மாபெரும் மானுட இழிவிற்கு எதிரான, தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தோள்சீலைப் போராட்டத்தை
ஒவ்வொரு காலகட்டத்திலும்
முன்னெடுத்துக் கொண்டுசென்ற
ஒவ்வொரு இதயத்தையும்
மரியாதையோடு நினைவுகூறும்
இந்த நேரத்தில்
ஒருத்தி மட்டும்
வரலாற்றின் பக்கங்களில்
நட்சத்திரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள்
ஒருத்தி மட்டும்
வரலாற்றின் பக்கங்களிலிருந்து
இரத்தமும் சதையுமாக எழுந்து வருகிறாள்
அந்த ஒருத்தியைத் தவிர்த்துவிட்டு
ஒருபோதும் பேசமுடியாது
தோள்சீலைப் போராட்டத்தை
அவள்தான்
போராட்ட நெருப்பைப் பற்றவைத்தவள்
போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேகமூட்டியவள்
எதிர்க்க முடியுமா என்று தயங்கி நின்றவர்களை
அதிகாரத்தை எதிர்த்துத் திமிறச் செய்தவள்
ஆண்டுகள் பல கடந்தும்கூட
அவளைப் பற்றிய கதைகள்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன
அடக்குமுறையை விரும்பாத ஒவ்வொரு உதடுகளும்
உச்சரித்துக் கொண்டேயிருக்கிறது அந்தக் கதையை
அடிமைத்தனத்தை விரும்பாத ஒவ்வொரு காதுகளும்
ஆசைஆசையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்தக் கதையை
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும்
நகரங்களிலிருந்து நாடுகளுக்கும்
காற்றைப் போலப் பறந்துகொண்டிருக்கிறது அந்தக் கதை
குழந்தைகளுக்குச் சோறூட்டும் தாய்மார்கள்
அந்தக் கதையையும் சேர்த்தே
ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அவள் பெயர் நங்கேலி
அவளுக்கு நினைவுச் சின்னம் இல்லை
ஆனாலும்
அவளை யாரும் மறந்துவிடவில்லை
அவள் பெயரைக் கல்வெட்டில் பொறிக்கவில்லை
ஆனாலும்
அழியாமல் இருக்கிறது ஆண்டாண்டு காலங்களாக
முலைவரி கேட்டு முற்றத்தில் நின்றவர்களிடம்
வரிகொடுக்க மறுத்து
முலையையே அறுத்துக் கொடுத்த
அவளின் கோபத்தை
என்ன காரணம் சொல்லி
இருட்டடிப்புச் செய்ய முடியும்
பால்சுரக்கும் மார்பினில்
பீய்ச்சியடித்த ரத்தத்தில்
துடிதுடித்து இறந்த நங்கேலிதான்
அந்தச் சமஸ்தானத்தின்
ஒவ்வொரு இதயத்தையும் துடிக்கச் செய்தாள்
எதிர்த்து நின்ற கோபத்தை விடவும்
அறுத்துக் கொடுத்த கோபம்
பற்றியது நெருப்பாகப்
படர்ந்தது நெருப்பாக
சமஸ்தானத்தை ஆண்டுகொண்டிருந்த
முட்டாள்களின் மூளைவரை எட்டிப்பார்த்தது
முலைவரிக்கு எதிரான கோபத்தின் நெருப்பு
பேரரசுகளையே புரட்டிப்போட்ட
மக்களுக்கு முன்னால்
சின்னஞ்சிறு சமஸ்தானம் தாங்குமா என்ன
கிடைத்தது அனுமதி
தோள்சீலை அணிந்துகொள்ள
இப்போது சமஸ்தானம் இல்லை
ஆனால்
இருக்கிறது இன்னும் முலைச்சிப் பறம்பு
எப்போதும் இருப்பாள்
அந்தப் புரட்சிக்காரி நங்கேலி
அதிகாரத்தை எதிர்த்து நின்ற
எளியவர்களின் கதைகள் தான்
அதிகாரத்தை வேரோடு வீழ்த்திய
சாமானியர்களின் கதைகள் தான்
காலங்காலமாகக்
கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
அதிகாரமோ யாருமற்ற அனாதையாய்
தொலைந்து கொண்டேயிருக்கிறது எப்போதும்
தோள்சீலைக்காகப் போராடியவர்கள்
வெற்றியடைந்தார்கள்
அப்படியென்றால்
தோள்சீலைக்கு அனுமதி மறுத்தவர்கள்
தோற்றுப்போனார்களா
இதோ
இருநூறு வருடங்கள் கழித்து
சமஸ்தானத்திலிருந்து ஜனநாயகத்தில்
அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்
அதே மனுவேறிய மூளைகொண்டவர்களை
அதே சாதியூறிய இதயங்கொண்டவர்களை
அதே மதவெறியூறிய இரத்தம்கொண்டவர்களை
என்ன செய்யப் போகிறீர்கள்
எப்படி எதிர்க்கப் போகிறீர்கள்
தோள்சீலை கிடைத்துவிட்டது
ஆடைச் சுதந்திரமும் இருக்கத்தான் செய்கிறது
ஆனபோதிலும்
பலாத்காரங்கள் தொடர்வதும்
சாதீய இழிவுகள் தொடர்வதும்
மதவெறி இன்னும் வேகமெடுப்பதும்
பிரிவினைவாதம் அதிகமாகப் பேசப்படுவதும்
உணர்த்துவது ஒன்றுதான்
இன்னும் இருக்கிறது போராட்டத்தின் தேவை
இன்னும் இருக்கிறது போராட்டத்தின் தேவை
ஒன்று சேரும் போதும்
போராடும் போதும் மட்டுமே
மனிதர்கள் மகத்தானவர்களாகிறார்கள்
நீங்களும் மகத்தானவர்களாக மாறவே
ஒவ்வொரு நாளும் விரும்புகிறேன்!

1 comment
போராட்டமும் புரட்சியும் புதிய வரலாறு படைக்கும்….. அது வரலாற்றில் இடம்பெறும்…..