சிறியதோ
பெரியதோ
எப்படிப் பார்த்தாலும்
இந்த உலகம்
பரிசுக்காகத்தான்
காலங்காலமாகக்
காத்துக் கிடக்கிறது
ஆம்
இந்த உலகத்தின்
முக்கால்வாசி மனிதர்கள்
பாராட்டுக்காகத்தான்
பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாலஸ்தீனத்தின்
லெபனானின்
குழந்தைகள் தவிர
பரிசுகளுக்காகவும்
பாராட்டுகளுக்காகவும்
சிரித்த முகங்களோடு
காத்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளை
நினைத்துப் பார்க்கிறேன்
மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கச் செய்வதற்காக
பரிசுப்பொருளோடு
வந்து கொண்டிருக்கும்
காதலனுக்காகச்
சூரியனைச் சுமந்தபடி
காத்திருக்கும்
காதலியின் முகத்தை
நினைத்துப் பார்க்கிறேன்
இது மட்டுமல்லாமல்
அற்பப் பரிசுக்காகக்
அதிகாரத்தின் கால்களைப்
பாம்பைப்போலச்
சுற்றிக் கொண்டிருக்கும்
பைத்தியக்காரர்களையும்
நினைத்துப் பார்க்கிறேன்
அதிகாரத்தின்
அழுகிய இதயங்களை
மக்களுக்கு எதிரான கருத்துக்களால்
குளிரச் செய்து கொண்டிருக்கும்
முட்டாள்களையும்
நினைத்துப் பார்க்கிறேன்
ஓ தோழர் நெருடாவே
பூமியின் தோல்
எங்கெங்கும் ஒரேமாதிரி இருக்கலாம்
பூமியின் மனிதர்கள்
ஒரேமாதிரி இல்லை தோழரே
ஆனாலும்
ஒவ்வொரு கணமும்
இந்த உலகத்தின்
ஒவ்வொரு மூலையிலிருந்து
மனிதம் உயிர்த்தெழுவதையும்
பார்க்கத் தவறவில்லை நான்
இந்த உலகம்
உயர்வாக நினைக்கும்
இந்த வருடத்தின்
நோபல் பரிசு
தென்கொரியாவைச் சேர்ந்த
ஹான் காங்கிற்கு
அறிவிக்கப்படுகிறது
இலக்கியத்திற்கான
நோபல் பரிசைப்பெறும்
முதல்
கொரிய எழுத்தாளர் என்று
கொரியா கொண்டாடுகிறது
இலக்கியத்திற்கான
நோபல் பரிசைப்பெறும்
இளம்
பெண் எழுத்தாளர் என்று
பெண்கள் கொண்டாடுகிறார்கள்
ஆனால்
ஹான் காங்
கொண்டாடவில்லை
திரும்பும் திசைகளிலெல்லாம்
ஊடகங்கள் நிறைந்திருக்கும்
இந்த உலகத்தில்
எந்த ஊடகத்திற்கும்
பேட்டி கொடுக்காமல்
ஒடுங்கிக் கொள்கிறாள்
எந்தத் தொலைக்காட்சிக்கும்
நேர்காணல் கொடுக்காமல்
அமைதியாக இருக்கிறாள்
அன்பிற்குரியவர்கள்
உரிமையாகக் கேட்கிறார்கள்
வலிநிறைந்த மெல்லிய குரலில்
அவர்களிடம் சொல்கிறாள்
ஓவ்வொரு நாளும்
மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்
எப்படி மகிழ்ச்சியாக
இருக்க முடியும்?
எப்படிச் செய்தியாளர் சந்திப்புகளை
நடத்த முடியும்?
என்று கேட்கிறாள்
எங்கோ நடக்கும் படுகொலைகள்
என் மனசாட்சியைப்
பாதிக்கிறது என்கிறாள்
எல்லோரும்
மனித இனத்தைச் சேர்ந்தவர்களென்பது
உண்மையாக இருந்தால்
நமது குரல்கள்
பலவீனமாக இருந்தாலும்
சிறியதாக இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
யுத்தத்திற்கு எதிராகப்
படுகொலைகளுக்கு எதிராக
எழுப்பாமல் இருக்க முடியாது
என்று சொல்கிறாள்
நீங்களும்
உங்கள் குரல்களை
இனப்படுகொலைக்கு எதிராக
யுத்தத்திற்கு எதிராக
ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக
முதலாளித்துவத்திற்கு எதிராக
எழுப்புவீர்கள் என்பதற்காகத்தான்
இதைச் சொல்கிறேன் தோழர்களே!
ஜோசப் ராஜா
1 comment
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் தென்கொரிய பெண் எழுத்தாளர் தமது நோபல் பரிசு கொண்டாட்டத்தைப் புறக்கணித்திருப்பது சாதாரணமானதன்று.
அன்பையும் பண்பையும் நேசத்தையும் அதிகமாகவே போதித்த இலக்கியங்களுடன் வாழும் தமிழர்களாகிய நம் நிலை என்ன?
நியாயமான கேள்விதானே! தினமும் போரில் மடியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்தத் தவறும் செய்யாதவர்கள். நிகழ்ந்து வரும் கொடிய போர்களில் எதற்காகச் செத்து மடிகிறோம் என்பது
எதுவும் அறியாதவர்கள்.
அவர்கள் மீது கொண்ட தென்கொரிய பெண் எழுத்தாளரின் கரிசனம் நோபல் பரிசு கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கச் செய்தது.
ஆனால் நாம் எந்த வகையில் நமது கரிசனத்தைத் தெரிவிப்பது என்பதை கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகளைப் படித்தபின்
முடிவெடுங்கள்.