குச் சவக்குழியாகிவிட்டது.

Reply
aji murugesan 19/11/2023 - 6:09 AM

நட்சத்திரங்களில் எல்லாம்

படுகொலை செய்யப்பட்ட

பாலஸ்தீனக் குழந்தைகள்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

இந்த வரி ரோஹித் வெமூலாவை நினைவுபடுத்துகிறது அண்ணா.. மானுடத்தை நேசிப்பவர்களுக்கு சுவாசிக்கும் காற்று கூட சுமையாக மாறிப் போனது.. தொடர்ந்து போராடுவோம்

Reply
பெரணமல்லூர் சேகரன் 19/11/2023 - 8:02 AM

ஒரு கவிஞருக்குத் தான் காணும் இயற்கைக் காட்சிகள் எப்படியெல்லாம் பாதிக்கும். அப்பாதிப்பு மனித குல நன்மை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்குச் சான்று கவிஞர் ஜோசப் ராஜாவின் இந்தக் கவிதை.

தான் கண்டவற்றை பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரால் பாதிக்கப்படும் மக்களின் பார்வையில் எழுதியுள்ளதை வாசியுங்கள். மனித நேயத்தை சுவாசியுங்கள். மாற்றம் மேவும்.

Reply

Leave a Comment