குறிப்பு :-
பள்ளிக் காலங்களில் கவிதை எழுதத் தொடங்கி, கல்லூரியிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். 2004 ல் சென்னை வந்தபிறகு இடதுசாரி இலக்கியங்களும், தத்துவங்களும் அறிமுகமாகின. அதுவரை எனக்குள் இருந்த கருத்துகள் கடும் மோதலுக்குள்ளாகி பழமை ஒவ்வொன்றும் அடித்து நொறுக்கப்பட்டன. தோராயமாக இரண்டு வருடங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். பெரிய மனிதர்களைச் சந்திக்கத் தொடங்கினேன். புதிய நம்பிக்கை எனக்குள் எழுந்த பிறகு எழுதத் தொடங்கினேன். ஒருவிதத்தில் என்னுடைய முதல் கவிதையான இந்தக் கவிதை சொந்த அனுபவம்தான். 2007 ல் நந்தனம் கல்லூரியில் என்னுடைய குருநாதர் நடத்திய தணல் கவியரங்கத்தில், மக்கள் கவிஞர். இன்குலாப் அவர்களின் தலைமையில் வாசிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்குலாப் அவர்களோடு தொடர்ந்த தோழமை இப்போதும் நெகிழ்ச்சியாய் நினைவோடுகிறது.
இந்தத் தலைநகரத்தில்
எனக்காகவும் உங்களுக்காகவும்
உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும்
சாதாரணத் தொழிலாளி
பாதங்களிலோ உள்ளங்கைகளிலோ
உடலின் எந்த இடத்திலோ
அவ்வப்போது ஏற்படும் காயங்களே
கவிதையை நோக்கி நகர்த்துகிறது என்னை
ஒவ்வொரு நாளும்
உழைத்துக் கொண்டேயிருக்கிறேன்
ஒருபோதும் சோர்ந்து போவதில்லை
உண்மையாகவே உழைப்பை மதிக்கிறேன்
இங்கிருக்கும் இயந்திரங்களும் நானும்
காதலர்களைப் போல
இந்த இயந்திரங்கள் என் நண்பர்கள்
இவற்றின் ஓசைகளே நான் கேட்கும் சங்கீதம்
ஒரு குழந்தையின் கையில் கிடைத்த
பொம்மை மாதிரியே
இந்த இயந்திரம் எனக்கு
விட்டுப் பிரியும் எண்ணமேயில்லை
இங்கே இரும்புகளோடு மட்டுமே
உறவாடிக் கொண்டிருக்கிறேன்
மெல்ல மெல்ல
இதயமும் கூட இரும்பாகி வருகிறது
பொழுதெல்லாம் இப்படி
இயந்திரத்தோடும் இரும்போடும்
கனத்த கருவிகளோடும்
இலேசான காயங்களோடும் கழிந்துவிட
பேராசையோடு தன் தந்தையின்
வருகையை எதிர்பார்த்திருக்கும்
குழந்தையின் கைகளில்
ஒரு ஒரெயொரு ஒற்றை மிட்டாய்
திணிக்கப்படுவதைப் போல
எனக்கான கூலி
என் கைகளில் திணிக்கப்படுகிறது
என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா
என்னை இணங்கிப்போகச் சொல்கிறீர்களா
என் உழைப்பு வியர்வை இரத்தம் நேரம்
இதற்கெல்லாம் இதுதான் கூலியா
நான் இயந்திரமா இரும்பா
இதோ என் கால்கள் கைகள் கண்கள் மயிரிழைகள்
வழிகிறதே இது என் சொந்த இரத்தம்
நான் மனிதன்
இயந்திரமல்ல
நான் மனிதன்
சுதந்திரமா
சூரிய வெளிச்சத்திலிருந்தே
அந்நியப்படுத்தப்பட்ட எனக்கா
சுவாசிக்கும் காற்றைவிட்டே
தள்ளிவைக்கப்பட்ட எனக்கா
வெளிஉலகத்தோடு தொடர்பே
துண்டிக்கப்பட்ட எனக்கா
ஒருவேளை இந்த உழைப்பைச்
சுதந்திரமென்று சொல்கிறீர்களா
அப்படிச் சொல்வீர்களானால்
உங்கள் சுதந்திரமென்பது
உடலை உயிரை மனிதத்தன்மையை
சுத்தமாகச் சுரண்டும் சுதந்திரமென்று
உரக்கச் சொல்வேன் நான்
காதுள்ளவர்களே கேளுங்கள்
ஒரு இயந்திரத்தின் பின்னால் இருந்துகொண்டு
ஒரு இரும்புக் குவியலின் நடுவே நின்று கொண்டு
நான்கு பக்கமும் சுவர்களால் அடைக்கப்பட்ட
இந்தத் தொழிற்சாலையின் மையத்திலிருந்து
புறப்பட்டு வரும் கூக்குரலைக் கேளுங்கள்
இந்தத் தொழிற்சாலையின்
கட்டிடங்கள் ஒவ்வொன்றும்
என் அறியாமை மற்றும் பலவீனங்கள் மேல்
எழுப்பப்பட்டதல்லவா
என் வயிற்றுப் பட்டினியிலல்லவா
ஒரு வயிறு பெருத்துக் கொழுத்திருக்கிறது
என் சந்ததியின் துயரத்தில் அல்லவா
ஒரு சந்ததி இன்பம் துய்த்துக் கொண்டிருக்கிறது
இருக்கிறேன்
இன்னும் இந்தத் தொழிற்சாலையில்
நான் நேசிக்கும் மனிதர்களோடும்
நான் நேசிக்கும் உழைப்பினோடும்
நான் நேசிக்காத
என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத
அடிமை வாழ்வினில்
இருக்கிறேன் இப்போதைக்கு மட்டும்
இந்தத் தொழிற்சாலையின் கூரைகள் துளைத்து
சூரியக்கதிர்கள் என்மேல் விழும்
நான் நேசிக்கும் மனிதர்களோடு
ஆத்மார்த்தமாய்ச் சிரித்துப் பேசுவேன்
என் சந்ததிகள் சந்தோஷத்தில் திளைப்பார்கள்
ஒரு பூங்காவில்
என் காதலியோடு நெடுநேரத்தைக் கழிப்பேன்
ஒரு இசையைக் கேட்டு இன்புறுவேன்
இந்த நம்பிக்கையோடு நான் பயணிக்கிறேன்
ஜோசப் ராஜா
20.08.2007