நினைவூட்டல் – முற்றுகை

”முற்றுகை” கவிதைத் தொகுப்பிலிருந்து. . .

யுத்தகாலத்தின் அவசரத்தைப் போல

ஆணும் பெண்ணுமாய்ப்

படையெடுத்துச் செல்வதைப் பார்க்கிறேன்

அந்த வயோதிக முகங்களில்

நிறைந்திருக்கும் சுருக்கங்களெல்லாம்

சூரியக்கதிரின்

வட்டவட்ட வளையங்களாகத்தான்

தெரிகிறது எனக்கு

போராட வந்திருக்கும் பெண்களின்

முக்காடுகளின் வழியே

நட்சத்திரங்கள் ஒளிர்வதைப் பார்க்கிறேன்

எத்தனை எத்தனை இளைஞர்கள்

அத்தனை இளைஞர்களுமே

நெருப்புத் துண்டங்களாக

கனன்று கொண்டிருப்பதாகத்தான்

தெரிகிறார்கள் எனக்கு

உழைக்கும் மனிதர்களைப் போலவே

போராடும் மனிதர்களும்

அழகாய்த் தெரிகிறார்கள்

போராடும் மனிதர்களைப் போலவே

போராட்டத்திற்குத் துணைநிற்கும் மனிதர்களும்

அழகாய்த் தெரிகிறார்கள்

மனிதர்கள் மட்டுமா

ஒரு போராட்டத்தில்

ஒரு பெருங்கிளர்ச்சியில்

ஒரு புரட்சியில்

பங்குபெறும் அத்தனையும்

அத்தனையும் பேரழகுதான்

அப்படிப்பட்ட பேரழகாய்

இந்தப் போராட்டத்தில்

கண்கள் நிறைய நிறைய

நான் பார்த்ததெல்லாம்

ஆயிரக்கணக்காக அணிவகுத்து வந்திருக்கும்

அந்த டிராக்டர்களைத்தான்

அதிகாரத்தின் லத்திகள் உயரும் போது

அந்த டிராக்டர்களின்

பாய்ச்சலைப் பாருங்களேன்

அதிகாரத்தைச் சிதறியோடச் செய்யும்

அந்த டிராக்டர்களின்

வேகத்தைப் பாருங்களேன்

தடைகளை உடைக்கின்றன டிராக்டர்கள்

வேலிகளை நொறுக்குகின்றன டிராக்டர்கள்

கிராமங்களில்

நிலத்தை உழுது கொண்டிருந்த

டிராக்டர்களின் சக்கரங்கள்

நகரத்தின் சாலைகளை

ஸ்பரிசித்துக் கொண்டிருக்கின்றன

நெற்களங்களில்

பாரங்களைச் சுமந்து கொண்டிருந்த

டிராக்டர்கள் அனைத்தும்

போராட்டக்களத்திற்கு

விவசாயிகளைச் சுமந்து வந்திருக்கின்றன

அந்தத் தலைநகரம் மட்டுமல்ல

இந்த தேசமும் கூட

இத்தனை ஆயிரம் டிராக்டர்களை

இனி பார்க்கப் போகிறதா என்ன

இதோ

மழை ஓய்ந்திருக்கும் இந்த இரவில்

தொடர்ச்சியாய்க் கத்திக் கொண்டிருக்கும்

எண்ணிலடங்கா

தவளைகளின் ஓசைகளையும் தாண்டி

ஆயிரமாயிரம் டிராக்டர்கள்

தடதடக்கும் ஓசைதான்

என் காதுகளுக்குள்

ஒலித்துக் கொண்டிருக்கிறது

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

டட்டட் டடடட

டட்டட் டடடட

டட்டட் டடடட

டா

டட்டட் டடடட

டட்டட் டடடட

டட்டட் டடடட

டா

குருத்வாராக்களின் அடுப்புகள்

அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன

கோவில்களின் அடுப்புகள்

மீண்டும் மீண்டும் மூட்டப்படுகின்றன

மசூதிகளிலிருந்து

மானுட அன்பு

மழையைப் போலப்

பொழிந்து கொண்டிருக்கிறது

எந்தப் பேதமுமில்லாமல்

எல்லாக் கடவுள்களும்

கோட்டையை நோக்கி

முற்றுகைக்குச் சென்று கொண்டிருக்கும்

ஒவ்வொரு கால்களுக்கும்

வலுசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அம்பாளின் கைகளிலிருந்து

ஆயிரமாயிரம் ரொட்டிகள்

பிறப்பெடுத்து வருகின்றன

உலகத்தின் பசியாற்றிக் கொண்டிருக்கும்

உன்னதமான விவசாயிகள்

