நம்பிக்கையும் உண்மையும்

படம் : நம்பிக் கொண்டிருந்தவற்றை துளைத்து உண்மையைச் சொன்ன தொலைநோக்கி

ல்லாமும் இருந்தது

இந்தப் பூமியில்

எதுவும் இல்லாமல் இருந்தது

இந்தப் பூமியில்

உழைப்பிலிருந்து

உருவான மனிதக் கரங்கள்

ஒவ்வொன்றையும் உருவாக்கியது

வெறுமனே

ஓடிக்கொண்டிருந்த ஆறுகளை

ஆசிர்வதித்தன மனிதக் கரங்கள்

ஆற்றங்கரை நாகரீகங்கள்

வரலாற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன

வெறுமனே

நின்றுகொண்டிருந்த மலைகளை

தீண்டின மனிதக் கரங்கள்

குகைகளும் ஓவியங்களுமாகக்

காலத்தின் சாட்சியாய்

நிலைத்து நிற்கின்றன அம்மலைகள்

சொந்தத் தேவைகளை மட்டுமல்லாமல்

சமூகத் தேவைகளையும் கூட

கட்டி எழுப்பிய

மானுடக் கூட்டுழைப்பு

இந்தப் பூமியில்

உயர்ந்து நிற்கும்

ஒவ்வொரு பிரம்மாண்டங்களையும்

வியர்வையையும் இரத்தத்தையும்

சிந்திச்சிந்தி

உணர்வையும் உயிரையும்

உருக்கி உருக்கி

உருவாக்கிக் கொடுத்தது

அந்த உழைப்புக் கடவுள்களை

ஒவ்வொரு கடவுள்களுக்கும்

முன்னமே

வாழ்ந்து கொண்டிருந்த

ஆதி மனிதர்களை

ஒவ்வொரு கடவுள்களையும்

உருவாக்கிய

ஆதித் தெய்வங்களை

இப்போது

நினைத்துப் பார்க்கிறேன்

மதம்

தோன்றுவதற்கு முன்பிருந்த

மனிதனிடம்

நிறைந்திருந்த அன்பை

அப்படியே பெற்றுக் கொள்கிறேன்

மதம்

நிலைபெறுவதற்கு முன்பிருந்த

மானுடர்களின்

கள்ளங்கபடமற்ற தன்மையை

அப்படியே வாங்கிக் கொள்கிறேன்

இன்று

நம்பிக்கைக்கும்

உண்மைக்கும் இடையே

நடந்து கொண்டிருக்கும்

யுத்தத்தை வெல்வதற்கு

எல்லாமும்

தேவையாக இருக்கிறது

வரலாறு தேவையாக இருக்கிறது

மனிதனாக இருப்பது

தேவையாக இருக்கிறது

மானுட வரலாறு

நீண்டதும் நெடியதுமானது

அதிகாரத்தின் துணையோடு

நம்பிக்கை வெற்றியடையலாம்

தற்காலிகமாக

ஆனால்

உண்மையை ஒருபோதும்

தோற்கடிக்க முடியாது

உணர்ச்சிப் பூர்வமான

வார்த்தைகளால்

பிரம்மாண்டமாகக் கட்டியெழுப்பப்படும்

நம்பிக்கையைப்

பற்றிக்கொள்ளப் போகிறீர்களா

இல்லை

நிலத்தைப் போல

மலையைப் போல

என்றும் என்றென்றும்

உறுதியாக இருக்கும்

உண்மையைப்

பற்றிக்கொள்ளப் போகிறீர்களா!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 24/01/2024 - 6:51 AM

‘நம்பிக்கையும் உண்மையும்’ குறித்து கவிஞர் ஜோசப் ராஜா வழக்கம் போல அற்புதமான கவிதையை வடித்துள்ளார்.

அவர் கூறுவதைப் போல மனிதகுல வரலாற்றைப் புரிந்து கொள்வதும் மனிதன் உருவாக்கிய மத அபினியால் மனிதகுலம் அழியாமலிருக்க உண்மையை உணர்வதும் பரப்புவதும் இன்றைய காலத்தின் அவசியத் தேவை.

பிறகென்ன வாசியுங்கள். இயங்குங்கள்.

.

Reply

Leave a Comment