நினைவூட்டல்

நினைவூட்ட : ஊரடங்கின் உளவியல் கவிதைத் தொகுப்பிலிருந்து!

வர்கள்

நம் பக்கத்தில்தான் இருந்திருக்கிறார்கள்

இதுவரை நாம் பார்க்கவே இல்லை

அவர்கள் நம் பக்கத்தில்தான்

பசியோடு உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்

இதுவரை நாம் பார்க்கவேயில்லை

இப்போது ஒவ்வொரு தெருக்களிலிருந்தும்

புற்றுகளிலிருந்து புறப்பட்ட ஈசல்களைப் போல

மூட்டை முடிச்சுகளோடு

புறப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை

வீட்டிற்குள் இருந்து பார்ப்பதற்கு

வேதனையாக இருக்கிறது அல்லவா

 

பெருந்தொற்றுக் காலத்தில்

உங்களுக்கும் எனக்கும்

இந்த தேசம்

கற்றுக் கொடுத்திருப்பதெல்லாம்

இந்த தேசம்

யாருக்கானது என்பதைத்தான்

கோடிக்கணக்கான

புலம்பெயர் தொழிலாளர்களுக்கானதல்ல

இந்த தேசம்

கோடிக்கணக்கான

ஏழை எளியவர்களுக்கானதல்ல

இந்த தேசம்

 

வர்கள் கேலி செய்யப்படுகிறார்கள்

ஆனபோதிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள்

ஆனபோதிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்

ஆனபோதிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்களைப் பாருங்கள்

உங்களின் அற்பக் கவலைகளை

புறந்தள்ளிவிட்டு

அவர்களின் உயிர்க் கவலைகளைப்

உற்றுப் பாருங்கள்

உங்களின் சின்னச்சின்ன துயரங்களை

ஒதுக்கிவைத்துவிட்டு

அவர்களின் பெருந்துயரங்களை

கொஞ்சநேரம் கேளுங்கள்

வெட்டவெளியில்

சாலைகளிலும் தண்டவாளங்களிலும்

அடர்ந்த வனாந்திரங்களிலும்

படுத்துக் கிடக்கும்

அவர்களின் பாடுகளுக்கு முன்னால்

உங்கள் பாடுகள் பாடுகளேயல்ல

 

ணவும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல்

வறண்ட இதயங்களால் விரட்டப்பட்ட சிறுமி

வறண்டு வறண்டே இறந்து போகிறாள்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தேசம்

நீண்ட உழைப்பு உறிஞ்சது போக

நீண்ட பயணம் மிச்சத்தை உறிஞ்சதில்

சுருண்டு விழுந்து மரணிக்கிறார் முதியவர்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தேசம்

நீண்ட தூரம் நடந்து வந்திருக்கும்

நிறைமாத கர்ப்பிணி

மரத்தடியில் சாதாரணமாகப்

பிள்ளை பெற்றுக்கொள்கிறாள்

அவளின் பெருஞ்சத்தம்

வனாந்திரமெங்கும்

எதிரொலித்துக் கொண்டிருக்கிறது

கொஞ்சநேர ஓய்விற்குப் பிறகு

சின்னஞ்சிறு சிசுவைக்

கைகளில் ஏந்திக்கொண்டு

மீண்டும் நடக்கத் தொடங்குகிறாள்

பிரசவ இரத்தம் காய்ந்த

அந்தக் கால்கள்

இந்த தேசத்தின் இதயத்தை

மிதித்து நசுக்கிச் செல்கிறது

நீண்டதூரம் நடந்த களைப்பில்

தண்டவாளத்தில் கண்ணயர்ந்த

அந்தப் பாவப்பட்ட தொழிலாளர்கள் மீது

முதலாளித்துவத்தைப் போலவே

ஏறிச்செல்கிறது சரக்கு இரயில்

இந்த தேசத்தின் முகத்தில்

தெறிக்கிறது தொழிலாளர்களின் இரத்தம்

இவ்வளவு நடந்த பிற்பாடும்

இன்னும் நடந்து கொண்டிருக்கிறார்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

இன்னும் நடந்து கொண்டிருக்கிறார்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

 

நீட்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்

இந்த ஊரடங்கில்

வாட்டி வதைத்துக் கொண்டேயிருக்கும்

இந்தத் துயரத்தை

பறவைகள் விழித்துக் கொண்ட

இந்த விடியலில்

உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு

காரணமிருக்கிறது

காயம்பட்ட பறவையின்

படபடக்கும் சிறகினைப் போல

படபடத்துக் கொண்டிருக்கும்

என்னுடைய இதயத்தை

உங்களுக்குத் திறந்து காட்டுவதற்கும்

காரணம் இருக்கிறது

வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்

முதலாளித்துவத்தின் கண்களைப் போல

உங்களுடைய கண்களும் இருந்துவிடக் கூடாது

நீலிக்கண்ணீர் மட்டுமே வடித்துக் கொண்டிருக்கும்

முதலாளித்துவத்தின் கண்களைப் போல

உங்களுடைய கண்களும் இருந்துவிடக் கூடாது

 

ட்டுமொத்த ஏமாற்றமும்

ஒட்டுமொத்த புறக்கணிப்பும்

ஒட்டுமொத்த வேதனைகளும்

ஒட்டுமொத்த வலிகளும்

அடங்காத அடக்கமுடியாத பெருங்கோபமாய்

உங்களுடைய கண்களில்

கொளுந்துவிட்டெரிவதைப் பார்க்க வேண்டும்

என்பதற்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்

ஒட்டுமொத்த வஞ்சகமும்

ஒட்டுமொத்த சூழ்ச்சியும்

ஒட்டுமொத்த போலித்தனங்களும்

ஒட்டுமொத்த கள்ளத்தனங்களும்

மொத்தத்தில் ஒட்டுமொத்த முதலாளித்துவமே

உங்களுடைய கண்களுக்கு

முன்னால் கொளுந்துவிட்டெரிவதைப்

பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான்

எரிந்து எரிந்து

சாம்பலாக வேண்டும் என்பதற்காகத்தான்

எழுதிக் கொண்டிருக்கிறேன் !

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 15/04/2024 - 10:25 AM

“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவூட்டித் தூண்டிக் கொண்டே இருப்பது தலைவர்களின் கடமை”

என்பது போல கவிஞர் ஜோசப் ராஜா இந்தியாவில் நிகழ்ந்த கோவிட் பெருந் தொற்றையும் அதன் விளைவுகளையும் பல கவிதைகளில் படமாக்கியுள்ளார். அதன் ஒரு பகுதியை நினைவூட்டிள்ளார்.

தேர்தல் நேரத்தில் சரியாகவே செய்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள்
பரப்புங்கள்
தேர்தலில் செயல்படுங்கள்.

Reply

Leave a Comment