தொலைந்த பெண்கள் (Lapatta Ladies)

லாபதா லேடீஸ் அதாவது தொலைந்த பெண்கள் என்ற பெயரில் சமீபத்தில் ஹிந்தி மொழியில் கிரண்ராவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது அற்புதமான ஒரு திரைப்படம். கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களில் இல்லாத அழகும் உண்மையும் இந்தப் படத்தில் நிறைந்திருக்கிறது. பார்வையாளனுக்குத் துளியும் சம்பந்தமேயில்லாத, ஒருபோதும் அவனால் ஒன்றிப்போகவே முடியாத காட்சியமைப்புகளாலும், கதாபாத்திர உருவாக்கங்களாலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமீபத்திய திரைப்படங்களைக் காட்டிலும், லாபதா லேடீஸ் எளிமையும், அழகும் நிறைந்த நல்ல திரைப்படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

படம்பார்த்து முடித்ததும் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் என் மகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெறும் கண்களை மட்டுமல்ல, அந்தத் திரைப்படம் அவள் இதயத்தையும் ஊடுருவிவிட்டதை உணர்ந்து கொண்டேன் நான். கண்டிப்பாக அவள் மனதுக்குள் கேள்விகள் உருவாகியிருக்கும் என்று நினைத்தேன். சிறிதுநேரத்தில் மாலைவெயிலில் பூங்காவில் நடந்து கொண்டிருந்தோம்.

மகள் : இப்போதும் இந்தியாவில் இதுபோல் நடந்து கொண்டிருக்கிறதா அப்பா?  

நான் : நிச்சயமாக, நிறைய நடந்து கொண்டிருக்கிறது. என்ன! முன்னைக் காட்டிலும் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மகள் : பெண்கள் படிப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை?

நான் : அடிமைக்கு சுதந்திரத்தைப் பற்றிய அறிவு கிடைத்துவிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும்?

மகள் : அப்படியென்றால் இந்த நாடு வளர்ந்துவிட்டதாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களே!

நான் : இன்று நேற்றல்ல மகளே! நீண்ட காலங்களாக அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மகள் : என் பள்ளிக்கூடத்தில் நிறையப் பெண்கள் படிக்கிறார்கள். இந்த நகரத்தில் படிக்கின்ற, வேலைக்குச் செல்கின்ற நிறையப் பெண்களைப் பார்க்கிறேனே அப்பா!

நான் : நீ பார்ப்பது மட்டும் இந்தியா அல்ல மகளே, ஏன் சென்னைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் கிராமங்களுக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.

மகள் : இந்த நிலைமைகள் மாறுவதற்கு என்னசெய்ய வேண்டும் அப்பா?

நான் : உன் பாட்டி பள்ளிக்கூடத்தின் பக்கமே போகவில்லை. எங்கள் கிராமமும், கடுமையான உழைப்பும் மட்டுமே அவளின் உலகம். உன் அப்பா படித்திருக்கிறேன். சொந்த முயற்சியில் இப்போதும் நிறையக் கற்றுக் கொள்கிறேன். நீயோ எட்டாவது படிக்கும்போது என்னிடம் இவற்றையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாய்.

இந்தச் சமூகம் இந்த நிலைமைகளை எட்டுவதற்கு எத்தனையோ பேர் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். இதோ இந்த இயக்குனரைப்போல திரைப்படம் எடுத்திருக்கிறார்கள். பெரியவளாகி, உன்னால் முடிந்ததை நீயும் செய்.

என்று சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். எனக்கும் என் மகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட உரையாடலை நிகழச்செய்த அந்தத் திரைப்படத்தை நீங்களும் ஒருமுறை பாருங்கள். மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிராமங்களைக் களமாகக் கொண்டு இந்த நூற்றாண்டிலும் மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பெண்களை, அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் ஓயாத பிரச்சனைகளை கொஞ்சம் நகைச்சுவையோடும் அதிகமான உண்மையோடும் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம். பல உண்மைகளைக் கன்னத்தில் அறைந்ததுபோல பளிச்சென்று சொல்லியிருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே.

தொலைந்த பெண்கள் என்று பெயரிட்டு உண்மையில் தங்களின் அகத்தையும், தங்களின் புறத்தையும் ஒருசேரக் கண்டுகொள்ளும் பெண்களைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இணையத்தில் தேடிப்பாருங்கள். திரைவிமர்சனங்கள் நிறையக் கிடைக்கின்றன. (நானும் கதையைச் சொல்ல வேண்டுமா என்ன?) அப்படியே திரைப்படத்தையும் பாருங்கள். இதைப்போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு பெருகும்போது, கொஞ்சம் கொஞ்சமாக போலிகளைப் பிரசவித்துக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போவார்கள். எல்லா இழிவுகளும் மாறவேண்டுமென்று விரும்புவீர்கள் என்றே நம்புகிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment