எல்லாம் மாறிவிட்டது
வளர்ச்சி என்று
சொல்லிக் கொள்ளலாம்
நாகரீகம் என்றுகூட
சொல்லிக் கொள்ளலாம்
படைதிரட்ட வேண்டாம்
எல்லையை நோக்கி
விரைய வேண்டாம்
கொலைக் கருவிகளைத்
தூக்கிக் கொண்டு
அங்குமிங்கும்
அலைய வேண்டாம்
எல்லாவற்றிலும் முக்கியமாக
சக மனிதனை
முகமுகமாய்ச் சந்தித்து
அவன் நெஞ்சில்
வாளை இறக்க வேண்டாம்
சக மனிதனின்
தலையைச் சீவ வேண்டாம்
சக மனிதனின்
இளஞ்சூடான இரத்தத்தில்
கையை நனைக்க வேண்டாம்
கண்களுக்கு முன்னால்
இரத்தம் வழியவழிய
உடல் துடிதுடித்து
பலபேர் செத்துப்போவதை
பார்க்கவே வேண்டாம்
இருந்த இடத்திலிருந்து
இலக்கை நிர்ணயிக்கலாம்
இருந்த இடத்திலிருந்து
அணுகுண்டை அனுப்பலாம்
இருந்த இடத்திலிருந்து
பலபேரைக் கொன்றுவிடலாம்
இருந்த இடத்திலிருந்து
பல கட்டிடங்களை
இடித்துத் தரைமாட்டமாக்கலாம்
குழந்தைகளைக் கூட
தேடிப்பார்த்துக் கொல்லலாம்
ஆம்
எல்லாம் மாறிவிட்டது
இந்த மனிதகுலம்
வளர்ச்சி அடைந்துவிட்டது
இந்த மனிதகுலம்
நாகரீகம் அடைந்துவிட்டது
பாருங்கள்
வானத்தில்
ஏவுகணைகள் பறப்பதைப்
பாருங்கள்
இஸ்ரேலில் இருந்து
இரான்
தோராயமாக 2300 கிலோமீட்டர்
தொலைவிலிருக்கிறது
இடையில்
நான்கைந்து நாடுகள் இருக்கின்றன
ஆனாலும் பாருங்கள்
இஸ்ரேலில் இருந்து
இரானுக்கும்
இரானிலிருந்து
இஸ்ரேலுக்கும்
பறந்து கொண்டிருக்கின்றன
ஏவுகணைகள்
லெபனானில் இருப்பவர்களும்
சிரியாவில் இருப்பவர்களும்
இராக்கில் இருப்பவர்களும்
ஜோர்டானில் இருப்பவர்களும்
பறவைகளைப் பார்ப்பதைப்போல
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
ஏவுகணைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
எங்கேங்கோ இருந்தபடி
நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
வெறுமனே
நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
ஜோசப் ராஜா

2 comments
அழகான அற்புதமான கவிதை..மனிதருக்குள் நீ நான் என்ற பேதமே இதற்குக் காரணம்.
எல்லாரும் சகோதரர்கள். எல்லாரும் உறவினர்கள் என்று நினைத்து வாழ்ந்தால் நமக்குள் சண்டை சச்சரவுகள் இல்லை என்பதை இக்கவிதைவழியாகநமக்குஉணர்த்துகிறார் கவஞர். வாழ்க🙏
“இரத்தம் வழியவழிய
உடல் துடிதுடித்து
பலபேர் செத்துப்போவதை
பார்க்கவே வேண்டாம்”
இந்த வரிகள் என் மனத்தை உலுக்கி
எடுத்துவிட்டது…