பனியோடும் போராடும் பாலஸ்தீனக் குழந்தைகள்

வ்வளவு நாட்களாக

இரக்கமேயில்லாமல்

இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும்

இஸ்ரேல் இராணுவத்தோடும்

பறவைகள் துரத்தப்பட்ட வானத்தில்

வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும்

போர் விமானங்களோடும்

பட்டங்களைக் கிழித்துப்போட்டு

ஓயாமல் பறந்துகொண்டிருக்கும்

எண்ணற்ற ட்ரோன்களோடும்

துல்லியமாகக் கொலைசெய்வதற்காகக்

அல்லும் பகலும்

ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட

 செயற்கை நுன்ணறிவோடும்

வெறுப்புணர்வால் நிறைக்கப்பட்ட

ஆக்கிரமிப்பாளர்களோடும்

கணக்கற்ற ஆலீவ் மரங்களை

வெட்டித் தள்ளிய மாவீரர்களோடும்

போராடிக் கொண்டிருந்த

பாலஸ்தீனக் குழந்தைகள்

இப்போது

உயிரையும் உறையச்செய்யும்

பனியோடு

போராடிக் கொண்டிருக்கிறார்கள்

இதயத்தைத் துளைத்தெடுக்கும்

வாடைக்காற்றோடு

போராடிக் கொண்டிருக்கிறார்கள்

விரல்களை நடுங்கச்செய்திடும்

கடுங்குளிரோடு

போராடிக் கொண்டிருக்கிறார்கள்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்

அகதி முகாம்களில்

சின்னஞ்சிறிய கூடாரங்களில்

நீண்ட நாட்களாகப்

பசியோடு போராடிக் கொண்டிருக்கும்

பாலஸ்தீனக் குழந்தைகளை

துப்பாக்கிக் குண்டுகளையும் தாண்டி

துளைத்தெடுக்கிறது பனி

இஸ்ரேலின்

ஏவுகணைகளுக்குத் தப்பித்தவர்கள்

பனியால் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

அமெரிக்காவும்

நேட்டோ கூட்டணி நாடுகளும்

அள்ளிஅள்ளிக் கொடுத்த

அதிநவீன ஆயுதங்களுக்குத் தப்பித்தவர்கள்

பனியால் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

இனவெறி இதயங்கள்

இழுத்துக் கொண்டிருக்கும்

நீண்ட யுத்தத்தில்

அங்குமிங்கும்

அலைக்கழிக்கப்பட்ட குழந்தைகள்

தேவையான உணவு கிடைக்காமல்

தேவையான ஊட்டச்சத்து இல்லாமல்

கடுங்குளிரில் கருகிப்போகும்

இலைகளைப்போல

கருகிக் கொண்டிருக்கிறார்கள்

அகதி முகாம்களை

மழைநீர் சூழ்ந்திருக்கிறது

மருத்துவமனைகளுக்குள்

மழைநீர் புகுந்திருக்கிறது

பனி பனி உறைபனி

தேவையான வெப்பம் இல்லாமல்

உடலின் சமநிலையைக்

குலைத்துப் போடுகிறது

பெரியவர்களே

திணறிக் கொண்டிருக்கும்போது

குழந்தைகள் என்ன செய்வார்கள்

இதுவரையிலும்

போர் விமானங்களால்

கொல்லப்பட்ட

குழந்தைகளை எண்ணி முடித்துவிட்டு

இப்போது

உறைபனியால் செத்துக் கொண்டிருக்கும்

குழந்தைகளை

எண்ணத் தொடங்கி விட்டார்கள்

மனிதநேயமிக்கவர்கள்

 

 

டபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும்

இதயத்திலிருந்து சொல்கிறேன்

குறித்துக் கொள்ளுங்கள்

கவிஞனின் வார்த்தைகளை

எஞ்சிய குழந்தைகள்

எழுந்து வருவார்கள் ஒருநாள்

எதிரில் இருக்கும் எல்லாமும்

எதிரில் இருக்கும் எல்லாமும்

இருந்த இடம்தெரியாமல் தகர்த்தெறியப்படும்

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

சுதந்திரத்தின் பாடல்களை பாடிக்கொண்டே

செழித்து வளர்ந்திருக்கும்

ஆலிவ் மரங்களின் கிளைகளில்

விளையாடிக் கொண்டிருக்கும்!

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

தாணப்பன் 03/01/2025 - 7:09 AM

எழுந்து வருவார்கள் சுதந்திரத்தின் பாடல்களைப் பாடிக்கொண்டே…. புதிய பூபாளம் பிறக்கும்

Reply
பெரணமல்லூர் சேகரன் 03/01/2025 - 8:12 AM

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதோடும் கூடவே பனியோடும் போராடும் பாலஸ்தீனக் குழந்தைகளின் சொல்லொணாத் துயரம் குறித்து கவிஞர் ஜோசப் ராஜா வடித்துள்ள கவிதையைப் படியுங்கள்.

தானாகக் கசியும் கண்ணீர்.

Reply

Leave a Comment