மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
இங்கு மட்டுமல்ல
உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம்
முதலாளிகளுக்குச் சாதகமான அரசாங்கத்தை
மக்களுக்கு விரோதமான அரசாங்கத்தை
எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அச்சமில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
மக்களுக்கு அச்சமில்லை
மக்கள் திரளுக்கு அச்சமேயில்லை
ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் மக்கள்
லட்சக்கணக்கில் கூடுகிறார்கள் மக்கள்
ஒன்றாகப் பாடுகிறார்கள்
ஒன்றாக இசைக்கிறார்கள்
ஒன்றாக ஆடுகிறார்கள்
ஒன்றாக ஓவியம் வரைகிறார்கள்
ஒன்றாகக் கவிதை வாசிக்கிறார்கள்
மானுட ஒற்றுமையில்
அத்தனை கலைகளும் அழகுபெறுகின்றன
மானுட ஒற்றுமையில்
ஒவ்வொரு கலைகளும் உச்சம் தொடுகின்றன
மானுடத் திரளின் கூட்டிசையில்
அதிகாரத்தின் அடித்தளம் ஆட்டங்காணத் தொடங்குகிறது
பெருந்திரளான மக்களைப் பார்த்துப்பார்த்து
பெருமுதலாளிகள் மிரண்டு போகிறார்கள்
தங்கள் சேவகர்களை அழைத்துக் கடிந்து கொள்கிறார்கள்
என்னசெய்வதென்று தெரியாமல்
என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள் சேவகர்கள்
உலகத்தின் வளங்களையெல்லாம் வேட்டையாடும் முதலாளிகள்
உலகத்தின் ஒட்டுமொத்த எளியவர்களையும் ஒன்றிணைக்கிறார்கள்
உண்மைதான்
அவனுக்கான சவக்குழியை அவனேதான் தோண்டுகிறான்
இறுதியில்
நம்புங்கள் மக்கள்தான் வெற்றியடைவார்கள்
நம்புங்கள்
இரவின் முடிவில் சூரியன் வரும்
நம்புங்கள்
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிகழும்
நம்புங்கள்
அழுத்த அழுத்த பெருவெடிப்பு நடக்கும்
நம்புங்கள்
பிரிவினைப் பேச்சுக்கள் ஒன்றிணைக்கும் மக்களை
நம்புங்கள்
வெறுப்பை விதைத்தவன் வெறுப்பை அறுப்பான்
நம்புங்கள்
மக்கள் எல்லாவற்றையும் கடந்து வருவார்கள்
நம்புங்கள் உங்களையே நீங்கள் நம்புங்கள்
உங்களைச் சுற்றியிருப்பவர்களை நம்புங்கள்
உங்களைச் சுற்றியிருப்பவர்களை நேசியுங்கள்
இது நம்பிக்கையாய் இருக்கவேண்டிய நேரம்
இது அன்பாயிருக்க வேண்டிய காலம்
உலகமே பார்த்தும் கேட்டும்
அச்சப்பட்டுக் கொண்டிருந்த
அந்தக் கொடூர நாஜிக்களையும்
அந்தக் கொடூர நாஜிக்களின் கொடூரங்களையும்
அந்தக் கொடூர நாஜிக்களின் தலைவனையும்
அந்தச் சோசலிச நாட்டின் செஞ்சேனையானது
முற்றும் முழுவதுமாகத் துடைத்தழித்துவிடவில்லையா
ஆபத்துக் காலங்களில் உச்சரிக்கப்படும்
மந்திர உச்சாடனங்களைப் போல
நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டிய உண்மை
நம்புங்கள்
இருளை விரட்டப் பேரொளி பாயும்
வெறுப்பின் விதைகள் நம்பிக்கையின் நாற்றுகளாகும் !
2 comments
சிறப்பு தோழர். நம்பிக்கை ஒன்றே என்றும் நியாத்தை நோக்கி போராட்டக் களத்தில் போராடுபவர்களின் பெரிய அன்பாயுதம்.
உலகெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன.
உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
போராட்டங்கள் ஓய்வதில்லை
சுரண்டல் நீடிக்கும் வரை
மாற்றம் வரும்வரை
போராட்டங்கள் நீடிக்கவே செய்யும்
கவிஞர் ஜோசப் ராஜாவின் படப்பிடிப்பைப் பாருங்கள்
கவிதையைப் படியுங்கள்
மாற்றத்திற்கான நம்பிக்கையுடன்.