நீடிக்கும் யுத்தமும் நிற்காத கலவரமும்

ஆயிரமாயிரம்

கனவுகளைச் சிதைத்துவிட்ட பிறகும்

ஆயிரமாயிரம்

மனிதர்களை அகதிகளாக்கிய பிறகும்

ஆயிரமாயிரம்

உயிர்களைப் பலிகொடுத்த பிறகும்

எதற்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது

அந்த யுத்தம்

எளிமையான பதில்தான்

யுத்தத்தை விரும்புகிறவர்கள் நிறைந்திருக்கிறார்கள்

மனிதாபிமானம்

பொங்கிப் பிரவாகமெடுக்கும் இதயத்திலிருந்து

நாம் பார்ப்பதெல்லாம்

யுத்தத்தின் ஒருபக்கத்தை தான்

அதிகாரத்தை வலுப்படுத்தும்

ஆயுதவியாபாரத்தை அதிகரிக்கும்

உள்நாட்டுப் பிரச்சனைகளைத் திசைதிருப்பும்

உலகத்தை வழிநடத்த வாய்ப்புக்கொடுக்கும்

எத்தனையோ பக்கங்கள் இருக்கின்றன யுத்தத்திற்கு

சகோதர மனிதர்களுக்குள்

சாதி நெருப்பை மூட்டிவிட்டும்

சகோதர மனிதர்களுக்குள்

மத வெறியை ஏற்றிவிட்டும்

எண்ணற்ற மரணங்கள் ஏற்பட்டபிறகும்

கணக்கிடமுடியாத இழப்புகள் நிகழ்ந்துவிட்ட பிறகும்

எதற்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது

அந்தக் கலவரம்

எளிமையான பதில்தான்

கலவரங்களை விரும்புகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்

மானுட ஓலங்கள் காற்றை நிறைப்பதைப்பற்றி

கவலைப்படமாட்டார்கள் அவர்கள்

மானுடக் கண்ணீர் மழையாய்ப் பொழிவதைப்பற்றி

மனங்கசிய மாட்டார்கள் அவர்கள்

அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே

அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால்

வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியிருக்கும்போது

சமூகங்களுக்குள் கலகங்கள் மூட்டப்பட்டிருக்கும்போது

மனித இதயங்களுக்குள் வெறுப்பு விதைக்கப்பட்டிருக்கும்போது

சகோதரமனிதர்கள் ஒருவரையொருவர் வெட்டிச்சாய்க்கும்போது

கண்ணுங்கருத்துமாக நீங்கள் கடைப்பிடிக்கும்

கள்ளமெளனத்தைத்தான்

கள்ளமெளனத்தைத்தான்

கள்ளமெளனத்தைத்தான்

கடந்துபோக முடியவில்லை என்னால்

உலகத்தின் எந்த மூலையில்

யுத்தங்களென்றாலும் நடந்தாலும்

உலகத்தின் எந்த மூலையில்

கலவரங்கள் நிகழ்ந்தாலும்

அகதிகளாக்கி அலைக்கழிக்கப்படுகிறவர்கள் யார்

கொன்று புதைக்கப்படுகிறவர்கள் யார்

ஊனமாக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறவர்கள் யார்

உதவிகேட்கும் நிலைமைக்கு உள்ளாக்கப்படுகிறவர்கள் யார்

இந்தக் கேள்விகள்

ஒவ்வொரு யுத்தத்தின் போதும்

ஒவ்வொரு கலவரத்தின் போதும்

முட்டிமோதுகிறது எனக்குள்

உண்மையைச் சொன்னால்

இந்த வேதனைகள் இரவும் பகலும்

துரத்திக் கொண்டிருக்கின்றன என்னை

எந்த யுத்தத்திலாவது எந்த முதலாளியாவது

எல்லாம் இழந்து தெருவில் நின்றிருக்கிறானா

எந்தக் கலவரத்திலாவது எந்த தலைவனாவது

எல்லாம் இழந்து பிணமாய்க் கிடந்திருக்கிறானா

நம்மைப் போன்றவர்கள்தான்

ஒவ்வொரு பொழுதும் செத்துத் தொலைக்கிறார்கள்

நம்மைப் போன்றவர்கள்தான்

ஒவ்வொரு பொழுதும் இரத்தம் சிந்துகிறார்கள்

அப்படியென்றால்

அவர்கள் எப்படிப் பிழைத்திருக்கிறார்கள்

அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

என்று யோசித்துப் பாருங்கள்

ஒவ்வொரு யுத்தத்திற்குப் பின்னாலும்

ஒளிந்திருக்கும் முதலாளிகளின் லாபக்கணக்குகளையும்

ஒவ்வொரு கலவரங்களுக்குப் பின்னாலும்

மறைந்திருக்கும் ஆட்சியாளர்களின் அதிகாரக் கணக்குகளையும்

அறிந்து கொள்வீர்கள்

பற்றியெரியும் மணிப்பூரையும்

ரஷ்ய உக்ரைன் யுத்தத்தையும்

பிரித்துப்பார்க்க முடியவில்லை என்னால்

இரண்டுமே சகோதர மனிதர்களுக்குள்

விதைக்கப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடுதான்

உக்ரைனைத் தாங்கிப்பிடித்திருக்கும் நேட்டோவின் கைகளுக்கும்

மணிப்பூரை எரித்துக் கொண்டிருக்கும் பிரிவினைவாதிகளின் கைகளுக்கும்

எந்த வித்தியாசமுமில்லை

அவர்கள் அன்பிற்கு எதிரானவர்கள்

அவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்

அவர்கள் மனிதகுலத்தின் விரோதிகள்

அப்படியென்றால் நீங்கள்?

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 23/06/2023 - 12:38 PM

மீண்டும் யுத்தத்திற்கு எதிராகவும் கலவரங்கள் வன்முறைக்கு எதிராகவும் கவிஞர் ஜோசப் ராஜாவின் தூரிகை பேசுகிறது.

“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன

அரிதான மானிடர்களை அழிக்கும் யுத்தமும் கலவரங்களும் வன்முறையும் முடிவுக்கு வரவேண்டும் எனில் நீங்களும் குரல் கொடுக்க வேண்டும்.

அதற்காகப் படியுங்கள். குரலாக..எழுத்தாக பங்களிப்புச் செய்யுங்கள்.

Reply

Leave a Comment