அதிகாலையில்
மெல்லிய குளிர்காற்றில்
பனிவிலகாத வானத்தில்
ஒளிர்ந்து கொண்டிருக்கும்
ஒற்றை நட்சத்திரத்தை
நீண்ட நேரம்
இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நானே நினைத்திருந்தாலும்
விலக்கியிருக்க முடியாது
என்னுடைய கண்களை
ஏனென்றால்
நட்சத்திரத்தில்
ஒளிர்ந்து கொண்டிருந்தது
உன்னுடைய முகம்
நட்சத்திரத்தை
ஒளிரச் செய்து கொண்டிருந்தது
உன்னுடைய முகம்
வீசும் காற்றில்
சிறகுகளை விரித்து
மெல்லப் பறந்து செல்கிறேன்
இருபது வருடங்களுக்கு முன்னால்
இதைவிடவும்
அடர்த்தியான பனிமூட்டம்
எதுவும் தெரியவில்லை எதிரில்
தேயிலைச் செடிகள்
உறைபனியால் போர்த்தப்பட்டிருந்தன
உயரமாக இருந்தும்
என்ன பிரயோஜனம்
யூகாலிப்டஸ் மரங்களைப்
பார்க்கவே முடியவில்லை
பனி பனி பனி
எங்கும் உறைபனி
எதிலும் உறைந்த பனி
பனியால் போர்த்தப்பட்டிருந்த
அந்த மலைப்பாதையில்
மெல்ல வந்த பேருந்தில்
நட்சத்திரத்தைப் போல
நட்சத்திரத்தைப் போலவே
ஒளிர்ந்து கொண்டிருந்த
உன்னுடைய முகம்
இன்னும் ஒளிர்ந்து
கொண்டுதான் இருக்கிறது
என்னுடைய இதயத்தில்
ஒருவகையில்
ஒளியால் ஆசீர்வதிக்கப்பட்டவன்
நான்
ஒருவகையில்
ஒளியால் அணைத்துக் கொள்ளப்பட்டவன்
நான்
அந்த நட்சத்திரத்தை
இந்தக் கைகளில்
தாங்குவேன் என்று
நிச்சயமாக நம்பினேன்
நம்பிக்கை காதலானது
காதல் வாழ்க்கையானது
வாழ்க்கை வண்ணங்களானது
வண்ணங்கள் கனவுகளானது
அதனால்தான்
இருபது வருடங்களுக்கும் மேலாகப்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
உன்னுடைய முகம்
இன்னும் அலுக்கவில்லை
இருபது வருடங்களுக்கும் மேலாகக்
கேட்டுக் கொண்டிருந்தாலும்
உன்னுடைய குரல்
இன்னும் சலிக்கவில்லை
இருபது வருடங்களுக்கும் மேலாக
இறுகப் பற்றியிருந்தாலும்
உன்னுடைய கரங்களிலிருந்து
வலிமையும் நம்பிக்கையும்
வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது
எவ்வளவு துயரங்கள்
துவளவிடவில்லை நீ
எவ்வளவு மேடுபள்ளங்கள்
இடற விடவில்லை நீ
எவ்வளவு சோகங்கள்
அழ விடவில்லை நீ
மலையை மோதும்
என்னுடைய தைரியத்திற்குப் பின்னால்
நீதான் நீதான் இருக்கிறாய்
அதிகாரத்தை துளைக்கும்
என்னுடைய வார்த்தைகளுக்குப் பின்னால்
நீதான் நீதான் இருக்கிறாய்
கடவுளை
என் வாழ்க்கையிலிருந்து
நீக்கியவள் நீ
எல்லாமுமாய் எனக்குள்
சங்கமித்தவள் நீ
ஒற்றை நட்சத்திரமும்
உன்னுடைய காதலும்
போதும் எனக்கு
பள்ளத்தாக்கின் பாடல்களைச்
சிகரங்களில் ஒலிக்கச் செய்வேன்
சுதந்திரத்திற்காக ஏங்கும் இதயங்களுக்கு
நம்பிக்கையின் கவிதைகளைப் பரிசளிப்பேன்!
ஜோசப் ராஜா
1 comment
காதல் கவிதைகளையும் ஒரு கை பார்ப்பேனென்றால் நாங்களெல்லாம் என்ன செய்வது கவிஞரே.. 😀