இணையத்தில் அனேகம் பேர் எழுதுகிறார்கள்.
எல்லோரையும் போல் அல்ல கவிஞர் ஜோசப் ராஜா.
மனிதகுல மேன்மைக்காக உழைப்பது எனத் தொடங்கிவிட்டால் அதன் சுமை தெரியாது. ஏனெனில் அது தியாகம்.
அத்தியாகம் உழைக்கும் மக்களை நேசிப்பவர்களின் குருதியில் கலந்தது.
அத்தகையவர்கள் தங்களால் இயன்ற பணிகளை இடையறாது செய்து கொண்டே இருப்பார்கள்.
கவிஞருக்கு வாய்ப்பது எழுத்து. அந்த எழுத்துக்கள் யாருக்காக? இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய உழைக்கும் மக்களுக்காக.
அத்தகைய உழைக்கும் மக்களுக்கு ஊறு நேர்ந்தால் ஊறுகிறது கவிதை
இயற்கையே பெரிது.அத்தகைய இயற்கை சூறையாடப்பட்டால் சூல் கொள்கிறது கவிதை.
குழந்தைகளும் பெண்களும் நாட்டின் கண்கள். அவர்கள் மீதான வன்முறை எனின் வரிந்து கட்டுகிறது கவிதை.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அத்தகைய மானிட அழிவுக்குக் காரணமான போர் எனின் போரை ஒழித்துக்கட்ட ஓங்காரம் ஆகிறது கவிதை.
“எமக்குத் தொழில் கவிதை. இமைப்போதும் சோராதிருத்தல்” எனும் மகாகவி பாரதியின் வைர வரிகளை வரித்துக் கொண்டவர் கவிஞர் ஜோசப் ராஜா.
அதற்கான வாசிப்புப் பழக்கத்தைப் பிற கவிஞர்களின் படைப்புகளிலும் கையாண்டவர் கவிஞர் ஜோசப் ராஜா.
எனவேதான் எந்தப் பொருள் குறித்தும் நெடுங்கவிதைகளை அவரால் படைத்துக் கொண்டே இருக்க முடிகிறது.
ஓராண்டாக இணையத்தில் வலம் வரும் கவிஞர் ஜோசப் ராஜாவின் எழுத்துக்களைக் கண்களால் ஒற்றிக் கொள்கிறேன்.
தோழமையுடன் கை குலுக்குகிறேன். அவரை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.
வாழ்த்துகள் தோழர் ஜோசப் ராஜா.
தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி.
மலரட்டும் எல்லார்க்கும் எல்லாமுமான சமுதாயம்.
பெரணமல்லூர் சேகரன்.