எளிதில் மறந்துவிட முடியாத நாள். எளிதில் கடந்துவிட முடியாத காட்சிகள். எளிதில் அடக்கிவிட முடியாத ஆத்திரங்கள். ஆம், அந்த பேரழிவைப் பிரசவிக்கும் நிறுவனத்தை எதிர்த்து நீதியின் பாதையில் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசளித்த அதிகாரத்தின், முதலாளித்துவக் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன்.
30.05.2018 அன்று எழுதப்பட்ட நீண்ட கவிதையிலிருந்து சில பகுதிகளை, இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்வதைக் கடமையெனக் கருதுகிறேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா
கூலிகேட்டதற்காய்
வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்டார்களே
அப்பாவி விவசாயிகள்
சங்கம் சேர்ந்ததற்காக
தாமிரபரணியில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்களே
மாஞ்சோலைத் தொழிலாளர்கள்
ஒவ்வொரு முதலாளிகளுக்காக
நாம் இழந்தது
எத்தனை எத்தனை உயிர்கள்
வர்க்கப்பிரச்சனை கூர்மையடையும் போதெல்லாம்
கொலைக்கரங்கள் நீளத்தான் செய்கின்றன
இந்தப் படுகொலைகள் எதை உணர்த்துகின்றது
இந்தப் படுகொலைகளிலிருந்து
என்ன புரிந்துகொள்ளப் போகிறோம்
இது எங்கள் கலாச்சாரம் என்று சொல்லி
ஜல்லிக்கட்டுக்காக
தமிழர்களாய் ஒன்றிணைந்து போராடினோமே
தடை உடைக்கப்படவில்லையா
மஹாராஷ்ட்ராவில்
லட்சம் விவசாயிகள்
கோரிக்கைகளை ஏந்தியபடி
எறும்புகளைப் போல
சாரைசாரையாக சாலைகளில்
நடந்து வந்தார்கள்
அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்டது
அவர்களும் தங்கள் கிராமங்களுக்குத்
திரும்பிச் சென்று விட்டார்கள்
ஆனால்
ஒரு முதலாளித்துவ நிறுவனத்தை எதிர்த்து
தொடர்ச்சியாக நீங்கள்
முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் போது
ஒரு முதலாளியைத் தொடர்ச்சியாக நீங்கள்
எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் போது
அந்த முதலாளிக்காக
அந்த முதலாளித்துவ நிறுவனத்திற்காக
அரசாங்கமே வேகவேகமாக
துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு ஓடிவருகிறதே
ஏன் ஏன் ஏன்
இது வேறொன்றுமில்லை
இதைப் புரிந்துகொள்ளச் சிரமுமில்லை
கலாச்சாரத்திற்காகப்
போராடிவிட்டுப் போங்கள்
அரசாங்கத்தின் திட்டங்களுக்காகப்
போராடிவிட்டுப் போங்கள்
நீதிமன்றத்தின் முடிவுகளுக்காகப்
போராடிவிட்டுப் போங்கள்
ஆனால் லாபத்தில் கைவைத்தால்
என்ன நடக்கும் என்று
நமக்குச் சொல்கிறார்கள்
இந்த வேளையில்
முதலாளித்துவம்
வர்த்தக முகமூடியணிந்து
பணமே பிரதானமாய்
கேள்வியே கேட்கமுடியாதவாறு
வரம்புகளற்ற ஒன்றாய்
மண்ணிலிருந்து விண்ணுக்கும் வியாபித்து
உலகையே வளைத்துப் பிடித்திருக்கிற
இந்த வேளையில்
நமக்கும் கடமை இருக்கிறது
மானுடத் திரள்
என்னசெய்யும் என்பதையும்
மானுடத் திரள்
எப்படிச்செய்யும் என்பதையும்
காட்டவேண்டிய இடத்தில்
நிறுத்தியிருக்கிறார்கள் நம்மை
உண்மைதான்
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
அரசாங்கத்திடம்
துப்பாக்கிகள் இருக்கின்றன
அரசாங்கத்திடம்
துப்பாக்கிகள் மட்டும்தான் இருக்கின்றன
நம்மிடமோ
வானைப்போல் பரந்த
நிலத்தைப்போல் உறுதியான
நம்பிக்கைகள் இருக்கின்றன
நிலமெல்லாம் நமது இரத்தம்
உடலெல்லாம் அதிகாரத் தழும்புகள்
ஆனபோதிலும்
நாம் தோற்றுப்போக மாட்டோம்
ஒருபோதும்
நாம் தோற்றுப்போக மாட்டோம்
வரலாறு
நம்மை வெற்றியடையச் செய்யும்
2 comments
தூத்துக்குடி துப்பாக்கி ச் சூட்டின் நினைவாக உழைக்கும் வர்க்கம் நடத்தி வரும் சங்கிலித் தொடரான போராட்டங்களை வரிசைப்படுத்தித் தம் கவிதைகள் மூலம் நினைவுபடுத்துகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
வாசிப்போம்.
பரப்புவோம்.
போராயுதத்தைக் கூய்மைப்படுத்திக்கொண்டே இருப்போம்.
மிகச்சிறப்பானதொரு கவிதையை நமக்குக் கொடுத்திருக்கிறார் தோழர் கவிஞர் ஜோசப் ராஜா, இந்தக் கவிதையைப் படிக்கும்போது மார்க்சின் வார்த்தைகள் மீண்டும் வந்து போகின்றன மனதில் “முன்னூறு மடங்கு லாபம் என்றால், அது (முதல்-Capital) தன் முதலாளியையே விழுங்கிவிடும்” எனும்போது (லாபத்தில் கைவைப்பவர்களை) சாமானியர்கள் எம்மாத்திரம், . ஆனால் தேவை என்னவெனில் ஒரு பாட்டாளிவர்க சர்வாதிகாரத்தை நிறுவுகிற போல்ஷ்விக்குகளே……
கவிஞர் அதை நிறுவுவதாகவே கருதுகிறேன். மானுடத் திரளாய் ஒன்று கூடுவோம்.
நன்றி தோழர், தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்