ஒரு திருடனை
நேருக்குநேர் சந்தித்திருக்கிறீர்களா
ஒரு திருடனைக்
கையும்களவுமாகப் பிடித்திருக்கிறீர்களா
ஒரு திருடனைக்
கட்டிவைத்து அடித்திருக்கிறீர்களா
ஒரு திருடனை
காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறீர்களா
அத்தனையையும் அத்தனையையும்
செய்திருக்கிறேன் நான்
ஆனாலும்
அந்தத் திருடனை
இன்னும்கூட மறக்கமுடியவில்லை என்னால்
மங்கிய நிலவொளி போன்ற
அவனுடைய முகம்
இன்னும் எனக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
மெல்லிய ஒலியில்
சுரங்கத்திற்குள்ளிருந்து ஒலித்ததைப் போன்ற
அவனுடைய குரல்
காதலின் கிசுகிசுப்பாய்
இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது
ஒழுங்கில்லாமல் இருந்த
அவனுடைய ஆடைகள்
சரிசெய்யப்படாமல் இருந்த
அவனுடைய தலைமுடி
யாருக்கும் முகம்பார்த்துப்
பதில்சொல்லாத அவனுடைய முகபாவம்
எதையும் எதையும்
மறக்கமுடியவில்லை என்னால்
நீங்களும் கூட
அந்தத் திருடனைப்பற்றித்
தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா!
ஒரு விடுமுறை நாளில்
அதிலும் ஞாயிற்றுக்கிழமை மதியம்
சமைக்கப்பட்ட உணவின் மணம்
வீடெங்கும் நிறைந்திருக்க
பரிமாறப்பட்ட உணவின் ருசி
நாவின்வழி உள்ளிறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்
கொஞ்சமாய்த் திறக்கப்பட்ட கதவிற்கு வெளியே
சந்தேகத்திற்குரிய நடமாட்டம்
அவ்வளவுதான்
குடியிருப்பு முழுக்கப் பரபரப்பாகிவிட்டது
மூட்டையோடு ஓடப்பார்த்த திருடனைக்
கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம்
குழந்தைகளும் பெண்களும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க
விசாரிக்கிறோம் என்ற பெயரில்
அளவுக்குமீறி அடித்தோம்
காவல் நிலையத்திற்குத் தகவல் சொல்லிவிட்டு
கட்டிவைத்து அடித்தோம்
காவலர்கள் வந்தார்கள்
திருடனை ஒப்படைத்துவிட்டு
மூட்டையைத் திறந்து பார்த்தோம்
அத்தனையும் காலனிகள்
ஒவ்வொரு வீட்டிற்கு வெளியிலும்
அளவுக்குமீறிக் குவிக்கப்பட்ட காலணிகளில்
ஒருசோடி மட்டும்
கவனமாகக் களவாடப்பட்டிருக்கிறது
அந்தத் திருடனின் முகம்பார்த்தேன்
இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்
மெல்ல அவன் காதருகில் சென்று
ஏனென்று கேட்டேன்
”பசிக்குது சார்” என்று சொன்னான்
அதற்குமேல்
அவனைப் பார்க்கமுடியவில்லை என்னால்
அதற்குமேல்
அங்கு நிற்கமுடியவில்லை என்னால்
விலகிச் சென்றவனை
வழிமறித்து நின்றாள் மகள்
எதற்காக அந்த மாமா
செருப்புகளைத் திருடினார்? என்று கேட்டாள்
பசிக்குதாம் என்று சொன்னேன்
அப்ப ஏம்ப்பா சாப்பாடு குடுக்கலை?
என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை
விடவில்லை அவள்
இவரைவிடப் பெரிய திருடனை
என்ன செய்வீங்க? என்றாள்
பெரிய திருடனை
பெரிய திருடனை
பெரும்பாலும் திருடனென்று அழைக்கமாட்டோம்
இந்தச் சமூகமைப்பில்
அவர்களுக்கு மரியாதைக்குரிய பெயர்களிருக்கின்றன
ஒருவேளை அவர்கள் மாட்டிக்கொண்டாலும்
அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு
விமானத்தில் வழியனுப்பி வைப்போம்
சிலநேரங்களில் அவர்களை
அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு
கைதுசெய்யப்படாமல் பார்த்துக் கொள்வோம்
அப்படியே கைது செய்தாலும்
அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு
சிறைச்சாலையில் முதல்வகுப்பில் முறையாகக் கவனிப்போம்
முடிந்தளவு
பெரிய திருடர்களின் மீதுள்ள
வழக்குகளை இழுத்தடிப்போம்
முடிந்தளவு
தண்டனை கொடுக்காமல் பார்த்துக்கொள்வோம்
முடிந்தால்
தலைவராகக்கூடத் தேர்ந்தெடுப்போம்
குற்ற வழக்குகளுக்கும்
மக்கள் பிரதிநிதிகளுக்கும்
ஜனநாயகத்தில் எந்தச் சம்பந்தமுமில்லை
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே
தலையைச் சொரிந்தவளாய்
சின்னத் திருடனை அடிச்ச மாதிரி
பெரிய திருடனை அடிப்பீங்களா இல்லையா?
அதமட்டும் சொல்லுங்க என்றாள்
அவளுக்கான பதிலை
நான்மட்டும் சொல்லமுடியுமா
என் அன்பிற்குரிய தோழர்களே
என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?
3 comments
கவிஞர்.ஜோசப் ராஜாவின் இந்தக் கவிதையை வாசித்துவிட்டுக்
கடைசியில் கேட்கும் கேள்விக்கு கூனிக்குறுகித்தான் தான் போவீர்கள்.
அப்படியென்ன கேள்வி அது?
இப்போதே சொல்லிவிட்டால் திகைப்பும் எதிர்பார்ப்பும் இராது!
நீங்களே வாசியுங்கள்
கேள்வியை
நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளவும் செய்யுங்கள்.
அற்புதக் கவிதையில்
மாற்றத்தை நோக்கிய பயணமும் அதற்கான பாதையும் தெரிகிறது.
உங்களுக்கும் தெரியும்.
வாசியுங்கள்
வசப்படுங்கள்.
வறுமைக்காக திருடிய காலம் மாறி வறுமையை திருடும் காலத்தில்”தான் அண்ணா வாழ்கிறோம். வறுமைக்காக திருடியவனுக்கு தான்”அண்ணா இந்த சட்டமும் தண்டனையும்.வறுமையை திருடுறவனுக்கு,இல்ல.
ஏனா ஆட்சியும் அதிகாரமும்”அவனிடத்தில் அல்லவா உள்ளது. அவனுங்கள”அடிக்க முடியாமலாம் போகாது அண்ணா அதற்கான காலம் விரைவில் .பாப்பாவின் கேள்விக்கான பதில் விரைவில் சேர்ந்தே சொல்வோம் அண்ணா
கதை
மகள்
பசி திருடன்
பண திருடன்
மகளின் கேள்விகள்
பதிலளிக்க முடியாத தந்தை அவரோடு இந்த நாடும் நட்டு மக்களும்?
எப்போது கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு சரியான பதில்?
வாருங்கள் தோழர்களே புரட்சி ஒன்றே மாற்றத்தின் முதல் படி…
புரட்சி ஓங்குக
புரட்சி ஓங்குக
புரட்சி ஓங்குக……