எளிய உணவுகளால் பசியாறிக்கொண்டு

வலிய எதிரிகளை எதிர்த்து நிற்கிறார்கள்

வழக்கமாக இந்தக் காலத்தில்

கடுங்குளிரில் உறைந்திருக்கக் கூடிய

அந்த நகரம்

வழக்கத்திற்கு மாறாக

கடுங்கோடையை விடவும்

கொதித்துக் கிடக்கிறது

நாலா திசைகளிலிருந்தும்

அந்த நகரத்தை

முற்றுகை இட்டிருக்கிறார்கள் விவசாயிகள்

நகரத்திற்குள்

யாரும் வந்துவிடக்கூடாதென்று

ஒவ்வொரு சாலையாக

அடைத்து வைத்தது அதிகாரம்

நகரத்திலிருந்து

யாரும் வெளியேறக்கூடாதென்று

ஒவ்வொரு சாலையையும்

கைப்பற்றிக் கொண்டார்கள் விவசாயிகள்

எங்கள் நிலங்களை

எங்கள் வளங்களை

எப்படிக் கொடுப்பாய் முதலாளிக்கு

என்ற கோஷங்கள்

தலைநகரில் மட்டுமல்ல

தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும்

எதிரொலிக்கத் தொடங்குகின்றன

போராடும் விவசாயிகளே

இன்னும் உறுதியோடிருங்கள்

துயருறும் மானிடர்களே

இன்னும் நம்பிக்கையோடிருங்கள்

சில நேரங்களில்

கண்ணுக்குத் தெரியாத எதிரியோடும் கூட

போராட வேண்டி வரலாம்

உங்களைத்

தேசவிரோதிகளென்று சொல்கிறவர்களை

உங்களைப்

பிரிவினைவாதிகளென்று சொல்கிறவர்களை

ஓட்டுமொத்த ஊடகங்களிலிருந்தும் உங்களை

விலக்கி வைத்தவர்களைப்

மிச்சமில்லாமல் விளங்கிக் கொண்டிருப்பீர்கள்

இவர்கள் தான்

இந்த முதலாளிகள் தான்

இந்த ஆட்சியாளர்கள் தான்

உங்களின்

துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்கள்

உங்களை

இத்தனை தூரம் அலைக்கழிப்பவர்கள்

உங்களை

மீண்டும்மீண்டும் வஞ்சிக்கத் துடிப்பவர்கள்

உங்களைச் சுற்றி நீக்கமற நிறைந்திருப்பவர்கள்

உங்களுக்கு முன்னே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவமெடுப்பவர்கள்

இந்த உலகத்தின் வளங்களை எல்லாம்

வாரிச்சுருட்ட நினைப்பவர்கள்

இவர்களுக்காகத்தான் வங்கிகள்

இவர்களுக்காகத்தான் நிதி நிறுவனங்கள்

இவர்களுக்காகத்தான் காப்பீட்டு நிறுவனங்கள்

இவர்களுக்காகத்தான் பங்குச் சந்தைகள்

இவர்களுக்காகத்தான் தொழிற்சாலைகள்

இவர்களுக்காகத்தான் விவசாய நிலங்கள்

இப்படித்தான் ஆக்கி வைத்திருக்கிறார்கள்

இதைத்தான் இதையெல்லாம் தான்

தலைகீழாய் மாற்ற வேண்டும் நாம்

அன்பிற்குரிய போராட்டக்காரர்களே

நீங்கள் கண்டிப்பாக வெற்றியடைவீர்கள்

மானுட ஒற்றுமைக்கு முன்னால்

இந்தப் பாசாங்கு அரசாங்கம்

எப்போதுமே பணிந்துதான் போகும்

ஆனபோதிலும்

கோரிக்கைகள் நிறைவேறிய பின்பும்

இந்தப் போராட்டம் தொடர வேண்டும்

மிகப்பெரிய மாற்றத்திற்காகவும்

புத்தம்புதிய வாழ்விற்காகவும்

புத்தம்புதிய விடியலுக்காகவும்

போராடும் தேவையிருக்கிறது என்பதை

எப்போதும் மறந்து விடாதீர்கள்

துவரையிலும்

உங்களாலும்

உங்கள் டிராக்டர்களாலும்

மொத்தமாய்

முற்றுகையிடப்பட்டிருந்த

அந்தப் பாழும் நகரத்தை

நினைத்து நினைத்து

நினைத்து நினைத்து

எழுதிக் கொண்டிருப்பேன்

 

ஜோசப் ராஜா

19.12.2020 – 14.12.2021

Related Articles

Leave a Comment